* ரயில் நிலையத்தில் சுற்றியவரை மிரட்டி பலாத்காரம் செய்த டீ மாஸ்டர் கைது
சென்னை: எழும்பூரில் உள்ள ஆர்பிஎப் இன்ஸ்பெக்டர் அலுவலகத்தில் தேசிய கொடியால் தூக்கிட்டு தற்கொலை செய்த பெண்ணின் அடையாளம் தெரிந்தது. ஆதரவற்ற பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த டீ மாஸ்டரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். எழும்பூர் ரயில் நிலையத்தில் ஆர்பிஎப் இன்ஸ்பெக்டர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் முதல் தளத்தில் கடந்த 17ம் தேதி காவலர்களின் ஓய்வு அறை உட்புறமாக பூட்டப்பட்டிருந்தது.
இதனால் சந்தேகமடைந்த ஆர்பிஎப் காவலர்கள், அந்த அறையின் கதவை உடைத்து பார்த்த போது, அறையின் ஜன்னல் கம்பியில் தேசிய கொடி மூலம், 40 வயது பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஆர்பிஎப் காவலர்கள் சம்பவம் குறித்து ஆர்பிஎப் இன்ஸ்பெக்டருக்கு தகவல் அளித்தனர். அதன்படி எழும்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, இறந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து, இறந்த பெண் யார், எந்த ஊரை சேர்ந்தவர், இவர் எப்படி ஆர்பிஎப் இன்ஸ்பெக்டர் அலுவலகத்திற்கு வந்தார் என்பது குறித்து புகைப்படம் மற்றும் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர். அப்போது இறந்த பெண் கடந்த ஒரு வாரமாக ஆதரவற்ற நிலையில் எழும்பூர் ரயில் நிலையத்தில் சுற்றி வந்தது தெரியவந்தது. மேலும், சிசிடிவி காட்சிகளை பார்த்த போது, கடந்த 15ம் தேதி நள்ளிரவு ஒரு நபர், சுற்றி திரிந்த பெண்ணை ஆர்பிஎப் இன்ஸ்பெக்டர் அலுவலகம் அருகே அழைத்து செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.
உடனே அந்த நபரின் புகைப்படத்தை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், திருச்சி மணப்பாறை பழைய பாளையம் கிராமத்தை சேர்ந்த கருப்பையா (50) என தெரியவந்தது. இவர், தாம்பரம் சானடோரியத்தில் டீக்கடை ஒன்றில் டீ மாஸ்டராக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. உடனே போலீசார் கருப்பையாவை பிடித்து விசாரணை நடத்தினர். இதில், அவர் எழும்பூர் ரயில் நிலையத்தில் சுற்றி கொண்டிருந்த பெண்ணை அழைத்து வந்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததும், அதன் பிறகு அங்கிருந்து தப்பி சென்றதும் தெரியவந்தது.
இதனால் பாதிக்கப்பட்ட அந்த பெண், தனக்கு நேர்ந்த கொடுமை தாங்க முடியாமல் ஆர்பிஎப் இன்ஸ்பெக்டர் அலுவலகத்தின் ஓய்வு அறையில் தேசிய கொடியால் தூக்குப்போட்டு தற்கொலை ெசய்து கொண்டது தெரியவந்தது. அதைதொடர்ந்து டீ மாஸ்டர் கருப்பையாவை போலீசார் கைது செய்தனர். எழும்பூர் ரயில் நிலையத்தில் ஆர்பிஎப் இன்ஸ்பெக்டர் அலுவலகத்தில் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post எழும்பூர் ஆர்பிஎப் அலுவலகத்தில் தேசிய கொடியால் தூக்கிட்டு ஆதரவற்ற பெண் தற்கொலை appeared first on Dinakaran.