×

ஊழல் பல்கலைக்கழகங்களும்… கைதாகும் துணை வேந்தர்களும்… அடுத்தடுத்து குவியும் முறைகேடு புகார்கள்; விசாரணை நடத்தாமல் பதவி நீட்டிப்பு வழங்கும் ஆளுநர்

* சிறப்பு செய்தி
தமிழ்நாட்டில்ஆளுநரின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் பணி நியமனம், பொருட்கள் கொள்முதல் செய்வதில் ஊழல் என பல்வேறு முறைகேடுகள் நடப்பதை ஆசிரியர்கள் சங்கங்கள் வெளிச்சம் போட்டு காட்டு வருகின்றனர். இதற்கு சிறந்த உதாரணம் சேலம் பெரியார் பல்கலைக்கழகம். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக உள்ள ஜெகநாதன் மற்றும் பதிவாளராக இருந்த பதிவாளர் தங்கவேல் மீது பணி நியமனம், பொருட்கள் கொள்முதல், பல்கலைக்கழக வளாகத்தில் சட்டவிரோதமாக தனியார் நிறுவனம் தொடங்கி நிதி முறைகேடு செய்தது என பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினர்.

இதுதொடர்பான தமிழ்நாடு அரசு அமைத்த குழு நடத்திய விசாரணையில் பதிவாளர் தங்கவேல் மீது 8 முறைகேடு புகார்களும், துணை வேந்தர் ஜெகநாதன் மீது 6 முறைகேடு புகார்களும் நிரூபிக்கப்பட்டன. இதையடுத்து துணை வேந்தர் ஜெகநாதன் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவரை, ஆளுநர் ஆர்.என்.ரவி சேலம் சென்று சந்தித்து, துறை தலைவர்கள் அனைவரும் ஜெகநாதனுக்கு ஆதரவு இருக்க வேண்டும் என்று பகிரங்கமாக மிரட்டினார். பதிவாளரை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவிட்டும், துணை வேந்தர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், ஊழலில் சிக்கிய அவருக்கு பிரிவு உபச்சார விழா நடத்தி அனுப்பி வைத்தார்.

இந்த சர்ச்சையே இந்த ஓயாத நிலையில், திருச்சி பாரதிதாசன் பல்கலைகழக துணைவேந்தர் மீது ஊழல் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது. காரைக்குடி அழக்கப்பா பல்கலைகழகத்தில் வணிகவியல் மற்றும் மேலாண்மை துறையின் முன்னாள் தலைவரும், பேராசிரியருமான செல்வம் கடந்த 2021ம் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்கப்பட்டார். தற்போது துணைவேந்தர் செல்வம் பல்வேறு ஊழல்கள் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் 31ம் தேதி பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கம் சார்பில் மேல்மட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு அந்த தீர்மானங்கள் அனைத்தும் முதலில் பாரதிதாசன் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கும், அதனை தொடர்ந்து தமிழ்நாடு ஆளுநர், முதல் அமைச்சர், உயர்கல்வித்துறை அமைச்சர், கல்வித்துறை செயலாளர் என பலதரப்பட்ட அதிகாரிகளுக்கு இந்த மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதில், ‘பல்கலைகழகத்தில் ரூசா என்று சொல்லப்படும் ராஷ்ட்ரிய உச்சட்டர் சிக் ஷா அபியான் என்ற திட்டத்தில் பல கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாகவும். பல்கலைக்கழகத்தின் ருசா இயக்குநர் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் பல்கலைகழகத்தில் 2017க்கு முன்பாக கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ள பல கட்டிடங்களை இந்த ருசா திட்டத்தில் கட்டியதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. அதில் 2016க்கு முன்பு, உடற்கல்வி துறையில் டென்னிஸ் கோர்ட், வாலிபால் கோர்ட், கிரிக்கெட் பிச், இன்டோர் ஸ்டேடியம் போன்றவை இந்த ருசா நிதியில் இருந்து கட்டப்பட்டதாக கணக்கு காட்டப்பட்டு ஊழல் செய்யப்பட்டுள்ளது. இதனை மறைப்பதற்காக அந்தத் துறையின் தலைவருக்கு பதிவாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல் இந்த திட்டத்தின்கீழ் கணினிகள் மற்ற உபகரணங்கள் புதிதாக வாங்கியதாக, பழைய உபகரணங்கள் மற்றும் கணினிகளை இத்திட்டத்தின் கீழ் கணக்கு காட்டப்பட்டுள்ளது. இப்படி பல ஊழல்கள் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பல ஆசிரியர் சங்கங்களும் தங்களுடைய கருத்தை முன் வைத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. இப்படிப்பட்ட ஊழல்களை மறைப்பதற்காக அதில் சம்மந்தபட்ட நபர்களுக்கு ஆட்சிக்குழு உறுப்பினர் பதவி உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வழங்கி துறைகளில் சுழற்சி முறையில் நிரப்பப்பட வேண்டிய இடங்கள் எல்லாம் இதுபோன்ற ஊழலை மறைப்பதற்காக வழங்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த திட்டத்தின்கீழ் ஊழல் செய்துள்ள நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். முதலில் அவர்களை அந்த பதவியில் இருந்து நீக்கி தனிப்பட்ட விசாரணைக்குழு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் தற்போது உருவாக்கப்பட உள்ள துணைவேந்தர் ஆபிசியேட்டிங் கமிட்டியில் ஊழல் செய்த நபர்கள் உறுப்பினராக வந்தால் ருசா திட்டத்தில் ஊழல் செய்த அனைத்து ஆவணங்களும் அழிக்கப்படும். எனவே அந்த கமிட்டியில் இவர்கள் யாரும் இடம்பெறாமல் இருக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன் வைக்கப்பட்டுள்ளது.

