×

ஐபிஎல் நுழைவுச்சீட்டை காண்பித்து மாநகர பஸ்களில் இலவசமாக பயணிக்கலாம்; போக்குவரத்து துறை தகவல்

சென்னை: சென்னை எம்.ஏ.சிதம்பரம் விளையாட்டு மைதானத்தில் இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியை காணவரும் மக்கள், ஐபிஎல் நுழைவுச் சீட்டை காண்பித்து மாநகர பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என போக்குவரத்து துறை இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக போக்குவரத்து துறை இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: சென்னையில் 2024ம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி எம்.ஏ.சிதம்பரம் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாகவும், பொது போக்குவரத்து பயன்பாட்டினை அதிகரிக்கும் விதமாகவும் சிஎஸ்கே நிர்வாகத்திடம் மாநகர போக்குவரத்து கழகம் உரிய பயண கட்டணம் பெற்றுக்கொண்டதன் அடிப்படையில், பயணிகள் கிரிக்கெட் போட்டிக்கான நுழைவுச் சீட்டு வைத்திருந்தால் அதை நடத்துனரிடம் காண்பித்து மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் (குளிர்சாதன பேருந்து நீங்கலாக) போட்டி நடைபெறும் நேரத்திற்கு 3 மணி நேரத்திற்கு முன்பும், போட்டி முடிந்த பின்னர் 3 மணி நேரத்திற்கும் பேருந்துகளில் இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்படுகிறது.

கடந்த 22ம் தேதி நடைபெற்ற ஐபிஎல் போட்டியின்போது பார்வையாளர்கள் மற்றும் பொதுமக்கள் மாநகர பேருந்துகளை பயன்படுத்தியதால் போக்குவரத்து நெரிசல் கனிசமான அளவில் குறைந்து காணப்பட்டது. ஆகவே, இன்று கிரிக்கெட் போட்டிக்கும் மாநகர பேருந்துகளை இயக்க சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. சென்னையின் பல்வேறு பகுதிகளிலிருந்து பார்வையாளர்கள் மாநகர பேருந்துகளில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான நுழைவுச் சீட்டை காண்பித்து பயணிக்கலாம்.

குறிப்பாக அண்ணா சதுக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து அடையாறு, மந்தைவெளி, கோட்டூர்புரம், திருவான்மியூர், ஈஞ்சம்பாக்கம், கோவளம், கண்ணகிநகர், பெரும்பாக்கம், சோழிங்கநல்லூர், கேளம்பாக்கம், திருப்போரூர் செல்லும் பேருந்துகள், சென்னை பல்கலைக்கழக பேருந்து நிறுத்தத்தில் இருந்து பாரிஸ் கார்னர், கடற்கரை ரயில் நிலையம், ராயபுரம், தண்டையார்பேட்டை, திருவொற்றியூர், மணலி, எண்ணூர், மீஞ்சூர், வள்ளலார் நகர், மூலக்கடை, செங்குன்றம் மற்றும் காரனோடை செல்லும் பேருந்துகள், அண்ணா சாலை ஓமந்தூரார் மருத்துவமனை அருகில் இருந்து ராயப்பேட்டை, மந்தைவெளி, நந்தனம், தி.நகர், சைதாப்பேட்டை வேளச்சேரி, மடிப்பாக்கம், கீழ்கட்டளை, பள்ளிக்கரணை, மேடவாக்கம் , கலைஞர் நகர், கிண்டி, விமான நிலையம், பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம். கிளாம்பாக்கம், கூடுவாஞ்சேரி, வள்ளுவர் கோட்டம், வடபழனி, போரூர், குன்றத்தூர், அய்யப்பன்தாங்கல், பூந்தமல்லி, எழும்பூர், அமைந்தகரை, என்எஸ்கே நகர், கோயம்பேடு, பெரம்பூர், நுங்கம்பாக்கம், அண்ணாநகர், முகப்பேர் மேற்கு, முகப்பேர் கிழக்கு, அம்பத்தூர், ஆவடி, பட்டாபிராம், அயனாவரம், வில்லிவாக்கம் ஆகிய இடங்களுக்கு செல்லும் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஐபிஎல் நுழைவுச்சீட்டை காண்பித்து மாநகர பஸ்களில் இலவசமாக பயணிக்கலாம்; போக்குவரத்து துறை தகவல் appeared first on Dinakaran.

Tags : IPL ,Chennai ,Chennai M. ,Chidambaram Stadium ,Alfie John Varghese ,Department of Transport ,Transport ,Dinakaran ,
× RELATED ஐபிஎல் 2024: லக்னோ அணிக்கு 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சென்னை அணி