×

பொன்னமராவதி அருகே கொன்னைக் கண்மாயில் மீன்பிடி திருவிழா கோலாகலம்

பொன்னமராவதி : பொன்னமராவதி அருகே கொன்னைக்கண்மாயில் மீன்பிடித்திருவிழா கோலாகலமாக நடந்தது.பொன்னமராவதி அருகே உள்ள கொன்னைப்பட்டியை சேர்ந்த கொன்னைக்கண்மாய் மீன் பிடித்திருவிழா நேற்று காலை நடைபெற்றது. இதற்காக நேற்று முன்தினம் நள்ளிரவு முதலே பொதுமக்கள் இந்த கண்மாய்க்கு கூட்டம், கூட்டமாக வரத் தொடங்கினர். பொன்னமராவதி-புதுக்கோட்டை மெயின்ரோட்டில் இந்த கண்மாய் இருப்பதால் சாலையின் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அளவிற்கு மக்கள் கூட்டம் காணப்பட்டது.

இதனைத்தொடர்ந்து காலை கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயிலில் வழிபாடு செய்து ஊர் முக்கியஸ்தர்கள் கண்மாய் கரையில் நின்று வெள்ளை வீசி மீன் பிடித்திருவிழாவை தொடங்கி வைத்தனர்.கண்மாய் தண்ணீரை சுற்றி வலை, தூரி, ஊத்தா போன்ற உபகரணங்கள் மூலம் பொதுமக்கள் கண்மாயில் இறங்கி மீன்பிடித்தனர். இதில் நாட்டு வகை மீன்களான விரால், கெண்டை, அயிரை, சிலேப்பி போன்ற வகை மீன்கள் கிடைத்தன.

இந்த மீன்பிடியில் புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, திண்டுக்கல், மதுரை, தஞ்சாவூர் மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்றனர். இந்த கண்மாய்களில் பிடித்த மீனை விற்பனை செய்யாமல் வீடுகளில் குழம்பு வைத்து சாப்பிடுவர். பொன்னமராவதி பகுதியில் கண்மாய்களில் தண்ணீர் வற்றி வருவதால் மீன்பிடித்திருவிழா ஒவ்வொரு கண்மாய்களிலும் நடத்த தொடங்கப்பட்டு வருகின்றது. இதனால் இப்பகுதியில் மீன்பிடித்திருவிழா களைகட்டத் தொடங்கிவிட்டது.

The post பொன்னமராவதி அருகே கொன்னைக் கண்மாயில் மீன்பிடி திருவிழா கோலாகலம் appeared first on Dinakaran.

Tags : Konnai Kanmai Fishing Festival Kolakalam ,Ponnamaravathi ,Ponnamaravati ,Konnaikanmai ,Kanmai ,Konnai Kanmai Fishing Festival Kolagalam ,Dinakaran ,
× RELATED பொன்னமராவதியில் வட்டார போக்குவரத்து அலுவலகம் தொடங்க வேண்டும்