×
Saravana Stores

புத்திர தோஷம் நீக்கும் திருத்தலம்

ஈசனால் எரிக்கப்பட்ட மன்மதன், மீண்டும் உயிர் பெற்று எழவேண்டி ரதிதேவி தவம் செய்த தலமே பூவாளூர். மன்மதபுரம் என்ற பெயரும் இத்தலத்திற்கு உண்டு. பூக்கள் நிறைந்த காட்டுப் பகுதியாக இருந்ததால் பூவாளியூர் என்றும், பின்னர் அதுவும் மருவி, பூவாளூர் என்றானது. இங்குள்ள ஆலயத்தில், திருமூலநாத சுவாமியாக இறைவனும், குங்கும சௌந்தரியாக அம்பாளும் அருள்பாலிக்கின்றனர். ஆலயம் கிழக்குத் திசை நோக்கி அமைந்துள்ளது. முன்முகப்பைக் கடந்ததும், அகன்ற மண்டபத்தில் கொடிமர விநாயகரைத் தரிசிக்கலாம். கலை மண்டபத்தை அடுத்துள்ள மகாமண்டப நுழைவாயிலில் துவார பாலகர்கள் காவலிருக்கிறார்கள். அடுத்து, அர்த்த மண்டபமும் கருவறையும் உள்ளன. கருவறையில் இறைவன் லிங்கத் திருமேனியில் அருள்பாலிக்கிறார்.

இறைவன் சந்நதியை அடுத்து, அன்னை குங்கும சௌந்தரி தனிக்கோயில் கொண்டிருக்கிறாள். அன்னையின் சந்நதியில் முன்புறம் கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியன ஒரு வரிசையில் உள்ளன. அன்னை ஆலயத்தில், மகா மண்டப நுழைவாயிலில் துவார பாலகிகளின் சுதை வடிவமும், அடுத்து அர்த்த மண்டபமும் கருவறையும் உள்ளன. கருவறையில் அன்னை நான்கு கரங்களுடன் கிழக்குத் திசை நோக்கி அருள்பாலிக்கிறாள்.

இங்கு இறைவன் திருமணக் கோலத்தில் இருப்பதால் இறைவியின் சந்நதி இறைவனின் இடதுபுறம் அமைந்துள்ளதாகக் கூறுகின்றனர். திருமணத்திற்காகக் காத்திருக்கும் கன்னியர் குங்கும சௌந்தரிக்கு குங்கும அர்ச்சனை செய்து, அந்த குங்குமத்தை தினசரி நெற்றியில் இட்டுக் கொண்டால் விரைவில் கெட்டி மேளம் கொட்டும்.

இறைவனின் தேவகோட்டத்தின் தென்புறம் நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, மேல்புறம் அண்ணாமலையார், தெற்கில் சிவதுர்க்கை ஆகியோர் சந்நதி கொண்டிருக்கின்றனர். இங்கு எண் கரங்களோடு துர்க்கை அருள்கிறாள். மேற்குத் திருச்சுற்றில் வெள்ளை வாரண விநாயகர் தூய வெள்ளை நிறத்தில் காட்சி தருவது நம்மை சிலிர்க்க வைக்கிறது. இவருக்கு நெய்தீபம் ஏற்றி அறுகம்புல் அர்ச்சனை செய்தால், புத்திர தோஷ நிவர்த்தி ஏற்படும். அடுத்துள்ள சந்நதியில் ஆறுமுகப் பெருமான் வள்ளி தெய்வானையுடன் அழகுத் திருக்கோலம் காட்டுகிறார். அருணகிரிநாதரால் போற்றிப் பாடப்பெற்ற பெருமான் இவர். அடுத்து தண்டாயுதபாணி சந்நதியும் அடுத்து மகாலட்சுமி, நாகர், ஜேஷ்டாதேவி ஆகியோர் திருமேனிகளையும் காணலாம். கிழக்குச் சுற்றில் சூரியன், சந்திரன், அக்னி ஆகியோரை தரிசிக்கலாம். ஆலயத்தின் தலவிருட்சம், வில்வம்.

இறைவியின் அர்த்த மண்டப இடதுபக்க கருங்கல் சுவரில் நீண்ட நாகத்தின் உருவம் காணப்படுகிறது. நாகதோஷம் உள்ளவர்கள் இந்த நாகரை வழிபட்டு பயன்பெறுகின்றனர். பூவாளூர் பித்ரு தோஷ நிவர்த்தி தலமாகவும் விளங்குகிறது. ஆலயத்தின் வெளியே வலதுபுறம் ஓடும் பல்குனி ஆற்றின் கரையில் தனிக் கோயில் கொண்டு தென் கயா பல்குனி ருத்ர சித்தர் அமர்ந்துள்ளார். இவருடைய யோக ஜோதி இத்தலத்தில் எப்போதும் இருந்து கொண்டிருப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர்.

மூதாதையர்களுக்கு உரிய திதிகளில் இங்குள்ள பல்குனி நதிக் கரையில் தர்ப்பணங்கள், சிரார்த்த, ஹோம வழிபாடுகள் செய்து அன்னதானம், வஸ்திர தானம் செய்தால் பித்ரு காவல் தேவ மூர்த்திகள் ஏற்றுக்கொண்டு தோஷ நிவர்த்தி ஏற்படுகிறது என்கிறார்கள்.

திருச்சி – லால்குடி நெடுஞ்சாலையில் லால்குடியிலிருந்து 3 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

The post புத்திர தோஷம் நீக்கும் திருத்தலம் appeared first on Dinakaran.

Tags : Poovalur ,Rathi Devi ,Cupid ,Eason ,Manmadhapuram ,Poovaliyur ,Maruvi ,
× RELATED பூவாளூர் பேரூராட்சியில் குப்பை...