ஜோதிடத்தின் மூலம் ஒருவருடைய ஆயுளை கணிக்க முடியுமா? என்று கேட்டால், இது மிகவும் சிக்கலான கேள்வி. சில ஜோதிடர்கள் அதைச் செய்ய முடியும் என்று சொல்லுகின்றார்கள். பெரும்பாலான ஜோதிடர்கள், துல்லியமாகச் செய்ய முடியாது என்றும் சொல்லுகின்றார்கள். அந்தக் காலத்தில் சில ஜோதிடர்கள் மிகத் துல்லியமாகக் கணித்து, எந்த நாள், எங்கு, எத்தனை மணிக்கு ஆயுள் முடியும் என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால், அது அபூர்வம். சமீபத்தில் ஒரு ஜாதகம் பார்த்தேன். அதில் 1920-ஆம் வருட ஜாதகம். ஒரு ஜோதிடர், ஆயுர்தாய கணக்கு போட்டு, ஆயுள் நிர்ணயம் செய்திருந்தார். அது ஏறக்குறைய சரியாக இருந்தது. 82 வயது 6 மாதம், 27 நாள்கள் என்று கணக்கு இருந்தது. ஆனால், அவர் 3 வருடங்கள் கழித்து 85-வது வயதில் காலமானார். ஆயுள் கணிதத்தில், பாலாரிஷ்டம், குறை ஆயுள், மத்திம ஆயுள், நிறை ஆயுள் என்று இருக்கிறது. லக்கினம் பலமாகவும் (உயிர்), ராசி (உடல்) பலமாகவும் இருந்தால், நிறை ஆயுள். நிறை ஆயுள் என்பது 120 வருடங்கள். சிலர் 100 என்கிறார்கள். ஆயுள் நிர்ணயக் கணக்கு வெகு சிக்கலானது.
வேறு பலன்களைக்கூட ஓரளவு யூகித்து சொல்லமுடியும் என்றாலும்கூட, ஆயுள் கணக்கை, ஜோதிடத்தில் சொல்வது என்பது மிகவும் கடினமானது. ஆனாலும், ஜோதிடத்தில் அதற்கான வழிமுறைகள் இருக்கின்றன. இப்பொழுது, நவீனமாக பல விஷயங்களை எல்லாம் கண்டுபிடித்து வைத்திருக்கிறார்கள். ஆயுளை நிர்ணயிப்பதற்கு ஒரே ஒரு விஷயம் மட்டும் போதாது. பல விஷயங்கள் இருக்கின்றன. உதாரணமாக, எட்டாம் இடம் என்பதை ஆயுள் ஸ்தானம் என்று சொல்லுகின்றார்கள். அது ஆயுளை மட்டும் குறிப்பிடுகிறதா என்றால் நிச்சயமாக இல்லை. ஆயுளைத் தவிர, அது வேறு பல விஷயங்களையும் குறிப்பிடுகிறது.ஏன் ஒருவனுக்கு கிடைக்க வேண்டிய அதிர்ஷ்ட பலன்கள், புதையலைப் பற்றிகூட அந்த இடம் குறிப்பிடுகிறது. அதுமட்டுமில்லை, எதிர்பாலினர் அதாவது கணவனாக இருந்தால் மனைவி. மனைவியாக இருந்தால் கணவன். அவர்களின் குடும்பம் எப்படி இருக்கும் என்பதையும் எட்டாம் இடம் சொல்லுகின்றது. 7-க்கு இரண்டாம் இடம் அல்லவா. அடுத்து பாவத் பாவ கணக்குப்படி, 8-க்கு 8 என்பது 3-ஆம் இடம் வரும். அதுவும் ஒரு மாரக ஸ்தானம்தான். ஆயுர் தாய கணக்கைப் போடுவதற்கு அல்லது ஆயுளை நிர்ணயிப்பதற்கு நமக்கு இரண்டு விஷயங்கள் மிக முக்கியமாக வேண்டும்
.
