×

ராஜ்பவனில் இருந்து தொடங்கி இருக்கிற பயணம் ஜனாதிபதி மாளிகை வரை செல்லப்போகிறது: திருச்சி, பெரம்பலூர் வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: ராஜ்பவனில் இருந்து தொடங்கி இருக்கிற பயணம், குடியரசு தலைவர் மாளிகை வரை செல்லப்போகிறது என திருச்சி, பெரம்பலூர் வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். திருச்சி, பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் பரப்புரையில் கலந்துகொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: எல்லாவற்றுக்கும் தொடக்கமாக இருப்பது இந்த திருச்சிதான். திமுக தேர்தலில் நிற்க வேண்டும் என்று 1956ம் ஆண்டு முடிவெடுக்கப்பட்டது திருச்சி மாநாட்டில்தான்.

திருச்சி பாதை எப்போதுமே வெற்றிப் பாதை. தேர்தல் என்பதால் பிரதமர், இப்போது இந்தியாவில் இருக்கிறார், அதனால் அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வருகிறார். இல்லை என்றால், பெரும்பாலும் வெளிநாட்டில்தான் இருப்பார். சமீபத்தில் சேலத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, “தமிழ்நாட்டில் அவருக்கு செல்வாக்கு அதிகமாகிவிட்டதால், திமுகவினருக்கு தூக்கம் வரவில்லை” என்று பேசியிருக்கிறார். உண்மையில், தன்னோட ஆட்சி முடிய போகிறது என்று, பிரதமர் மோடிக்குத்தான் தூக்கம் வரவில்லை.

அவருக்கு ஏற்பட்டிருக்கும் தோல்வி பயம், அவரின் முகத்திலும் – கண்ணிலும் நன்றாகத் தெரிகிறது. நம்முடைய முக்கியமான சில திட்டங்களுடைய பயன்களைப் பற்றி, நான் சொல்வதை விட, தமிழ்நாட்டு மக்கள் என்ன சொல்கிறார்கள் என்று நேற்று ஒரு வீடியோ பார்த்தேன். அதில், ஒரு மகளிர் சொல்கிறார், எங்கள் வீட்டில், குழந்தைகளுக்கு உடம்பு சரியில்லை என்றால், காசுக்காக யாரையும் எதிர்பார்க்க வேண்டிய தேவை இனிமேல் இல்லை. எங்கள் அண்ணன் ஸ்டாலின் கொடுக்கும், ரூ.1000 தாய் வீட்டு சீர் இருக்கிறது. இப்படி மாதா மாதம், மாநிலம் முழுவதும் ஒரு கோடியே 15 லட்சம் குடும்பங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.

அடுத்தது, விடியல் பயணத் திட்டம் பற்றிப் பேசுகிறார்கள், ஸ்டாலின் சார் பேருந்தில் சென்று, நான்கு மாதம் இலவசமாக பயணம் செய்து கம்ப்யூட்டர் கோர்ஸ் முடித்து, இப்போது வேலைக்குச் செல்கிறேன் என்று – காஞ்சிபுரம் மாவட்ட சகோதரி ஒருவர் மகிழ்ச்சியுடன் கூறினார், இது போல், மாநிலம் முழுவதும் இதுவரையில் மகளிர் மட்டும், 445 கோடி முறை பயணம் செய்து இருக்கிறார்கள். இப்படி தமிழ்நாட்டில் இருக்கின்ற, அனைத்துக் குடும்பத்திற்கும் பார்த்து பார்த்து அவர்களின் குடும்பத்தில் ஒருவனாக பல திட்டங்களைத் தீட்டி தருபவன்தான், இன்று உங்கள் முன்னால் கம்பீரமாக நின்று கொண்டிருக்கும் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.

நமது தேர்தல் அறிக்கையில் பல அம்சங்களை குறிப்பிட்டுள்ளோம். கடந்த பத்தாண்டுகளாக பா.ஜ. அரசு இஷ்டத்திற்கு ஏற்றிய பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் சிலிண்டர் விலை குறைக்கப்படும். தமிழ்நாட்டு ஏழை-எளிய மாணவர்களின் உயிரை பழிவாங்கும் நீட் தேர்வு ஒழிக்கப்படும். மாநிலங்களுடைய உயிர்மூச்சாக இருக்கின்ற நிதி உரிமைக்கு வேட்டு வைக்கும், தற்போதைய ஜி.எஸ்.டி முறை சீர்திருத்தம் செய்யப்படும். இப்படி, மக்களுக்கான திட்டங்களை சிந்தித்து செயல்படுத்த பாடுபடுபவர்கள்தான் நாம். ஆனால், தமிழ்நாட்டில் சொல்வதற்கென்று, எதுவுமே இல்லாத ஆட்சியை நடத்தியவர்தான் பிரதமர் நரேந்திர மோடி.

