×

ரச்சின் 46, ருதுராஜ் 46, துபே 51 சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி

சென்னை: குஜராத் டைட்டன்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் 63 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற குஜராத் முதலில் பந்துவீசியது. கேப்டன் ருதுராஜ் , ரச்சின் இணைந்து சிஎஸ்கே இன்னிங்சை தொடங்கினர். எடுத்த எடுப்பிலேயே அதிரடியில் இறங்கிய ரச்சின் பவுண்டரியும் சிக்சருமாக விளாசித் தள்ள, சென்னை ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது.

இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 62 ரன் சேர்த்தது. ரச்சின் 46 ரன் (20 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி ரஷித் சுழலில் விக்கெட் கீப்பர் சாஹாவால் ஸ்டம்பிங் செய்யப்பட்டார். ரகானே 12 ரன் எடுத்து சாய் கிஷோர் பந்துவீச்சில் ஸ்டம்பிங் செய்யப்பட, சென்னை 104 ரன்னுக்கு 2வது விக்கெட்டை இழந்தது. அடுத்து உள்ளே வந்த துபே சிக்சர்களாகத் தூக்கி குஜராத் தரப்பை மிரள வைத்தார். ருதுராஜ் 46 ரன்னில் (36 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்) வெளியேற, துபே – மிட்செல் ஜோடி 4வது விக்கெட்டுக்கு 57 ரன் சேர்த்தது.

அபாரமாக விளையாடிய துபே 51 ரன் (23 பந்து, 2 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசி ரஷித் சுழலில் ஷங்கர் வசம் பிடிபட்டார். கடைசி கட்டத்தில் ரிஸ்வி 14 ரன், மிட்செல் 24 ரன் எடுத்து விக்கெட்டை பறிகொடுக்க, சென்னை 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 206 ரன் குவித்தது. ஜடேஜா 7 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். குஜராத் பந்துவீச்சில் ரஷித் 2, கிஷோர், ஸ்பென்சர், மோகித் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய குஜராத் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன் மட்டுமே எடுத்து, 63 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. சாய் சுதர்சன் அதிகபட்சமாக 37 ரன் (31 பந்து, 3 பவுண்டரி) விளாசினார். சஹா, மில்லர் தலா 21 ரன்களை எடுத்தனர். சென்னை பந்துவீச்சில் சாகர், முஸ்டபீர் ரகுமான், தேஷ்பாண்டே தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். சிஎஸ்கே தொடர்ச்சியாக 2வது வெற்றியை பதிவு செய்தது.

The post ரச்சின் 46, ருதுராஜ் 46, துபே 51 சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி appeared first on Dinakaran.

Tags : RACHIN ,RUDURAJ ,DUBAI ,SUPER KINGS ,Chennai ,IPL League ,Gujarat Titans ,Chennai Super Kings ,Sepakkam ,M. A. ,Chidambaram Stadium, Gujarat ,Rudraj ,Dinakaran ,
× RELATED பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் சென்னை அணி பந்து வீச்சு தேர்வு!