×

அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டபோது விபரீதம் வீட்டில் மர்ம பொருள் வெடித்து பிளஸ் 2 மாணவன் உடல் சிதறி பலி: கொளத்தூரில் பரபரப்பு சம்பவம்


பெரம்பூர்: கொளத்தூர் முருகன் நகர், 2வது மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் ஹரிஹரன் (49). இவரது மனைவி சிவப்பிரியா. தம்பதியின் மகன் ஆதித்ய பிரணவ் (17). இவர்கள் குடும்பத்துடன் வில்லிவாக்கம் திருநகர் பகுதியில் சொந்த வீட்டில் வசித்து வந்தனர். 2019ம் ஆண்டு கொரோனா தொற்றால் சிவப்பிரியா உயிரிழந்தார். அதன்பிறகு அந்த வீட்டில் இருக்கப் பிடிக்காமல் தந்தையும், மகனும் அதே பகுதியில் வேறு சொந்த வீடு வாங்கி குடியேறி உள்ளனர். கடந்த 4 வருடங்களாக அங்கு வசித்து வருகின்றனர்.

ஹரிஹரன், மேற்கு மாம்பலம் பகுதியில் சொந்தமாக பேட்டரி கடை வைத்து நடத்தி வருகிறார். அவரது மகன் ஆதித்ய பிரணவ் முகப்பேரில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். இவர் அறிவியல் சம்பந்தமான பாட வகுப்பு எடுத்து படித்து வருகிறார். சிறு வயது முதலே ஆதித்ய பிரணவ் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் கெமிக்கல்களை பயன்படுத்தி கண்டுபிடிப்புகள் குறித்து அதிகமாக ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

மேலும் அவர் தனது செல்போனில் கெமிக்கல்கள் மூலம் புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிப்பது சம்பந்தமாகவும் அடிக்கடி புதிய தகவல்களை தேடிப் பிடித்து அதனை படிப்பதில் ஆர்வமாக இருந்துள்ளார். அவ்வப்போது அதனை வீட்டில் எவ்வாறு செய்வது என்பது குறித்தும் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மதியம் 2.30 மணியளவில் ஹரிஹரன் வேலைக்குச் சென்றிருந்த நிலையில், வீட்டில் ஆதித்ய பிரணவ் மட்டும் தனியாக இருந்துள்ளார்.

அப்போது அவரது வீட்டில் இருந்து பயங்கர சத்தம் கேட்டது. இதில் அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளில் அதிர்வுகள் ஏற்பட்டு பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடிவந்து பார்த்தனர். அப்போது ஆதித்ய பிரணவ் இருந்த வீடு முற்றிலும் இடிந்து தரைமட்டமாக இருந்தது. மேலும் அக்கம் பக்கத்து வீடுகளிலும் மேற்கூரைகள் மற்றும் கண்ணாடிகள் உடைந்திருந்தன. உடனடியாக இதுகுறித்து பொதுமக்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த கொளத்தூர் போலீசார் நிலைமையை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். ஏதோ ஒரு அசம்பாவித சம்பவம் பெரிதாக நிகழ்ந்துள்ளது என்று உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் இணை கமிஷனர் விஜயகுமார், கொளத்தூர் துணை கமிஷனர் பாண்டியராஜன், உதவி கமிஷனர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் அடுத்தடுத்து சம்பவ இடத்திற்கு வந்தனர். மேலும் உடனடியாக கொளத்தூர் மற்றும் பெரம்பூர் பகுதியில் இருந்து தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டன.

வடசென்னை வடக்கு மாவட்ட தீயணைப்பு அலுவலர் லோகநாதன், உதவி மாவட்ட அலுவலர் சூரிய பிரகாஷ், நிலைய அதிகாரிகள் ரமேஷ் பரமேஸ்வரன் உள்ளிட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஆதித்ய பிரணவ் வீட்டிற்குள் செல்ல முயன்றனர். ஆனால் வீட்டில் இருந்து கரும்புகை மற்றும் கெமிக்கல் புகை அதிகமாக வந்ததால் உள்ளே செல்ல முடியாமல் தடுமாறினர். அதன் பிறகு நிலைமையை சமாளித்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது, ஆதித்ய பிரணவ் உடல் சிதறி பரிதாபமாக பலியாகி கிடந்தார்.