அவரால் சாதனைகளை சொல்ல முடியவில்லை. மேடைக்கு மேடை என்ன சொல்கிறார். பத்தாண்டு நான் ஊழலற்ற அரசாங்கத்தை நடத்தினேன் என்று சொல்கிறார். பா.ஜ. ஆட்சியில் நடந்த ஊழல்கள் பற்றி, நாம் மட்டுமல்ல நாடு முழுவதும் கேள்வி கேட்டாலும் அவரால் பதில் சொல்ல முடியவில்லை. இந்த பத்தாண்டு ஆட்சியில், ஊழல்கள் ஒன்றா – இரண்டா. அதற்கு, இமாலய எடுத்துக்காட்டுதான் இந்திய ஜனநாயகத்திற்கே அழிக்க முடியாத அவமானத்தை ஏற்படுத்தியிருக்கும் தேர்தல் பத்திர ஊழல்.

கடந்த 5 ஆண்டுகளில் அமலாக்கத்துறை, வருமானவரித்துறை சிபிஐ இப்படிப்பட்ட ஒன்றிய அரசின் அமைப்புகளை பா.ஜ.வின் கைப்பாவையாகப் பயன்படுத்தி, அவர்களை ரெய்டிற்கு அனுப்புவது, பிறகு பா.ஜ.வுக்கு நிதியாகத் தேர்தல் பத்திரங்களை வாங்குவது என்று, 8 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்திருக்கிறார்கள். தேர்தல் பத்திரம் போலவே மற்றொரு நிதியும் வசூல் செய்திருக்கிறார். அதுவும் ‘பி.எம். கேர்ஸ் பண்ட்’ என்று பேர் வைத்து வசூல் செய்திருக்கிறார்.

அது பற்றிய அத்தனை ரகசியங்களும் ஜூன் மாதம் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும், அம்பலமாகும். அதேபோல், ரபேல் ஊழல் ரகசியமும் நிச்சயமாக வெளியே வரும். இப்படிப்பட்ட ஊழல் ஆட்சியை நடத்திய பிரதமர் மோடி ஊழலைப் பற்றி பேசலாமா? பா.ஜ. ஊழல்களை மறைக்க, நேற்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்திருக்கிறார்கள். என்ன காரணம்? பா.ஜ.வின் தோல்வி பயம்தான் ஒரே காரணம்.

தனக்கு எதிராக ‘இந்தியா’ என்ற வலிமையான கூட்டணியை எதிர்க்கட்சிகள் அமைத்து விட்டார்களே – மக்கள் பா.ஜ.வுக்கு எதிராக ஒன்று திரள ஆரம்பித்துவிட்டார்களே என்ற பயத்தில், தவறுகளுக்கு மேல் தவறுகளை செய்துகொண்டு வருகிறது, பா.ஜ. தலைமை. தமிழ்நாட்டில் நம்முடைய ஆட்சிக்கு தொந்தரவு கொடுக்க, ஆளுநரை வைத்து மிரட்டிப் பார்க்கிறார்கள். இந்த நிகழ்ச்சிக்குப் புறப்படுவதற்கு முன்பாக, அமைச்சர் பொன்முடியின் பதவிப்பிரமாண நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு வந்திருக்கிறேன்.
ஆளுநர் அவராகச் செய்தாரா, முடியாது என்று சொல்லிவிட்டார். நாங்கள் விடுவோமா திமுக காரர்கள் நாங்கள்.

நீதிமன்றத்திற்குச் சென்றோம். உச்ச நீதிமன்றத்தில் வாதம் நடந்தது. எப்படிப்பட்ட கண்டனத்தை ஆளுநருக்கு தெரிவித்திருக்கிறார் தலைமை நீதிபதி. அதற்குப் பிறகு நேற்று 3.30 மணிக்கு அழைப்பு வந்தது. அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டு நாங்கள் நேரடியாகச் சென்று ராஜ்பவனில் பதவிப்பிரமாணத்தை முடித்துவிட்டு, ஒரு மரியாதைக்கு ஆளுநரிடம் பூங்கொத்தைக் கொடுத்துவிட்டு, புறப்படும்போது கூறினேன். இன்றைக்குத்தான் நான் தேர்தல் வேலையைத் தொடங்குகிறேன். தேர்தல் பிரசாரத்தை முதன்முதலாக ராஜ்பவனிலிருந்து தொடங்குகிறேன் என்று கூறினேன்.

