×

இடைக்கால ஜீவனாம்ச உத்தரவு மீது மேல் முறையீடு செய்ய முடியாது: உயர் நீதிமன்றம் விளக்கம்

 

சென்னை, மார்ச் 24: குடும்ப நல நீதிமன்றங்கள் வழங்கும் இடைக்கால ஜீவனாம்ச உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்ய முடியாது என்றும், சீராய்வு மனுதான் செய்ய முடியும் என்றும் உயர் நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது. குடும்பநல நீதிமன்றங்களில் விவாகரத்து வழக்குகள் தொடரப்படும்போது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு இடைக்கால ஜீவனாம்சம் வழங்குமாறு கணவருக்கு நீதிமன்றங்கள் உத்தரவிடும். இந்த தொகை குறைவாக உள்ளது என்று மனைவியும், தொகை அதிகமாக உள்ளது என்று கணவரும் உயர் நீதிமன்றங்களில் மேல் முறையீடு செய்து வருகிறார்கள்.

இதே போன்று சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நெப்போலியன் என்பவர் தனது மனைவியிடமிருந்து விவாகரத்து கோரி குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். விசாரணையின்போது மனைவிக்கு மாதம்தோறும் இடைக்கால ஜீவனாம்சம் வழங்க குடும்பநல நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து கணவர் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சுந்தர், கோவிந்தராஜன் திலகவதி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

மனைவி சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஜோதி, வழக்கறிஞர் ஜி.மோகனகிருஷ்ணன் ஆஜராகி மேல் முறையீடு மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்று வாதிட்டனர். இதை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் உள்ள சட்ட பிரச்னைகள் குறித்து விரிவான உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும். அதனால், நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக வழக்கறிஞர் சரத் சந்திரன் நியமிக்கப்படுகிறார் என்று உத்தரவிட்டனர்.

இதையடுத்து, சுமார் 20 நாட்கள் நடந்த நீண்ட வாதங்கள், ஆய்வுக்கு பிறகு நீதிபதிகள் அளித்த உத்தரவு வருமாறு:இந்து திருமண சட்டத்தின்கீழ் குடும்பநல நீதிமன்றங்களில் தொடரப்படும் வழக்குகளில் ஜீவனாம்சம் தருமாறு இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் ேமல்முறையீடு செய்யப்படுகிறது. மனுதாரர் வழக்குடன் பல மேல்முறையீடு வழக்குகளும் பட்டியலிடப்பட்டுள்ளன.

திருமண சட்டத்தில் இடைக்கால உத்தரவின்மீது மேல் முறையீடு செய்ய வாய்ப்பிருந்த நிலையில், திருமண சட்டம் 1976ல் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதன் அடிப்படையில் திருமண சட்ட பிரிவு 28ன்படி குடும்ப நல நீதிமன்றங்களில் பிறப்பிக்கப்படும் இடைக்கால ஜீவனாம்ச உத்தரவின்மீது மேல் முறையீடு செய்ய முடியாது. இடைக்கால உத்தரவு என்பது குறிப்பிட்ட காலத்திற்கானது மட்டுமே, அது இறுதி தீர்ப்பாகாது. சீராய்வு மனுதான் தாக்கல் செய்ய முடியும்.

எனவே, இந்த ேமல்முறையீட்டு வழக்குகள் தள்ளுபடி செய்யப்படுகிறது. இடைக்கால ஜீவனாம்ச உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்ற தனி நீதிபதியிடம்தான் சீராய்வு மனு தாக்கல் செய்ய முடியும். இந்த மேல்முறையீடு வழக்குகளை சீராய்வு மனுவாக தாக்கல் செய்ய விரும்பினால் உயர் நீதிமன்ற பதிவகம் அவற்றை சீராய்வு மனுவாக பட்டியலிடலாம். இவ்வாறு உத்தரவில் கூறியுள்ளனர்.

The post இடைக்கால ஜீவனாம்ச உத்தரவு மீது மேல் முறையீடு செய்ய முடியாது: உயர் நீதிமன்றம் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,High Court ,Family Welfare Courts ,Dinakaran ,
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...