பாலக்காடு, மார்ச் 24: பாலக்காடு மாவட்டம் சித்தூர் தேவாங்கபுரம் சௌடாம்பிகை அம்மன் கோவில் பொங்கல் திருவிழாவில் பக்தர்கள் பூவோடு ஏந்தி தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தி வழிப்பட்டனர். சித்தூர் தேவாங்கபுரத்தில் பிரசித்தி பெற்ற சௌடாம்பிகை அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் மூன்று ஆண்டுக்கொருமுறை பொங்கல் திருவிழா நடைபெற்று வருவது வழக்கம். நடப்பாண்டும் இக்கோவிலில் பொங்கல் திருவிழா கடந்த 19 ம் தேதி கணபதிஹோமத்துடன் துவங்கியது.
அன்றைய தினம் திருவிழாக் கொடியேற்றம், சித்தூர் சோகநாஷினி நதியிலிருந்து சௌடாம்பிகை மற்றும் மாரியம்மன் கரங்கள் பம்பை,உடுக்கு, செண்டைவாத்யங்களுடன் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து சௌடாம்பிகை அம்மனுக்கு பொங்கல் படைத்தும், மாவிளக்கு எடுத்தும் பக்தர்கள் வழிப்பட்டனர். தொடர்ந்து மறுநாள் மாரியம்மனுக்கும் பொங்கல் படைத்தும், மாவிளக்குகள் எடுத்தும் பக்திபரவசத்துடன் வழிப்பாடுகள் செலுத்தி அம்மனை தரிசித்தனர்.
வெள்ளிக்கிழமை மாலை பூவோடு வீதியுலா நடைபெற்றன. இதில் திரளாக பக்தர்கள் பக்திபரவசத்துடன் பங்கேற்றிருந்தனர். நேற்று காலை 5 மணிக்கு பக்தர்கள் குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தி வழிபட்டனர். கடந்த ஐந்து நாட்களாக அம்மன் கோவிலில் விஷேச பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
The post சாலையோரங்களில் பூத்து குலுங்கும் ஜெகரண்டா மலர் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு appeared first on Dinakaran.