×

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் இன்று பங்குனி தேரோட்டம்

சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் இன்று பங்குனி தேரோட்டம் விமரிசையாக நடைபெற உள்ளது. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி பெருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பங்குனி பெருவிழா, கடந்த 16ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் வேத மந்திரங்கள் முழங்க, நாதஸ்வர, கெட்டிமேள இசை ஒலிக்க பலத்த ஆரவாரத்துடன் பெருவிழா திருக்கொடி ஏற்றப்பட்டது.

இதை தொடர்ந்து, தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் மிக விமரிசையாக இன்று நடைபெற உள்ளது. 4 மாட வீதிகளில் தேரோட்டம் நடைபெறும். சிறப்பு அலங்காரத்துடன் தேரில் எழுந்தருளி கபாலீஸ்வரர், கற்பகாம்பாள் பொதுமக்களுக்கு காட்சி அளிக்க இருக்கிறார்கள்.

தேரோட்டத்தை முன்னிட்டு, மாடவீதிகளில் பல இடங்களில் தொண்டு நிறுவனங்கள், வர்த்தகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பக்தர்களுக்கு நீர்மோர், பானகம், அன்னதானம் வழங்க இருக்கிறார்கள். மேலும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், மயிலாப்பூர் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.

The post மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் இன்று பங்குனி தேரோட்டம் appeared first on Dinakaran.

Tags : Panguni Chariot ,Kapaleeswarar Temple ,Mylapore ,CHENNAI ,Panguni Therotam ,Mylapore Kapaleeswarar temple ,Panguni festival ,Kapaleeswarar Temple, ,
× RELATED ரூ.1.5 கோடி வழிப்பறி: 9 பேர் கைது