ஒன்று ஆயுள் காரகன் என்று சொல்லப்படுகின்ற கிரகத்தின் உடைய வலிமை. ஆயுள்காரகன் என்பவன், சனி ஆகையினால் சனியினுடைய வலிமையை வைத்துக்கொண்டு ஒருவனுடைய ஆயுளை நிர்ணயம் பண்ண முடியும். அடுத்தது ஆயுள் ஸ்தானம் என்று சொல்லப்படுகின்ற எட்டாம் இடத்தின் வலிமை கொண்டு ஒருவருடைய ஆயுளை நிர்ணயம் செய்ய முடியும்.இது தவிர, ஜோதிடத்தில் மாரக ஸ்தானங்கள் என்று சொல்லக்கூடிய சில இடங்கள் இருக்கின்றன. அது ஒவ்வொரு லக்னத்திற்கும் மாறும். சர லக்னமாக இருந்தால் ஒரு மாதிரியாகவும், ஸ்திர லக்னமாக இருந்தால் ஒரு மாதிரியாகவும், உபய லக்னமாக இருந்தால் ஒரு மாதிரியாகவும் இருக்கும். இது தவிர, பாதகஸ்தானம் என்று ஒரு ஸ்தானமும் இருக்கின்றது. ஒருவருடைய ஆயுள் ஸ்தானத்தை கூட்டுவதற்கும் குறைப்பதற்கும் ஆறாம் இடமும், 12-ஆம் இடமும் கணக்கிட வேண்டி இருக்கிறது. அது மட்டும் இன்றி, துல்லியமான கணக்கீடுகளும் இதற்கு தேவைப்படும். மிக நுட்பமான சூட்சுமமான கணிதம் இதற்கென்று இருக்கின்றன. வெறும் தசாபுத்தியை மட்டும் வைத்துக்கொண்டு சொல்ல முடியாது. தசாபுக்தி, அந்தரம், அந்தர அந்தரம், சூட்சுமம் என உள் பிரிவுகளும், அந்த நேரத்திற்கான கோள் சாரமும் ஜாதகத்தினுடைய இயல்பான வலிமையும் தீர்மானித்துத் தான் ஆயுளை நாம் நிர்ணயம் செய்ய முடியும்.
இத்தனை கணக்குகளைச் சொல்லும்பொழுது, பெரும்பாலும் இந்த நிர்ணயம் 80 சதவீதம்தான் சரியாக இருக்கும். 20 சதவீதத்துக்கு மேல் நமக்கு தெளிவில்லாத ஒரு தன்மைதான் கிடைக்கும். அது ஒரு விதத்தில் நல்லதுதான். தேங்காய் உடைத்தல் போல் ஆயுளை நம்மால் சொல்லிவிட முடியாது, என்பதுதான் அந்த ரகசியம். மாறு கோணத்தில் இது தேவ ரகசியம். உண்மையில் இதை தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது என்றுதான் நான் சொல்லுவேன். காரணம், இந்த ரகசியத்தை மிகத் துல்லியமாக சொல்லுகின்ற ஆற்றல் கிடைத்துவிட்டால், அது சமூகத்தில் பலவிதமான விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும். அது மட்டும் இல்லாமல், ஒரு ஜோதிடர் தவறாக ஒருவனுடைய ஆயுளை கணித்துக் கொடுத்துவிட்டால், அது ஒருவேளை தவறான கணக்காக இருந்தால், அவன் அதையே நினைத்து நினைத்து வருந்தி வருந்தி இயல்பாகவே அவனுடைய ஆயுள் குறைந்துவிடும்.
இது ஜோதிடம் சொன்னதால் நிகழ்ந்ததா? இல்லை அவனுடைய மனநிலை அப்படிப்பட்ட ஒரு நிலைமையை உண்டாக்கியதா? என்பது நம்மால் தெரிந்து கொள்ள முடியாது.காரணம், ஜோதிடத்தை மனம் வலிமையாக நம்ப ஆரம்பிக்கும் பொழுது அந்த மனவலிமை ஜோதிடத்தைவிட அதிகமாக வேலை செய்ய ஆரம்பித்துவிடும் என்பது மனவியல் அறிஞர்களின் கருத்து.எனவேதான், ஜோதிடர்கள் பெரும்பாலும் ஆயுளை நிர்ணயித்து சொல்லுகின்ற வழக்கத்தை மேற்கொள்வது கிடையாது. அவர்கள் பெரும்பாலும், “ஒரு கண்டம் இருக்கிறது. எச்சரிக்கையாக இருங்கள். பிரார்த்தனை செய்யுங்கள். இப்பொழுது உங்களுக்கு நேரம் சரியில்லை ஆகையினால் நீங்கள் நல்ல மருத்துவத்தை பார்த்துக் கொள்ளுங்கள்” என்றுதான் சொல்வார்களே தவிர, இத்தனாம் தேதி உனக்கு ஆயுள் முடியப் போகிறது என்று சொல்ல மாட்டார்கள். சொல்ல முடிந்தாலும்கூட அதை சொல்லக்கூடிய அதிகாரம் கிடையாது என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.தேவ ரகசியத்தை உடைப்பதற்கு மனிதர்களுக்கு உரிமை கிடையாது என்பதுதான் உண்மை.
The post தேவ ரகசியத்தை உடைக்கலாமா? : ஜோதிட ரகசியங்கள் appeared first on Dinakaran.