×

தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசாருக்கு தபால் வாக்குப்பதிவு படிவம் அனுப்பும் பணி தீவிரம்

 

ஈரோடு, மார்ச் 26: தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 19ம் தேதி நடைபெற உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவுக்காக 2,222 வாக்குச்சாவடிகளில் அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் வாக்குச்சாவடி பணியில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் போலீசார் ஆகியோர் ஈடுபட உள்ளனர். தேர்தல் பணி மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுபவர்களுக்கு தபால் வாக்குச்சீட்டினை பதிவு செய்யும் படிவம் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதில், ஈரோடு மாவட்டத்தில் பணியாற்றும் போலீசார் மற்றும் பிற மாவட்டத்தில் வாக்கு உரிமை உடைய போலீஸ் அதிகாரிகளுக்கு தேர்தல் பிரிவு சார்பில் தபால் வாக்குப்பதிவு செய்யும் படிவம் வழங்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதேபோல், ஆசிரியர்களுக்கு, அரசு அலுவலர்களுக்கும் அத்துறைகளின் சார்பில் தபால் வாக்குச்சீட்டு படிவம் வழங்கப்பட உள்ளது. இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:

ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசார் மற்றும் பிற மாவட்டத்தை சேர்ந்த போலீஸ் அதிகாரிகள் அவர்களது வாக்கினை பதிவு செய்யும் வகையில் தபால் வாக்குப்பதிவு படிவம் வழங்கும் பணி நடந்து வருகிறது. இந்த படிவத்தை பூர்த்தி செய்து வழங்கினால், இவர்களின் வாக்காளர் அடையாள அட்டையை அடங்கிய மாவட்டம், தொகுதி, வார்டு, வாக்காளர் பட்டியலில் உள்ள பாகம் எண் போன்றவற்றை அடிப்படையாக கொண்டு தேர்தல் ஆணையத்தின் மூலம் அங்கு போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர், சின்னங்கள் அடங்கிய பேலட் பேப்பரினை அந்தந்த தொகுதியின் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் வழங்குவார்.

தொடர்ந்து, அதில் அவர்களது வாக்கினை பதிவு செய்து, சம்மந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலருக்கு அனுப்பி வைப்பார்கள். இதேபோல், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த போலீசாருக்கு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக தபால் வாக்கு செலுத்த, பெட்டி வைக்கப்படும். அதில், அவர்கள் அளிக்கும் வாக்கினை தேர்தல் நடத்தும் அலுவலருக்கு அனுப்பி வைக்கப்பட்டு, தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளான்று எண்ணப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்.

The post தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசாருக்கு தபால் வாக்குப்பதிவு படிவம் அனுப்பும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Erode ,Tamil Nadu ,
× RELATED தகிக்கும் கோடை வெயில் பறவைகளுக்கு...