×

தூத்துக்குடியில் மீனவர்கள் திடீர் மறியல்

*அமைச்சர் கீதாஜீவன், கனிமொழி எம்பி பேச்சுவார்த்தைக்கு பின் வாபஸ்

தூத்துக்குடி : தூத்துக்குடியில் கைது செய்த விசைப்படகு உரிமையாளர் சங்க செயலாளர் போஸ்கோவை விடுவிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் முன்பு மீனவர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து கனிமொழி எம்பி, அமைச்சர் கீதாஜீவன் உள்ளிட்டோர் சங்க நிர்வாகிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர் மறியல் கைவிடப்பட்டது.

தூத்துக்குடி மாவட்ட கடலோர பகுதிகளில் கேரளாவை சேர்ந்த விசைப்படகுகள் இரவு நேரங்களில் இழுவலைகளை பயன்படுத்தி மீன்பிடித்து வருவதாகவும், மீன்பிடி தடைக்காலத்திலும் கேரளா மீனவர்கள் தூத்துக்குடி கடலில் மீன்பிடிப்பதால், தூத்துக்குடி மாவட்ட விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருவதாக கூறி விசைப்படகு மீனவர்கள் கடந்த 19-ந் தேதி முதல் கடலுக்கு செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 11 விசைப்படகுகளில் கடலுக்கு சென்ற மீனவர்கள், தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சுமார் 26 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த கேரளா மற்றும் குளச்சலை சேர்ந்த மீனவர்கள் 86 பேரையும், 6 படகையும் சிறைபிடித்தனர்.

இதைத்தொடர்ந்து சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளையும் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்துக்கு கொண்டு வந்தனர். அதன்பிறகு மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர். ஆனால் படகுகளை விடுவிக்காமல், அதன் சாவிகளை மீனவர்கள் வைத்திருந்தனர். நேற்று 6-வது நாளாக தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். நேற்று காலையில் விசைப்படகு உரிமையாளர்கள் சங்க அலுவலகத்தில் திரண்டு அடுத்த கட்ட பேச்சுவார்த்தை தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.

பின்னர் சங்க அலுவலகத்தில் இருந்து புறப்பட்டனர். அப்போது அங்கு வந்த போலீசார் திடீரென சங்க செயலாளர் போஸ்கோ என்பவரை கைது செய்து அழைத்து சென்றனர். இதனை அறிந்த விசைப்படகு உரிமையாளர்கள், தொழிலாளர்கள் திரண்டு வந்தனர். அவர்கள் போஸ்கோவை விடுவிக்க வலியுறுத்தி தெற்கு பீச் ரோட்டில் மீன்பிடி துறைமுகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த தூத்துக்குடி நகர ஏஎஸ்பி கேல்கர் சுப்ரமண்ய பால்சந்திரா மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்படாததால், தொடர்ந்து சாலை மறியல் நீடித்தது. இதனால் மீன்பிடி துறைமுக வளாகம், பீச் ரோடு பகுதியில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர்.

பின்னர் சாலை மறியலில் ஈடுபட்ட மீனவர்களுடன் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது தூத்துக்குடி மீனவர்கள், நாங்கள் கடலுக்கு செல்லும் போதே கேரளா மீனவர்கள் தூத்துக்குடி கடல் பகுதியில் மீன்பிடிக்கின்றனர். மீன்பிடி தடைக்காலங்களில் முழுமையாக வந்து மீன்பிடித்து செல்கின்றனர். இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. ஆகையால் எங்களுக்கும் தங்குகடல் மீன்பிடிக்க அனுமதி அளிக்க வேண்டும். சங்க செயலாளர் போஸ்கோவை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அப்போது, அமைச்சர் கீதாஜீவன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். அதன் பேரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

இதையடுத்து விசைப்படகு மீனவர் சங்க பிரதிநிதிகள் தூத்துக்குடி எம்பி கனிமொழி அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட்டனர். அங்கு கனிமொழி எம்பி தலைமையில், அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் தூத்துக்குடி எஸ்பி பாலாஜி சரவணன் மற்றும் அதிகாரிகள், மீனவர் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதில் மீனவர்கள் படகுகளை விடுவிக்க ஒப்புக்கொண்டனர். இதனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்துக்கு வந்த மீனவர்கள், சிறைபிடித்த படகுகளின் சாவிகளை மீன்வளத்துறை அதிகாரிகளிடம் நேற்று மாலை ஒப்படைத்தனர். இதனை தொடர்ந்து கேரளா, குளச்சல் மீனவர்கள் ஊருக்கு செல்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

The post தூத்துக்குடியில் மீனவர்கள் திடீர் மறியல் appeared first on Dinakaran.

Tags : Tuticorin ,Minister ,Geethajeevan ,Kanimozhi ,Thoothukudi ,Barge Owners Association ,Bosco ,
× RELATED தூத்துக்குடியில் கனிமொழியை ஆதரித்து...