அவரது கை காணாமல் போயிருந்தது. வீடு முழுவதும் சுவர்கள் இடிந்து காணப்பட்டது. உடனடியாக இது குறித்த தகவல் ஆதித்யா பிரணவ் தந்தை ஹரிஹரனுக்கு தெரியபடுத்தப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த அவர் தனது மகனின் உடலைப் பார்த்து கதறி அழுதார். பின்னர் ஆதித்ய பிரணவ் உடலை மீட்ட தீயணைப்பு வீரர்கள் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

ஆதித்ய பிரணவ் வேதியியல் சம்பந்தமான கண்டுபிடிப்புகளை கண்டுபிடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வந்துள்ளார். இதனால் சில கெமிக்கல்களைக் கொண்டு வந்து அதனை வைத்து ஏதோ ஒரு விஷயத்தை அவர் தயாரிக்க முயற்சி செய்துள்ளதும், அப்போது மிகப்பெரிய அளவில் வெடி விபத்து ஏற்பட்டு அவர் உயிரிழந்ததும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அங்கு இருந்த கெமிக்கல் மாதிரிகளை சேகரித்துள்ளனர். அவர்களின் ஆராய்ச்சியில் முடிவில் எது போன்ற கெமிக்கல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன, இதனால் என்ன மாற்றம் ஏற்பட்டது என்பது குறித்து விரிவாக தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அறிவியல் மாணவரின் அதீத ஆர்வக்கோளாறால் அவர் உயிரிழந்தது மட்டுமல்லாது சுற்றி இருந்த 10 வீடுகளும் சேதமடைந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

* மாணவனின் கை மாயம்
வெடிவிபத்து ஏற்பட்ட பின்பு மிகுந்த சிரமத்திற்கு இடையே உள்ளே சென்ற தீயணைப்பு வீரர்கள் சிறுவன் ஆதித்ய பிரணவ் உடலை மீட்டனர். அப்போது அவனது ஒரு கையை காணவில்லை. இதனால் பல இடங்களில் தேடிப் பார்த்தபோது, இடுபாடுகளுக்கு நடுவே கை இருந்தது. அதனை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

மேலும் பல இடங்களில் உள்ள இடர்ப்பாடுகளை நீக்கும்போது தீயணைப்பு வீரர்களின் கை வெள்ளை நிறமாக மாறி, கை எரிச்சல் அடைய ஆரம்பித்தது. உடனடியாக தீயணைப்பு வீரர்கள் கையுறைகளை அணிந்து கொண்டு இடர்பாடுகளை நீக்கினர். இதில் நான்கு தீயணைப்பு வீரர்களுக்கு கையில் லேசான கெமிக்கல் காயங்கள் ஏற்பட்டன.

* 3 கி.மீ. தூரத்திற்கு சத்தம்
நேற்று மதியம் 2.30 மணியளவில் அனைவரும் வீட்டில் இருந்துள்ளனர். மதிய நேரம் என்பதால் பெரும்பாலானோர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது வெடிகுண்டு போட்டது போன்று பயங்கர சத்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து உடனடியாக அக்கம்பக்கத்தினர் வெளியே ஓடிவந்து பார்த்தபோது பல வீடுகளில் கண்ணாடிகள் உடைந்தும், மேற்கூரைகள் விரிசல் விட்டும் இருந்தன. அப்போதுதான் பொதுமக்கள் ஏதோ பெரியதாக நடந்துள்ளது என்று நினைத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த சத்தம் கொளத்தூர் பகுதியில் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு கேட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

* வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை
கொளத்தூரில் நேற்று சம்பவம் நடந்த இடம் போர்க்களம் நடந்த இடம் போல மாறி இருந்தது. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் அச்சம் அடைந்தனர். போலீசார் மட்டுமல்லாது தடயவியல் நிபுணர்கள், வெடிகுண்டு நிபுணர்கள் உள்ளிட்டோருடன் மோப்பநாய் லெஸ்ஸியும் வரவழைக்கப்பட்டு அங்குலம் அங்குலமாக போலீசார் தீவிர சோதனை செய்தனர். இதில் பல தடயங்கள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும் கெமிக்கல்களின் மாதிரிகளும் எடுக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து அதனை ஆய்வகத்திற்கு அனுப்பி விசாரணையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

* நிலநடுக்கம் என நினைத்த பொதுமக்கள்
சம்பவம் நடந்த இடத்தைச் சுற்றி இருந்த பொதுமக்கள் கூறுகையில், மதியம் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தபோது மிகப்பெரிய சத்தம் கேட்டது. அப்போது வீடுகளில் ஜன்னல் உடைந்ததால் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என நினைத்து முதலில் நாங்கள் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தோம்.

அதன் பின்பு வந்து பக்கத்து வீட்டை பார்த்தபோது அந்த வீடு முழுவதும் இடிந்து வீட்டில் இருந்து கரும்புகை வெளிவந்து கொண்டிருந்தது. இதனால் வீட்டில் ஏதோ பெரிய அளவில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது, சிலிண்டர் வெடித்தது என நினைத்து நாங்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தோம். நிலநடுக்கம் என அக்கம் பக்கத்தினர் வெளியே ஓடி வந்ததால் சிறிது நேரம் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது.

