அண்ணாநகர், மார்ச் 25: பங்குனி உத்திரத்தை முன்னிட்டு கோயம்பேடு பூ மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலை உயர்ந்து காணப்பட்டது. பங்குனி உத்திரத்தை முன்னிட்டு கோயம்பேடு பூ மார்க்கெட்டிற்கு நேற்று முன்தினம் இரவு முதலே பூக்கள் வரத்து அதிகரிக்க தொடங்கியது. விசேஷ நாள் என்பதால் பூக்களின் தேவை அதிகமாக இருக்கும் என்பதை அறிந்த வியாபாரிகள் அதிகளவிலான பூக்களை கொள்முதல் செய்திருந்தனர்.
தொடர்ந்து, நேற்று அதிகாலையில் நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிறு வியாபாரிகள் பூக்களை வாங்கிச் செல்ல ஆர்வத்துடன் குவிந்தனர். மல்லி, முல்லை, ஜாதிமல்லி, கனகாம்பரம், அரளி, சாமந்தி உள்ளிட்ட பூ வகைகளை ஆர்வத்துடன் வாங்கினர். வழக்கமாக விற்கப்படும் விலையைக் காட்டிலும் நேற்றைய தினம் பூக்களின் விலை சற்று கூடுதலாக இருந்தது. ஒரு கிலோ மல்லி மற்றும் ஐஸ் மல்லி ரூ.600, காட்டு மல்லி, முல்லை, ஜாதி மல்லி ரூ.500, கனகாம்பரம் ரூ.700, அரளிப் பூ ரூ.300, சாமந்தி ரூ.350, சம்பங்கி ரூ.250, சாக்லேட் ரோஸ் ரூ.100, பன்னீர் ரோஸ் ரூ.80 என விற்பனை செய்யப்பட்டது.
இதுகுறித்து கோயம்பேடு பூ மார்க்கெட் துணைத் தலைவர் முத்துராஜ் கூறுகையில், ‘‘பங்குனி உத்திரம் முன்னிட்டு அனைத்து பூக்களின் விலை சற்று உயர்ந்தது. அதேநேரத்தில் வியாபாரம் நல்ல முறையில் விறுவிறுப்பாக நடந்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அதேபோல், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து கோயம்பேடு பூ மார்க்கெட்டிற்கு விவசாயிகள் கொண்டு வந்த பூக்களுக்கு நல்ல விலை கிடைத்ததால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர். தொடர்ந்து, வரும் நாட்களில் பூக்களின் விலை படிப்படியாக குறையும்’’, என்றார்.
The post பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பூக்கள் விலை உயர்வு: கனகாம்பரம் கிலோ ரூ.700க்கு விற்பனை appeared first on Dinakaran.