×

உரிய ஆவணமில்லாத ரூ.61.23 லட்சம் பறிமுதல்

 

சென்னை, மார்ச் 24: பூந்தமல்லி அருகே புதுசத்திரம் பிரதான சாலையில் நேற்று முன்தினம் இரவு நிலை கண்காணிப்பு குழு அலுவலர் முரளி தலைமையில் பறக்கும்படை போலீசார், வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில், ரூ.57 லட்சம் இருந்துள்ளது. விசாரணையில், திருத்தணியை சேர்ந்த ரமேஷ் என்பவர், உரிய ஆவணம் இல்லாமல் பணத்தை எடுத்துச் சென்றது தெரிந்தது. அதனால், அந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பம் சந்திப்பில் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது, அந்த வழியாக வந்த பாலவாக்கத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் காரை சோதனை செய்ததில் உரிய ஆவணங்களின்றி இருந்த ரூ.73 ஆயிரத்து 450 பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தம் ரூ.57 லட்சத்து 73 ஆயிரத்தை பூந்தமல்லி தாலுகா அலுவலகத்தில் மாவட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கற்பகம், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலையில் அரசு கருவூலத்தில் செலுத்தினர்.

பெரம்பூர்: கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாதவரம் நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு தேர்தல் பறக்கும் படை அதிகாரி தேவதாஸ், எஸ்ஐ கீதா உள்ளிட்டோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை மடக்கி சோதனை செய்தபோது, அதில் ரூ.57 ஆயிரம் இருந்தது. வாகனத்தை ஒட்டி வந்த மாதவரம் ரோஜா நகரை சேர்ந்த கோடீஸ்வர ராவ் (55) என்பவரிடம் விசாரணை நடத்திய போது, அந்த பணத்திற்கான உரிய ஆவணம் இல்லை.

இதனால், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்து, புரசைவாக்கத்தில் உள்ள கருவூலத்தில் ஒப்படைத்தனர். மற்றொரு சம்பவம்: கீழ்ப்பாக்கம் கார்டன் சாலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி கார்த்திகேயன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, எழும்பூரில் இருந்து வந்த கார் ஒன்றை மடக்கி சோதனை செய்தனர். அதில் உரிய ஆவணமின்றி எடுத்துவரப்பட்ட ரூ.1 லட்சம் இருந்தது.

அதை கொண்டு வந்த அம்பத்தூர் அத்திப்பட்டு பகுதியை சேர்ந்த அசன் முகமது (38) என்பவரிடம் விசாரித்தபோது, அவரது மனைவி 8 மாத கர்ப்பிணியாக உள்ளதால் மருத்துவமனைக்கு செல்வதற்காக பணத்தை கொண்டு வந்தது தெரியவந்தது. ஆனால், அதற்கான ஆவணம் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்து, பெரம்பூர் கிளை கருவூலத்தில் ஒப்படைத்தனர். கொளத்தூர் தில்லை நகர் முதல் தெருவில் நேற்று பறக்கும் படை அதிகாரி ராமச்சந்திரன் தலைமையில் எஸ்ஐ மோகன்தாஸ் உள்ளிட்டோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அவ்வழியாக வந்த லாரி ஒன்றை மடக்கி சோதனை செய்தபோது, ரூ.1 லட்சம் இருந்தது. விசாரணையில், வியாசர்பாடி சாஸ்திரி நகர் 19வது தெருவை சேர்ந்த இளமாறன் (39) உரிய ஆவணமின்றி பணத்தை எடுத்து சென்றது தெரிந்தது. அதை பறிமுதல் செய்து, பெரம்பூர் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

இதேபோல், பெரவள்ளூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஜவகர் நகர் முதல் தெருவில் நேற்று பறக்கும் படை அதிகாரி ராஜேந்திரன் தலைமையில் போலீசார் வாகன சோதனை செய்தபோது அவ்வழியாக வந்த மினி வேன் ஒன்றை மடக்கி சோதனை செய்தனர். அதில் ரூ.93 ஆயிரம் இருப்பது தெரியவந்தது. விசாரணையில், பெரவள்ளூர் எஸ்.ஆர்.பி கோயில் தெருவை சேர்ந்த லோகேஷ் (41) என்பவர் உரிய ஆவணமின்றி பணத்தை எடுத்து சென்றது தெரிந்தது. அதை பறிமுதல் செய்து, பெரம்பூர் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

The post உரிய ஆவணமில்லாத ரூ.61.23 லட்சம் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Flying Force Police ,Officer ,Murali ,Situation Monitoring Team ,Puduchattaram ,Poontamalli ,
× RELATED மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை...