×
Saravana Stores

தியாகராஜர் கண்ட தெய்வீக தரிசனம்!

காஞ்சி மாநகரமே அன்று விழாக் கோலம் பூண்டு இருந்தது. கூடி இருந்த கூட்டம் எல்லாம், யாரோ ஒருவரை வரவேற்கக் காத்திருந்தார்கள். வேதியர்கள் கையில் பூர்ண கும்பம், மற்றவர்கள் கையில் மலர் மாலை, பழவகைகள், என மங்கலப் பொருட்கள் பல தாங்கி இருந்தார்கள். கூடி இருந்த கூட்டம் மொத்தமும் தேவகானம் போல ராம நாமத்தை பாராயணம் செய்து கொண்டிருந்தது.

அவர்கள் எதிர்பார்த்த அந்த நேரம் வந்து விட்டதால் ராம நாம ஜெபம் உச்ச ஸ்தாயியை அடைந்தது. ஒரு பல்லக்கு, காஞ்சி மாநகரத்தின் உள்ளே நுழைந்தது. உள்ளே ஞான சூரியன் போல அமர்ந்திருந்தார் சங்கீத மும்மூர்த்திகளில் முதல் மூர்த்தியான தியாகராஜர். நெற்றியில் கோபி சந்தனம், இடையில் கதர் வேஷ்டி, தலையில் ஒரு விதமான தலைப்பாகை. ஒரு கையில் தம்புரா வைத்திருந்தார். மற்றொரு கையால் கூடி இருந்த மக்களுக்கு ஆசி வழங்கிய படி இருந்தார் அவர். அவரை ஊர் முழுவதும் வணங்கி போற்றியது. அனைவருக்கும் ஆசி வழங்கிய தியாக ராஜர் தரையில் இறங்கினார். அவருக்கு புல்லரித்தது. கண்கள் கசிந்தது. குரல் தழுதழுக்க பேச ஆரம்பித்தார்.

‘‘முக்தி தரும் ஏழு தலங்களுள் முதன்மையானதும், ஒரு முறை செய்த புண்ணிய பலனை ஆயிரம் மடங்காக அதிகரித்து தரும் வல்லமை படைத்ததும், தெய்வீகமானதும், ஞானத்திற்கு பெயர் போனதுமான இந்த காஞ்சி மண்ணையும் மக்களையும் வணங்குகிறேன்’’ என்று அவர் சொல்லவும் கூட்டம் ராம நாமம் சொல்லி ஆர்ப்பரித்து கோஷமிட்டு அவரை சேவித்தது. அனைவரையும் அன்புடன் வாழ்த்திய தியாகராஜர் வேகமாக காஞ்சி வரதராஜர் கோவிலை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

கண் குளிர மனம் குளிர வரதனை கண்டு சேவித்தார். ‘‘வராதா நவநீதாஷா’’ என்று ஸமஸ்கிருதத்தில் ஒரு கீர்த்தனையும், ‘‘வரத ராஜ நின்னு கோரி’’ என்ற தெலுங்கு பாமாலையையும் பாடி வரதனுக்கு சூட்டினார். ராம ரஹஸ்ய உபநிஷதத்தில் 96 கோடி முறை ராம நாம தாரக மந்திரத்தை ஜெபித்தால், ஸ்ரீ ராம சந்திர மூர்த்தியை நேரில் தரிசிக்கலாம் என்று சொல்லப் பட்டு இருக்கிறது.

அதனால் ஒரு நாளைக்கு தவறாமல் லட்சத்து இருபத்தி ஐந்தாயிரம் முறை ராம நாம தாரக மந்திரத்தை இருபத்து ஒரு வருடங்களாக விடாமல் ஜெபித்து வருகிறார். அப்படி அவர் ஜெபித்து வந்ததன் எண்ணிக்கை அப்போது 96 கோடியை எட்டும் தருணம். ஆகவே சீக்கிரம் ஸ்ரீ ராமச்சந்திரனின் அற்புத தரிசனம் கிடைக்கும் என்று நம்பி தவமாய் தவம் கிடந்தார் தியாகராஜர். காஞ்சியிலேயே அன்று இரவை கழித்தார். வரத ராஜனின் கோவில் திருக்குளமான அனந்தசரஸ் குளக்கரையின் அருகே தாங்கினார். மறுநாள் விடிகாலையில் எழுந்தவர், குளித்து விட்டு சுத்தபத்தமாக அனந்த சரஸ் குளக்கரையில் அமர்ந்து கொண்டு ராம நாமத்தை ஜெபித்து கொண்டே இருந்தார்.

