×

வாலாஜாபாத் பேருந்து நிலையத்தில் போஸ்டர் ஒட்டும் இடமாக மாறிய குடிநீர் தொட்டி: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

வாலாஜாபாத்: வாலாஜாபாத் பேருந்து நிலையத்தில் பயன்பாட்டில்லாததால் போஸ்டர் ஒட்டும் இடமாக மாறிய குடிநீர் தொட்டியை சீரமைத்து, பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், போஸ்டர் ஒட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த ஊராட்சியில் பேருந்து நிலையம், ரயில் நிலையம், காவல் நிலையம், நூலகம், வங்கிகள், பேரூராட்சி அலுவலகம், கருவூலக அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம், தாலுகா அலுவலகம், ஒன்றிய அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்படுகின்றன. இவை மட்டுமின்றி வாலாஜாபாதை சுற்றிலும் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இக்கிராமங்களில் உள்ளவர்கள், வாலாஜாபாத் வந்துதான் இங்கிருந்து செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு நகர்ப்புற பகுதிகளுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் சென்று வருகின்றனர்.

மேலும், காஞ்சிபுரத்தில் இருந்து கிராமப்புற பகுதிகளுக்கு செல்லும் அரசு பேருந்துகள் வாலாஜாபாத் வந்துதான், பல்வேறு கிராமங்களுக்கு நாள்தோறும் சென்று வருகின்றன. இந்த கிராமப்புற பேருந்துகளுக்காக காத்திருக்கும் முதியவர்கள், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் என நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் பேருந்து நிலையத்தில் எப்பொழுதுமே காத்திருப்பர். இந்த பேருந்து நிலையத்தின் அடிப்படை வசதிகளான கழிவறை, குடிநீர் உள்ளிடவை போதுமான அளவில் இல்லாததால் நாள்தோறும் பேருந்து பயணிகளும், கிராம மக்களும் சிரமப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து பயணிகள் கூறுகையில், ‘வாலாஜாபாத் சுற்றிலும் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் உள்ளவர்கள் வாலாஜாபாத் வந்துதான் இங்கிருந்து பல்வேறு நகர்புற பகுதிகளுக்கு நாள்தோறும் சென்று வருகின்றோம். பேருந்துக்காக வாலாஜாபாத் பேருந்து நிலையத்தில் காத்திருக்கும் மக்களுக்கு, அடிப்படை வசதிகளான கழிவறை, குடிநீர் உள்ளிட்டவைகள் இல்லை. மேலும், பேருந்து நிலையத்தின் மையப் பகுதியில் உள்ள குடிநீர் தொட்டி முறையாக பராமரிக்கப்படாததால், போஸ்டர்கள் ஒட்டும் இடமாக மாறியுள்ளது.

தற்போது, கோடை காலம் துவங்கியுள்ளநிலையில் அரசியல் கட்சி பிரமுகர்கள் ஆங்காங்கே தண்ணீர் பந்தல் திறப்பது வழக்கம். நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டநிலையில், அரசியல் கட்சி பிரமுகர்கள் தண்ணீர் பந்தல் திறப்பதை கைவிட்டனர். இதுபோன்ற சூழ்நிலையில் பேருந்தில் காத்திருக்கும் பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் இங்குள்ள குடிநீர் தொட்டியை சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால் பயனுள்ளதாக இருக்கும். எனவே, வாலாஜாபாத் பேருந்து நிலையத்தில் பயன்பாடின்றி கிடைக்கும் குடிநீர் தொட்டியை சீரமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post வாலாஜாபாத் பேருந்து நிலையத்தில் போஸ்டர் ஒட்டும் இடமாக மாறிய குடிநீர் தொட்டி: நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Wallajahabad ,Walajahabad ,station ,
× RELATED வாலாஜாபாத் வடக்கு ஒன்றிய பகுதிகளில்...