×

பெரம்பூரில்தான் இந்த நிலை… இப்தார் நோன்புக்கு வந்த இஸ்லாமிய பெண்களை பாஜவில் சேரும்படி வற்புறுத்தியதால் பரபரப்பு: வீட்டை முற்றுகையிட்டதால் கடும் வாக்குவாதம்

பெரம்பூர்: பெரம்பூரில் இப்தார் நோன்புக்கு வந்த பெண்களை பாஜவில் சேரும்படி கூறி பெண் பாஜ நிர்வாகி விண்ணப்பம் வழங்கினார். இதனால் அவரது வீட்டை இஸ்லாமிய பெண்களின் கணவர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை பெரம்பூர் குருசாமி தெருவை சேர்ந்தவர் இர்ஷத் பேகம் (56). இவர் பாஜவில் சிறுபான்மை பிரிவு மாநில செயலாளராக உள்ளார். ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இவரது வீட்டில் கடந்த 2 வருடங்களாக இப்தார் நோன்பு நிகழ்ச்சி நடத்தி வருகிறார். இதில் அப்பகுதியை சேர்ந்த இஸ்லாமிய பெண்கள் அதிகளவில் கலந்து கொள்கின்றனர். கடந்த 15, 16ம் தேதிகளில் நடந்த நிகழ்ச்சியில் 150 பெண்கள் கலந்து கொண்டனர். அப்போது இர்ஷத் பேகம், ‘தான் பாஜவில் மாநில செயலாளராக பதவி வகித்து வருகிறேன். எங்களது கட்சியில் நீங்கள் சேர்ந்து கொள்ளலாம். சேர்ந்தால் உறுப்பினர் எண் தரப்படும்’ என கூறியுள்ளார். அதோடு, கட்சியில் சேருவதற்கான விண்ணப்பங்களையும் கொடுத்து அனுப்பியுள்ளார்.

அதன் பிறகு கடந்த 18ம் தேதி 8 பெண்கள், இவரது வீட்டிற்கு வந்து, ‘எங்களது கணவர்கள் பாஜவில் சேர கூடாது என்று கூறுகின்றனர்’ என கூறி விண்ணப்பங்களை திருப்பி கொடுத்தனர். அதற்கு இர்ஷத் பேகம், ‘நீங்கள் ஏற்கனவே உறுப்பினர்களாகி விட்டீர்கள். அந்த எண் டெல்லி வரைக்கும் சென்று விட்டது’ என்று கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெண்கள், ‘எங்களது உறுப்பினர் எண்களை அழித்து விடுங்கள்’ என்று கூறியுள்ளனர். இதனால் இரு தரப்பினருக்கம் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதையறிந்த இஸ்லாமிய பெண்களின் கணவர்கள், இர்ஷத் பேகம் வீட்டுக்கு வந்தனர். அவர்கள் வீட்டின் வெளியே நின்று கொண்டு, ‘இதுபோன்று செய்ய கூடாது’ என கடும் கூச்சலிட்டுள்ளனர். இதனால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இதுபற்றிய தகவலை பாஜ சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிமை தொடர்பு கொண்டு இர்ஷத் பேகம் கூறியுள்ளார். உடனே அவர், சம்பவ இடத்துக்கு விரைந்தார். இர்ஷத் பேகத்தை அழைத்து கொண்டு திருவிக நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதில், இர்ஷத் பேகத்தை பெண்கள் தாக்கி விட்டதாக கூறியுள்ளனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நோன்புக்கு வந்த பெண்களிடம் கட்சி ரீதியாக பேசி இஸ்லாமிய பெண்களை பாஜவில் சேருமாறு வற்புறுத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post பெரம்பூரில்தான் இந்த நிலை… இப்தார் நோன்புக்கு வந்த இஸ்லாமிய பெண்களை பாஜவில் சேரும்படி வற்புறுத்தியதால் பரபரப்பு: வீட்டை முற்றுகையிட்டதால் கடும் வாக்குவாதம் appeared first on Dinakaran.

Tags : Perampur ,Iftar fast ,Bajaj ,Perambur ,BJP ,Irshad Begum ,Gurusamy Street, Perambur, Chennai ,
× RELATED 6 சரித்திர பதிவேடு ரவுடிகள் கைது