×

30 மொழிகள் திராவிட மொழிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளது

தஞ்சாவூர், மார்ச்23: 30 க்கும் மேற்பட்ட மொழிகள் திராவிட மொழிகளாக அடையாளப்படுத்தப்படுகின்றன என்று தமிழ்ப்பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவித்தார். தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் திராவிடவியலின் வளர்ச்சிக்கு ராபர்ட் கால்டுவெல்லின் பங்களிப்பு எனும் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது. தமிழக அரசால் தமிழ்ப் பல்கலை,, மொழியியல் துறையில் நிறுவப்பட்டுள்ள தமிழறிஞர் ராபர்ட் கால்டுவெல் தமிழ் ஆய்விருக்கையில் நடைபெற்ற இந்த தேசிய கருத்தரங்கத்திற்கு துணைவேந்தர் திருவள்ளுவன் தலைமை வகித்தார். அப்போது அவர் பேசுகையில், திராவிடவியலின் தந்தை என்று போற்றப்படும் கால்டுவெல் 12 மொழிகளை மட்டுமே ஆய்வுசெய்து ஒப்பிலக்கணமாக 1856ம் ஆண்டில் வெளியிட்டுள்ளார். இன்றைய நிலையில் 30 க்கும் மேற்பட்ட மொழிகள் திராவிட மொழிகளாக அடையாளப்படுத்தப்படுகின்றன. எனவே திராவிட மொழிகளை கால்டுவெல்லுக்கு முன் கால்டுவெல்லுக்கு பின் என ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் இக்கருத்தரங்கில் தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கருணாகரன், முன்னாள் பதிவாளர் அரங்கன் மற்றும் பதிவாளர் தியாகராசன், மொழிப்புல முதன்மையர் கவிதா ஆகியோர் வாழ்த்தி பேசினர். இக்கருத்தரங்கில் கால்டுவெல் ஆய்விருக்கையின் ஆய்வுத்தகைஞர் நடராசப்பிள்ளை நோக்கவுரை ஆற்றினர். இதில் இந்திய மொழிகளின் நடுவன் நிறுவனம் மைசூரிலிருந்து சாம் மோகன்லால், ராமமூர்த்தி, பாலகுமார், சுந்தரராஜன், சுரேஷ், திராவிடப் பல்கலைக்கழகம் குப்பம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களிலிருந்து 30க்கும் மேற்பட்ட மொழியியல் வல்லுநர்கள் கலந்துகொண்டு கட்டுரை வாசித்தனர். மேலும் முதுநிலை ஆய்வுத்தகைஞர் சிவசண்முகம், முன்னாள் பேரவை உறுப்பினர் பசும்பொன், மக்கள் தகவல்தொடர்பு அதிகாரி முருகன் மற்றும் மொழியியல் அறிஞர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். இக்கருத்தரங்கை முனைவர் பெருமாள் தொகுத்து வழங்கினார். மொழியியல் துறைத்தலைவர் பேராசிரியர் மங்கையற்கரசி வரவேற்றார். முனைவர் ரமேஷ்குமார் நன்றி கூறினார்.

The post 30 மொழிகள் திராவிட மொழிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளது appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Tamil University ,Vice ,Robert Caldwell ,Tamil University, Linguistics Department ,Tamil Nadu Government ,
× RELATED தமிழ்பல்கலை கழகத்தில்...