×

திருவள்ளூர் மாவட்டம் விச்சூரில் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த ஊராட்சி மன்ற தலைவர் கைது..!!

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் விச்சூரில் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த ஊராட்சி மன்ற தலைவர் சங்கர் கைது செய்யப்பட்டார். திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் விச்சூர் பகுதியை சேர்ந்தவர் சுமன்(38). இவர் அதிமுகவில் சோழவரம் மேற்கு ஒன்றிய அண்ணா தொழிற்சங்க பேரவையின் செயலாளராக பதவி வகித்து வந்தார். இவரது மனைவி வைதேகி விச்சூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவராகவும், விச்சூர் ஊராட்சி மேலவை பிரதிநிதியாகவும் பதவி வகித்து வருகிறார். மேலும் சுமன் ரியல் எஸ்டேட், செங்கல், சிமெண்ட் விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். இவர், கடந்த ஆண்டு மார்ச் மாதம் விச்சூர், மேட்டுத்தெரு, குடிநீர் தொட்டி அருகே அமர்ந்திருந்தார். அப்போது, அடையாளம் தெரியாத மூன்று பேர் கும்பல், இருசக்கர வாகனத்தில் வந்து, கத்தியால் சுமனை சரமாரியாக வெட்டி தப்பிச் சென்றது.

இதில், படுகாயம் அடைந்த அவரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு மணலி புதுநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின், மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவ பரிசோதனையில் சுமன் இறந்தது தெரிந்தது. இதையடுத்து, உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் சம்பவ இடத்தில் பதிவான சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து குற்றவாளிகளை அடையாளம் காணும் பணிகளில் போலீஸார் ஈடுபட்டனர். இக்கொலை குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் ஊரில் உள்ள பெருமாள் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை விழா தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றதும், அந்த கூட்டத்தில் அதே பகுதியை சேர்ந்த சரண் என்பவருக்கும் கொலை செய்யப்பட்ட சுமனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

பின்னர் இரு தரப்பினரும் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் போலீஸார் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். அதுமட்டுமின்றி சுமனுக்கும் அவரது அண்ணணான விச்சூர் ஊராட்சி மன்ற தலைவர் சங்கருக்கும் இடையே குடும்ப தகராறில் சண்டை ஏற்பட்டு வருவதும் தெரியவந்தது. இருப்பினும் சுமன் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது குடும்ப தகராறில் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே அதிமுக பிரமுகர் சுமன் கொலை வழக்கில் மூன்று பேரை பிடித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். ஊராட்சி மன்ற தலைவர் சங்கர் தலைமறைவாக இருந்தார். கைது செய்யப்பட்ட 3 பேரிடம்ன் போலீசார் நடத்திய விசாரணையில் சங்கர் திட்டம் தீட்டியதாக வாக்குமூலம் அளித்தனர். ஏற்கனவே சங்கரை போலீசார் தேடிவந்த நிலையில், தஞ்சாவூரில் பதுங்கி இருந்த ஊராட்சி மன்ற தலைவருமான சங்கரை தனிப்படை போலீசார் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

The post திருவள்ளூர் மாவட்டம் விச்சூரில் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த ஊராட்சி மன்ற தலைவர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Panchayat council ,president ,Vichuur of ,Tiruvallur district ,Tiruvallur ,Shankar ,Vichur of Tiruvallur district ,Suman ,Cholavaram Vichoor ,Thiruvallur district ,Cholavaram West Union Anna Trade Union Council ,AIADMK ,Vichuur ,
× RELATED தனியார் தொழிற்சாலை மேற்பார்வையாளரை...