* எச்சரித்த அக்கம்பக்கத்தினர்
கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஆதித்ய பிரணவ் சில கெமிக்கல்களை வைத்து வீட்டிலேயே ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார். அப்போது வீட்டில் இருந்து கரும்புகை வெளிவந்துள்ளது. உடனடியாக அக்கம் பக்கத்தினர் வந்து இதுகுறித்து ஆதித்ய பிரணவின் தந்தை ஹரிஹரனிடம் வீட்டில் இதுபோன்று செய்யாதீர்கள், அக்கம் பக்கத்தில் வீடு உள்ளது என எச்சரித்துள்ளனர். ஹரிஹரனும் தனது மகனை எச்சரித்து இதுபோன்று இனி செய்யக்கூடாது என கூறி உள்ளார். ஆனால் அடுத்த 10 நாட்களில் கோர விபத்து ஏற்பட்டு ஆதித்ய பிரணவ் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

* 10 வீடுகள் சேதம்
ஹரிஹரன் வீட்டில் ஏற்பட்ட இந்த வெடி விபத்தால் பக்கத்தில் இருந்த 2 வீடுகள், பின்புறத்தில் இருந்த 2 வீடுகள் மற்றும் எதிர் திசையில் இருந்த சில வீடுகள் என 10 வீடுகள் சேதமடைந்துள்ளன. இதில் 4 வீடுகள் கடுமையாக சேதம் அடைந்துள்ளன. இதில் சங்கரபாணி, புஷ்பா, வனஜா குமாரி, பெருமாள் உள்ளிட்ட சிலரின் வீடுகள் கடுமையான சேதம் அடைந்துள்ளன. இதில் சிலரின் வீடுகளில் மேற்கூரைகள் இடிந்துள்ளன. மேலும் பலரது வீடுகளில் கதவு, ஜன்னல் மற்றும் பிரிட்ஜ் உள்ளிட்டவை கடுமையாக சேதம் அடைந்துள்ளன.

* 20 கிலோ சல்ப்ரீட் அமிலம்
பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டவுடன் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஆதித்ய பிரணவ் உடலை கைப்பற்றியபோது அந்த வீட்டில் இருந்து கெமிக்கல்கள் நிறைய எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு சல்பிரிட் ஆசிட் 20 கிலோ ஆதித்யா பிரணவ் வாங்கியதாக போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் 2 லிட்டர் கேன், ஒரு லிட்டர் கேன், ஐந்து லிட்டர் கேன்களில் தனித்தனியாக பல்வேறு கெமிக்கல்கள் இருந்துள்ளன. அதனையும் போலீசார் கைப்பற்றி ஆய்வகத்திற்கு அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர்.

* சிலிண்டர் வெடித்தது என புரளி
நேற்று சுமார் 2.30 மணியளவில் பயங்கர சத்தத்துடன் விபத்து ஏற்பட்டபோது, அருகில் இருந்தவர்கள் முதலில் சிலிண்டர் வெடித்து விட்டது எனக் கூறினார்கள். இதனால் முதல் இரண்டு மணி நேரம் வரை வீட்டில் சிலிண்டர் வெடித்து சிறுவன் பலி என அனைவரும் நினைத்துக் கொண்டிருந்தனர். அதன் பிறகு தீயணைப்பு வீரர்கள் உள்ளே சென்று வீட்டில் இருந்த இரண்டு சிலிண்டர்களையும் வெளியே கொண்டு வந்தனர். அதில் ஒரு சிலிண்டர் காலியாகவும், மற்றொரு சிலிண்டரில் முழுவதும் எரிபொருளும் இருந்தது.

இதனால் சிலிண்டர் வெடிக்கவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது. மேலும் சிறுவனின் தந்தை ஹரிஹரன் பேட்டரி வியாபாரம் செய்து வருவதால் பேட்டரியை வைத்து ஏதாவது ஆராய்ச்சி செய்திருப்பார், அல்லது பேட்டரி சார்ஜ் போட்டு வெடித்திருக்கும் என பரவலாக பேசப்பட்டது. ஆனால் அதுபோன்ற நிகழ்வுகளும் ஏற்படவில்லை. அதன் பின்புதான் சிறுவன் கெமிக்கல்களை வைத்து ஏதோ தயாரித்துள்ளார். அதன் மூலம் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது என்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

The post அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டபோது விபரீதம் வீட்டில் மர்ம பொருள் வெடித்து பிளஸ் 2 மாணவன் உடல் சிதறி பலி: கொளத்தூரில் பரபரப்பு சம்பவம் appeared first on Dinakaran.

Tags : Kolathur ,Perambur ,Hariharan ,2nd Main Road ,Kolathur Murugan Nagar ,Shivapriya ,Aditya Pranav ,Villivakkam ,Thirunagar ,2 ,
× RELATED மோடியின் நிழலில் இல்லை என்றால்...