பூந்தமல்லி: போரூரில் பாத்திரத்தில் தலை சிக்கிய நிலையில் இருந்த குழந்தையை, தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டு, தாயிடம் ஒப்படைத்தனர். சென்னை போரூர், மங்களா நகர் பகுதியை சேர்ந்த ஆனந்த்(28). இவருக்கு, கிருத்திகா என்ற மனைவியும், ஒன்றரை வயதில் திருத்திகன் என்ற ஆண் குழந்தையும் உள்ளது.இந்நிலையில், ஆனந்தின் மகன் திருத்திகன் நேற்று முன்தினம் இரவு வீட்டில் ஒரு அலுமினிய பாத்திரத்தினை வைத்து விளையாடிக்கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக பாத்திரத்திற்குள் குழந்தையின் தலை சிக்கிக்கொண்டு, அலறி துடித்தது.
சத்தம்கேட்டு ஓடிவந்த பெற்றோர், பாத்திரத்திற்குள் தலை சிக்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர், குழந்தையின் தலையை பாத்திரத்தில் இருந்து வெளியே எடுக்க முயற்சி செய்தும், அதனை எடுக்க முடியாததால், இதுகுறித்து மதுரவாயல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், பாத்திரத்தில் தலை சிக்கிய நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த குழந்தையை, கொஞ்சுவதுபோல் தாயின் மடியில் வைத்து, லாவகமாக பாத்திரத்தினை கட்டர் மூலம் அறுத்து குழந்தையை பத்திரமாக மீட்டு தாயிடம் ஒப்படைத்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
The post போரூரில் பரபரப்பு; பாத்திரத்தில் தலை சிக்கிய குழந்தை பத்திரமாக மீட்பு: தீயணைப்பு துறையினர் அதிரடி appeared first on Dinakaran.