அப்போது தூரத்தில் யாரோ தெய்வகானம் பாடுவது அவரது காதில் விழுந்தது. அந்த தேவ கானம், அவரது மனதை கவர்ந்து சுண்டி இழுத்தது. எழுந்தார். இசை வந்த திசையில் நடந்தார். அனந்தசரஸ் குளத்தின் மறுகரையில் ஒருவர் அமர்ந்து கொண்டு, நாராயண நாமத்தை தேவ கானம் போல பாடிக்கொண்டிருந்தார். முகத்தில் அசாத்திய தேஜஸ். அவரை கண்டதும் நிச்சயம் இவர் பெரிய மகானாக இருக்க வேண்டும் என்று தியாகைய்யர் தீர்மானித்தார். அவரருகில் சென்றார் சேவித்து பய பக்தியோடு நின்று கொண்டார்.

அவர் வந்ததை உணர்ந்து விட்டார் போலும் அந்த மகான். சட்டென பாட்டை நிறுத்திவிட்டு, மின்னலை போன்ற தெய்வீக நகை ஒன்று செய்தார். அது தியாகய்யரை என்னவோ செய்தது. மயிர்க்கூச் செறிய நின்றார்.‘‘வாராய் மகனே உனக்காக தான் நான் காத்திருக்கிறேன்’’ தியாகய்யர் முன்னே இருந்த மகான் திருவாய் மலர்ந்து அருளினார். அவர் சொன்னது அனைத்தும் தேனை போல தியாகய்யரின் செவியில் புகுந்தது.‘‘அடியேனுக்காகவா?’’ அவரையும் அறியாமல் குழப்பத்தோடு வார்த்தையில் உதிர்த்தது தியாகய்யர் இதழ்கள்.

‘‘ஆம் மகனே!’’ என்று சொன்ன மகான் மீண்டும் ஒரு அழகான நகை பூத்தார். பிறகு இரண்டு ஒலை சுவடுகளை தனது மடியில் இருந்து எடுத்தார். பக்திப் பரவசத்தோடும் பணிவோடும் அதை வாங்கிக் கொண்டார் தியாகய்யர்.அதில் ‘‘ஸ்வரா கர்ணம்’’ என்ற எழுத்துக்கள் முதல் ஒலையில் இருந்தது. அதை கவனித்த தியாகய்யர், மீண்டும் ஒன்றும் புரியாமல் அந்த மகானை பார்த்தார். ‘‘அப்பனே இது சங்கீத சாஸ்திரத்தின் சூட்சுமங்கள் நிறைந்த நூல். தேவ நூல். இதை தேவர்களால் மட்டுமே படிக்கவும் புரிந்து கொள்ளவும் முடியும்…’’ என்று சொன்னவர் மெல்ல நகைத்தார். ‘‘எனில் என்னால் இதை எப்படி சுவாமி புரிந்து கொள்ள முடியும்?’’ சரியான கேள்வியை கேட்டார் தியாகய்யர்.

‘‘உன்னால் தான் புரிந்து கொள்ள முடியும். நீ வால்மீகியினுடைய அவதாரமாயிற்றே. உன்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் வேறு யாராலும் புரிந்து கொள்ள முடியாது…’’  ‘‘என்னது அடியேன் வால்மீகி மாமுனிவரின் அவதாரமா? என்ன சுவாமி விளையாடுகிறார்களா?’’ தன்னையும் அறியாமல் கேட்டார் தியாகய்யர்.‘‘வால்மீகி முனிவருக்கு ராம காவியம் உபதேசித்தது யார்?’’ புன்னகையோடு கேட்டார் அந்த மகான்.

‘‘நாரத மாமுனிவர்!’’ நொடியில் பதில் வந்தது.‘‘உனக்கு இப்போது சங்கீத சாஸ்திரத்தின் நுணுக்கத்தை தெரிவிக்கும் நூலை கொடுத்தது யார்?’’‘‘நீங்கள்’’‘‘என்னை நன்றாக உற்றுப் பார்த்து சொல்’’ என்றபடி சிரித்தார் அந்த மகான். தியாகராஜரும் உற்று பார்த்தார். அவரது கண்களுக்கு அப்போது வரதர் கோவில் குளக்கரையில் அமர்ந்திருந்த மகான் தெரியவில்லை. வேறு ஒருவர் தெரிந்தார். அவர் யார் என்பதை அவரது திருவாயே அவரை அறியாமல் ‘‘நா….ர…. தர்….’’ என்று அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் வார்த்தையே வராமல் உச்சரிக்க தடுமாறி உச்சரித்தது.

