×

நோன்பு கஞ்சி குடித்தபோது பல்செட்டை விழுங்கிய 93 வயது மூதாட்டி: உணவுகுழாயில் இருந்து பல் செட் அகற்றம்

சென்னை : நோன்புக் கஞ்சி குடித்தபோது வாயிலிருந்த பல்செட்டை 93 வயது மூதாட்டி விழுங்கினார். அவரது உணவுக் குழாயிலிருந்து பல் செட்டை அகற்றி சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை சாதனை படைத்துள்ளது.
ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் தொடர்ந்து நோன்பு இருந்து வருகின்றனர். அதன்படி ரமலான் நோன்பை கடைப்பிடித்த 93 வயதுடைய சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ரஷியா பேகம் என்பவர், கடந்த புதன் கிழமை (மார்ச் 20) மாலை 6.30 மணிக்கு நோன்பை முடித்து, நோன்புக் கஞ்சி அருந்தி உள்ளார். அப்போது அவர் அணிந்திருந்த பல் செட் கழன்றது. அதை நோன்பு கஞ்சியுடன் விழுங்கிவிட்டார். அது உணவுக் குழாயில் சென்று அடைத்துக் கொண்டது. கொக்கி போன்ற வடிவமைப்பைக் கொண்ட பல்செட், உணவுக் குழாயில் சிக்கிக் கொண்டதால் அவர் வலியால் துடித்துள்ளார். அவரது குடும்பத்தினர் அடுத்தடுத்து 4 தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அந்த மருத்துவமனைகளில் பல்செட்டை மீட்டெடுப்பதற்கான சரியான வசதிகள் கிடைக்கவில்லை. இதனால் மூச்சு விட முடியாமலும், எச்சில் விழுங்க முடியாமலும் தொடர்ந்து அந்த மூதாட்டி தவித்துக் கொண்டிருந்துள்ளார்.

இதையடுத்து தனியார் மருத்துவமனையில் இருந்து விடியற்காலை 2.30 மணிக்கு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே, குறைவான ரத்த அணுக்கள், ரத்த கொதிப்பு போன்ற இணை நோயினால் பாதிக்கப்பட்டவரை, உள் நோயாளியாக மருத்துவக் குழுவினர் அனுமதித்தனர். பல்வேறு உடல் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர். 9 செமீ x 3 செமீ அளவு கொண்ட பல் செட் காற்றுப்பாதைக்கும் உணவுக் குழாய்க்கும் இடையில் அடைத்துகொண்டு இருந்துள்ளது. உணவுக் குழாயில் சிக்கிக் கொண்டிருந்த பல் செட்டை, உள் நோக்கி கருவி மூலம் 4 மணி நேரம் சவாலான அறுவை சிகிச்சை செய்து, போர்செப்ஸ் மூலம் பல்செட்டை மருத்துவக் குழுவினர் எடுத்துள்ளனர். மயக்க மருந்து நிபுணர்கள் அவரை ஆறு மணி நேரம் வென்டிலேட்டர் உதவியுடன் வைத்திருந்தனர். பின்னர் படிப்படியாக வென்டிலேட்டர் அகற்றப்பட்டது.
பல்செட்டை அகற்றுவதில் தாமதம் ஏற்பட்டிருந்தால், அது மூச்சுக்குழாய் அழற்சியை ஏற்படுத்தியிருக்கலாம் அல்லது உணவுக்குழாயில் துளையிட்டிருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். மருத்துவர்களின் இந்த அறுவை சிகிச்சையால், 93 வயதான மூதாட்டி குணம் அடைந்து வீடு திரும்பினார்.

 

The post நோன்பு கஞ்சி குடித்தபோது பல்செட்டை விழுங்கிய 93 வயது மூதாட்டி: உணவுகுழாயில் இருந்து பல் செட் அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Nonbook ,Chennai Rajiv Gandhi Government Hospital ,Muslims ,
× RELATED சென்னை ராஜீவ் காந்தி அரசு...