×

சென்னை விமான நிலையத்தில் டிஜியாத்ரா திட்டம் அறிமுகம்: வரும் 31ம் தேதி அமல்

சென்னை: சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வரும் 31ம் தேதி முதல், டிஜியாத்ரா திட்டம் துவங்கப்பட உள்ளது. இதன் மூலம் டிஜியாத்ரா திட்டத்துடன் ஒருங்கிணைக்கப்படும் 14வது இந்திய விமான நிலையமாக சென்னை விமான நிலையம் இருக்கும், என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்திய விமான நிலைய ஆணையம் தனது டிஜிட்டல் முயற்சியான டிஜியாத்ரா திட்டத்தின் மூலம் பயணிகளுக்கு சிரமம் இல்லாத பயணத்தை வழங்கி வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் டிஜியாத்ரா திட்டத்துடன் இந்தியாவின் 14வது விமான நிலையமாக சென்னை விமான நிலையம் இணைக்கப்பட உள்ளதாக இந்திய விமானங்கள் ஆணையம் அறிவித்திருந்த நிலையில், இந்த திட்டத்திற்கான டிஜியாத்ரா தளம், வரும் 31ம் தேதி சென்னை விமான நிலையத்தில் துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2022ம் ஆண்டு டிசம்பரில் துவங்கப்பட்ட டிஜியாத்ரா திட்டம் என்பது முழு பயண செயல்முறையையும் காகிதமற்றதாக்குகிறது. அதாவது பயணிகள் விமான நிலையத்திற்குள் நுழைவதில் இருந்து பாதுகாப்பு வழியில் செக் இன் செய்து உள்ளே சென்று விமானத்தில் ஏறும் போதும், பொருட்களை சரிபார்க்கும் போதும் தங்களது முகத்தை காட்டினால் போதும். மேலும் பயணிகள் பாஸ்போர்ட், ஆதார் அட்டை அல்லது பிற ஆவணங்களை அதிகாரிகளிடம் காட்ட வேண்டிய அவசியம் இல்லை. சுருக்கமாகச் சொன்னால் டிஜி யாத்ரா என்பது விமான பயணிகளுக்கான முக அங்கீகார அடிப்படையிலான திட்ட அமைப்பாகும். 4.58 மில்லியன் பயனர்களைக் கொண்ட டிஜியாத்ரா திட்டத்தில் சென்னை விமான நிலையமும் இணைகிறது. இந்த திட்டத்தில் மத்திய விமானம் நிலையங்கள் ஆணையம் மூலம் உருவாக்கப்பட்ட டிஜியாத்ரா மொபைல் ஆப் மூலம் பயணிகள் தங்களது பயணத்தை எளிதாக தொடர முடியும். தற்போது இந்த மொபைல் செயலியை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை ஒரு மைல் கல்லை எட்டியுள்ள நிலையில் அந்த வரிசையில் தற்போது சென்னை விமான நிலையமும் இணைய உள்ளது.

பிப்ரவரி 10ம் தேதி 2024 நிலவரப்படி இந்த திட்டத்தை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை 4.58 மில்லியன். இவர்களில் தோராயமாக 2.12 வில்லியின் பெயர் ஆண்ட்ராய்டு இயங்கு தளங்களிலும் 2.46 மில்லியன் பேர் ஐஓஎஸ் மூலமும் என் திட்டத்தை பயன்படுத்துகின்றனர். ஆண்டின் தொடக்கத்திலேயே இந்த திட்டத்தின் பயனர்களின் எண்ணிக்கை 20.5 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போது டெல்லி, பெங்களூரு மற்றும் வாரணாசி ஆகிய மூன்று விமான நிலையங்களை தவிர நாடு முழுவதும் மேலும் 10 விமான நிலையங்களை உள்ளடக்கும் வகையில் இந்த திட்டம் விரிவு படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் சேர்க்கப்படும் 14வது விமான நிலையம், சென்னை விமான நிலையம் ஆகும்.

The post சென்னை விமான நிலையத்தில் டிஜியாத்ரா திட்டம் அறிமுகம்: வரும் 31ம் தேதி அமல் appeared first on Dinakaran.

Tags : Chennai Airport ,CHENNAI ,Chennai International Airport ,airport ,Digiatra ,India ,Dinakaran ,
× RELATED சேலம் விமானசேவை நேர மாற்றம்