அடுத்த கணம் நாரதர் காலில் விழுந்து எழுந்தார் தியாகராஜர். அவரை தொட்டு தூக்கிய நாரத மாமுனிவர், ‘‘சென்ற ஜென்மத்தில் காவியத்தால் ராமன் புகழை பரப்பிய தாங்கள், இப்போது நாதத்தால் ராமன் புகழை பரப்புகிறீர்கள். அதற்கு என்னால் முடிந்த சிறு உதவி’’ என்று கூறியபடி சிரித்தார் நாரதர். மீண்டும் அவரை விழுந்து வணங்கினார் தியாகராஜர்.
‘‘என்ன வரம் வேண்டும் மகனே’’
பரிவாக ஒலித்தது நாரதர் குரல்.

‘‘ராமன் தரிசனத்தை தவிர வேறு ஒன்றும் வேண்டாம்’’ என்று கண் கலங்க சொல்லி சேவித்தார் தியாகராஜர். நாரதரும் அதற்கு ஆசி வழங்கி மறைந்தார். திருவாரூரில் ஒரு நாள். தனது வீட்டின் திண்ணையில் தியாக ராஜர் அமர்ந்து ராம நாமம் ஜெபித்துக்கொண்டே இருந்தார். அப்போது ஒரு முதியவர், ஒரு இளைஞன், ஒரு மூதாட்டி என மூவர் அவரை வந்து வணங்கினார்கள். ‘‘அய்யா எங்களுக்கு இன்று இரவு இங்கு தங்க இடம் வேண்டும்’’ என்று அந்த முதியவர் வெகு வினையத்தோடு கேட்டார். அவர்கள் முகத்தில் இருந்த தெய்வீகக் களையை கண்ட தியாகராஜர், அவர்களை வீட்டிற்கு அழைத்து வந்து உபசரித்தார்.

அவர்களுக்கு உணவளிக்க வீட்டில் ஒன்றுமே இல்லை என்பதை உணர்ந்த தியாகராஜரின் மனைவியான கமலா அம்மையார், முந்தானையில் ஒரு பாத்திரத்தை மறைத்துக் கொண்டு பக்கத்து வீட்டில் அரிசி கடன் வாங்கச்சென்றார். அதை கவனித்த முதியவரோடு விருந்தினராக வந்த மூதாட்டி, ‘‘தேனும் தினை மாவும் தன்னிடம் இருக்கிறது, அதை வைத்து ரொட்டிசெய்து அனைவரும் அருந்தலாம்’’ என்று சொன்னாள். வேறு வழி அறியாத கமலா அம்மையார், அந்த தேனையும் தினை மாவையும் வாங்கி ரொட்டி செய்தார்.

அனைவரும் வயிறார உண்டார்கள். இரவு நேரத்தில் அந்த முதியவர், அவரது மனைவி, அவரது தம்பி என மூவரும் தியாகராஜரின் இல்லத்திலேயே தங்கினார்கள். தியாகராஜரும் அவர்களுக்கு சேவைகள் பல புரிந்தார்.மறுநாள் காலை விடிந்ததும், தியாகராஜரை வணங்கி நன்றி சொல்லிவிட்டு, முதியவரும் அவரது மனைவியும், தம்பியும் காவிரியில் நீராட செல்வதாக சொல்லி, விடை பெற்றுக் கொண்டு தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தார்கள்.

அப்போது தியாகராஜரின் கண்களுக்கு விருந்தினராக வந்த மூவரும், ராமனாகவும், சீதையாகவும், இலக்குவனாகவும் தெரிந்தது. கண்களில் ஆனந்த அருவி பாய ஓடோடி சென்று அவர்களது பாதம் பிடித்து சேவித்தார். ‘‘ராமா நீயா இந்த எளியவன் வீட்டில் தங்கினாய்.? இந்த எளியவனிடம் உனக்கு அளிப்பதற்கு ஒன்றும் இல்லை, என்பதால் நீயே தேனும் தினைமாவும் கொண்டு வந்து, அதை என் மனைவி கையால் சமைத்து உண்டாயா? இந்த எழையின் கையால் பாத சேவை பெற்றாயா? ஆஹா என்னே என் பாக்கியம் என்னே என் பாக்கியம்’’ என்று அழுதார் தொழுதார் விழுந்தார் புரண்டார்.

இப்படி ராம நாம ஜெபத்தின் மகிமையால் தேவ ரிஷி நாரதரையும், ராமனையும் தரிசித்து ஆசி பெற்ற தியாகராஜரை மனதில் கொண்டு ராம நாமத்தை ஜெபித்து, நாத உபாசனை, அதாவது இசையால் இறைவனை வழிபட்டு, இறைவன் அருளைப் பெறுவோம்.

ஜி.மகேஷ்

The post தியாகராஜர் கண்ட தெய்வீக தரிசனம்! appeared first on Dinakaran.

Tags : Thyagaraja ,Kanchi ,Vediyas ,
× RELATED காஞ்சி மண்டல கபடி போட்டி திருமலை பொறியியல் கல்லூரி சாம்பியன்