×

பரனூர், ஆத்தூர் உட்பட 29 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு: ஏப்ரல் 1 முதல் அமல்

சென்னை: பரனூர், ஆத்தூர் உட்பட தமிழகம் முழுவதும் 29 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1ம் தேதி முதல் கட்டண உயர்வு அமலாவதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 29 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி அரியலூர் மாவட்டம் மணகெதி, திருச்சி மாவட்டம் கல்லக்குடி, வேலூர் மாவட்டம் வல்லம், திருவண்ணாமலை மாவட்டம் இனம்கரியாந்தல், விழுப்புரம் மாவட்டம் தென்னமாதேவி ஆகிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

அதேபோல் திண்டிவனம்-ஆத்தூர், போகலூர், புதுக்கோட்டை மாவட்டம் பூதக்குடி, சென்னசமுத்திரம், சிட்டம்பட்டி, எட்டூர் வட்டம், கணியூர், கப்பலூர், கீழ்குப்பம், கிருஷ்ணகிரி, லெம்பாலக்குடி, லெட்சுமணப்பட்டி, மாத்தூர், நெல்லூர், நாங்குநேரி, பெரும்புத்தூர், பள்ளிக்கொண்டா, பரனூர், பட்டரை பெரும்புதூர், புதுக்கோட்டை-வாகைகுளம், எஸ்வி புரம், சாலைபுதூர், செண்பகம்பேட்டை, சூரப்பட்டு, திருப்பாச்சேத்தி, வானகரம், வாணியம்பாடி ஆகிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்ந்துள்ளது. அதேபோல் சென்னை புறநகரில் உள்ள பரனூர் மற்றும் ஆத்தூர் சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் உயர்த்தப்படுவதாக நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பரனூர் சுங்கச்சாவடிக்கான மாற்றியமைக்கப்பட்ட பின் கார், ஜீப், வேன் மற்றும் 3 சக்கர வாகனங்கள் ஒரு முறை பயணம் செய்ய ₹70, ஒரே நாளில் சென்று திரும்ப ₹110, மாதாந்திர கட்டணம் ₹2,395. இலகுரக சரக்கு வாகனங்கள் சிற்றுந்துகளுக்கு ஒரு முறை ₹115, ஒரே நாளில் சென்று திரும்ப ₹175, பேருந்து, சரக்கு வாகனங்கள் ஒரு முறை ₹245, ஒரேநாளில் சென்று திரும்ப ₹365 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

3 அச்சுகள் கொண்ட வர்த்தக வாகனங்கள் ஒரு முறைக்கு ₹265, ஒரேநாளில் சென்று திரும்ப ₹400 கட்டணம். 4 சக்கர, 6 சக்கர சரக்கு வாகனங்கள் ஒருமுறைக்கு ₹380, ஒரேநாளில் சென்று திரும்ப ₹570 கட்டணம். கடும் கனரக கட்டுமான வாகனங்கள் 7 மற்றும் கூடுதல் சக்கர வாகனங்கள் ஒருமுறைக்கு ₹465, ஒரேநாளில் சென்று திரும்ப ₹695 கட்டணம். உள்ளூர் கார்கள் ஒரு சுங்கச்சாவடிகயை கடக்க மாதம் ₹340 கட்டணம். செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே காலாவதியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இதனை மூட வேண்டும் என்று லாரி உரிமையாளர் சங்கம் வாகன உரிமையாளர் சங்கம் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இந்நிலையில் பரனூர் சுங்கச்சாவடியில் சுங்கக் கட்டண உயர்வு வாகன ஓட்டிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த கட்டண உயர்வு காரணமாக அத்தியாவசிய பொருட்கள் விலையும் கடுமையாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

The post பரனூர், ஆத்தூர் உட்பட 29 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு: ஏப்ரல் 1 முதல் அமல் appeared first on Dinakaran.

Tags : Paranur ,Attur ,Chennai ,National Highways Authority ,Tamil Nadu ,Paranur, ,Dinakaran ,
× RELATED நெஞ்சை பதற வைக்கும் காட்சிகள் ஆத்தூர்...