×

கஞ்சா விற்ற 2 பெண்களுக்கு தலா 5 ஆண்டு கடுங்காவல் சிறை: சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை, மார்ச் 26: கண்ணகி நகரில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் 2 பெண்களுக்கு தலா 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து சென்னை போதைப்பொருள் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை கண்ணகி நகரில் பஸ் டிப்போவின் பின்புறம் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு கடந்த 2018 ஜூலை 14ம் தேதி தகவல் வந்தது. இதையடுத்து, அந்த பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போலீசார் அங்கு பாலிதீன் பைகளுடன் நின்று கொண்டிருந்த அம்மு (26), ஜான்சி ராணி (19) ஆகியோரிடம் சோதனை செய்தபோது அவர்களிடம் தலா ஒரு கிலோ 200 கிராம் கஞ்சா இருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அவற்றில் மாதிரியை எடுத்து தடய அறிவியல் சோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

இதையடுத்து, இருவர் மீதும் போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின்கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு போதைப்பொருள் தடுப்பு வழக்குகளுக்கான சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சி.திருமகள் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் கே.ஜே.சரவணன் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டுகள் தடயவியல் அறிக்கை உள்ளிட்ட ஆதாரங்களுடனும், சாட்சிகளுடனும் நிரூபிக்கப்பட்டதால் அம்மு, ஜான்சி ராணி இருவருக்கும் தலா 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், தலா ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது என்று தீர்ப்பளித்தார்.

The post கஞ்சா விற்ற 2 பெண்களுக்கு தலா 5 ஆண்டு கடுங்காவல் சிறை: சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Special Narcotics Control Court ,Kannagi Nagar ,Bus Depot ,Kannagi Nagar, Chennai ,Chennai Special Court ,Dinakaran ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...