×

அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்ட அகத்தீஸ்வரர் கோயிலில் நுழைந்து தக்காருக்கு மிரட்டல்: உண்டியல் சீல் உடைப்பு, 10 பேர் கும்பலிடம் போலீஸ் விசாரணை

பல்லாவரம்: பல்லாவரம் அடுத்த பொழிச்சலூரில் பிரசித்தி பெற்ற அகத்தீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலை கடந்த 30 ஆண்டுகளாக தனி நபர் ஒருவர் ஆக்கிரமித்து, தனது முழு கட்டுப்பாட்டில் வைத்திருந்து, கோயிலுக்கு சொந்தமான சொத்துகளை எல்லாம் தனக்கு வேண்டியவர்களுக்கு குத்தகைக்கு விட்டு பணம் சம்பாதித்து வந்தார். இந்நிலையில், தனியார் வசம் இருக்கும் இக்கோயிலை உடனடியாக மீட்டு, இந்து சமய அறநிலையத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது.

அதன் அடிப்படையில், கடந்த 19ம் தேதி மாலை, இந்த கோயிலை, அறநிலையத்துறை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது. திருநீர்மலை ரெங்கநாத பெருமாள் கோயில் செயல் அலுவலர் தியாகராஜன் என்பவர், இக்கோயிலுக்கு தக்காராக நியமனம் செய்யப்பட்டார். பின்னர், கோயிலுக்கு அறநிலையத்துறை சார்பில் புதிதாக அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடைபெற்று வந்தன. இதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், நேற்று மாலை திடீரென கோயிலுக்கு வந்த 10க்கும் மேற்பட்டோர், அறநிலையத்துறை சார்பில் மூடி முத்திரையிட்டு சீல் வைக்கப்பட்ட உண்டியல் பூட்டுக்களை உடைத்தெறிந்து, கோயிலுக்குள் அத்துமீறி நுழைந்து அங்கு பணியில் இருந்த தக்கார் தியாகராஜனுக்கு மிரட்டல் விடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அதிகாரிகள் வைத்த சீலை உடைத்து சட்ட விரோதமாக கோயில் உள்ளே நுழைந்து தகராறில் ஈடுபட்ட நபர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்ட அகத்தீஸ்வரர் கோயிலில் நுழைந்து தக்காருக்கு மிரட்டல்: உண்டியல் சீல் உடைப்பு, 10 பேர் கும்பலிடம் போலீஸ் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Agatheeswarar temple ,Thakkar ,Pallavaram ,Bozhichalur ,
× RELATED பல்லாவரம் அருகே மதுபோதை தகராறு:...