அவர் உடனே, BEST OF LUCK என்று சொல்லி அனுப்பினார். ராஜ்பவனிலிருந்து தொடங்கியிருக்கின்ற இந்தப் பயணம் குடியரசுத்தலைவர் மாளிகை வரைக்கும் செல்லப்போகிறது என்பது இது ஒரு அடையாளம். இது இந்தியா கூட்டணிக்கும் பாஜவுக்குமான யுத்தம் அல்ல. இது இந்திய நாட்டு மக்களுக்கும் – பாசிச பா.ஜ.வுக்குமான யுத்தம். இந்த யுத்தத்தில் மக்கள்தான் வெற்றி பெறுவார்கள். பாசிச பா.ஜ. வேரோடும் – வேரடி மண்ணோடும் வீழ்த்தப்படும். இப்படிப்பட்ட எதேச்சாதிகார – சர்வாதிகார பா.ஜ.வைத் தமிழ்நாட்டில் இருக்கிற பழனிசாமி கண்டிக்கிறாரா? நம்மைப் போல் விமர்சனம் செய்கிறாரா?

எங்காவது கண்டித்து அறிக்கை விடுகிறாரா? குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்துவிட்டு சிறுபான்மையினர் நலன் பேசுகிறார் பழனிசாமி, அவரின் இருண்ட கால ஆட்சியை நீங்கள் எல்லாம் மறந்துவிட்டு இருப்பீர்கள் என்று தப்புக்கணக்கு போடுகிறார் பழனிசாமி. அவர் நடத்தும் நாடகம் விரைவில் முடிவுக்கு வரும் பா.ஜ.வின் பாசிச எண்ணங்களுக்கும் முடிவுரை எழுதப்படும்.

இதெல்லாம் நடப்பதற்கு, நம்முடைய இந்தியா கூட்டணி ஒன்றியத்தில் ஆட்சி அமைக்க வேண்டும், அப்போது தான், நம்முடைய இந்திய நாட்டையும் – இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையும் – நாட்டின் பன்முகத் தன்மையையும் – சகோதரத்துவத்தையும் – காப்பாற்ற முடியும். இந்தியாவிற்கு ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கக் காத்திருக்கும் இந்தியா கூட்டணிக் கட்சிகளுக்கு வாக்களிப்பீர் என்று உங்களில் ஒருவனாக – உங்களுக்காகவே உழைத்த தலைவர் கலைஞரின் மகனாகக் கேட்டுக் கொள்கிறேன். திருச்சி மற்றும் பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிமுகம் செய்ய விரும்புகிறேன்.

இதோ திருச்சி நாடாளுமன்றத் தொகுதியின் வேட்பாளராக, ஈழத் தமிழர்களுக்காகச் சிறை பல கண்ட, திராவிட இயக்கத்தின் போர்வாள், என் ஆருயிர் அண்ணன் வைகோவின் மகன் துரை வைகோ, பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியின் வேட்பாளராக, திருச்சியைத் தீரர்களின் கோட்டையாக உருவாக்கிய உழைப்பின் அடையாளம் கே.என்.நேருவின் மகன் அருண் நேருவை உங்களிடத்தில் ஒப்படைக்கிறேன்.

அவர்களுக்குப் பெருவாரியான வாக்குகளை அளித்து, உங்களுடைய குரலாக – உங்களுடைய பிரதிநிதிகளாக இந்த இரண்டு இளம் சிங்கங்களையும், நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைக்க வேண்டிய ஜனநாயகக் கடமை உங்களுக்கு இருக்கிறது. இந்தியாவைக் காக்கும் வெற்றிப் பயணத்தை திருச்சியில் இருந்து தொடங்குகிறேன். புதிய ஆட்சியை ஒன்றியத்தில் அமைப்போம், ஒளிமயமான இந்தியாவை உருவாக்குவோம், ஏப்ரல் 19ம் நாள் நீங்கள் அளிக்கின்ற வாக்கு புதிய இந்தியாவை உருவாக்கும் வாக்காக அமையட்டும். திருச்சியில் வெற்றி வரலாறு துவங்கட்டும், துவங்கட்டும், துவங்கட்டும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

The post ராஜ்பவனில் இருந்து தொடங்கி இருக்கிற பயணம் ஜனாதிபதி மாளிகை வரை செல்லப்போகிறது: திருச்சி, பெரம்பலூர் வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Rajbhavan ,President's House ,Trichy, Perambalur ,K. Stalin ,Chennai ,Tiruchi-Perambalur ,Chief Minister ,M.P. ,Trichy, Perambalur Parliamentary Constituencies ,K. ,Stalin ,
× RELATED மணிப்பூரில் உள்ள மத்திய பாதுகாப்புப்...