இது அரசுக்கு தெரிவிக்கப்பட்டு 1 மாதம் கடந்த நிலையில் இதுவரை எந்தவித விசாரணையோ எதுவும் நடைபெற்றதாக தெரியவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் அதற்கு பதிலாக கடந்த ஜனவரி மாதத்துடன் 3 ஆண்டு பதவிகாலம் முடிந்த நிலையில், அவருடைய பதவிக்காலத்தை மேலும் ஒருவருடத்திற்கு நீட்டிப்பு செய்து ஆளுநர் ரவி உத்தரவிட்டுள்ளார். இந்த பதவி நீட்டிப்புக்கு ஆசிரியர்கள் சங்கம் கடுமையான எதிர்ப்பை முன் வைத்தனர். துணைவேந்தர் பதவிக்கு வந்து அமருவதற்கு சுமார் ரூ.1 கோடி வரை செலவு செய்வதாகவும், அந்த பதவியில் அமர்ந்து தாங்கள் செலவு செய்த தொகைகளை இதுபோன்ற ஊழல்களில் ஈடுபட்டு ஈடுசெய்து கொள்வதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே கடந்த 2018ல் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்திலும் பதிவாளர், தொலைதூரக் கல்வி இயக்குநர், தேர்வு கட்டுப்பாடு அலுவலர் ஆகிய பதவிகளுக்கான நியமனத்தில் முறைகேடு நடந்து இருப்பதால் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதுபோல் தான் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணி நியமனங்களுக்காக லஞ்சம் பெற்ற புகாரில் துணைவேந்தர் கணபதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். எனவே ஒன்றிய, மாநில அரசுகள் இந்த துணை வேந்தர் நியமனத்தில் ஒரு வெளிப்படைதன்மை இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

கடந்த 2018ல் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்திலும் பதிவாளர், தொலைதூரக் கல்வி இயக்குநர், தேர்வு கட்டுப்பாடு அலுவலர் ஆகிய பதவிகளுக்கான நியமனத்தில் முறைகேடு நடந்து இருப்பதால் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்.தற்போது உருவாக்கப்பட உள்ள துணைவேந்தர் ஆபிசியேட்டிங் கமிட்டியில் ஊழல் செய்த நபர்கள் உறுப்பினராக வந்தால் ருசா திட்டத்தில் ஊழல் செய்த அனைத்து ஆவணங்களும் அழிக்கப்படும். எனவே அந்த கமிட்டியில் இவர்கள் யாரும் இடம்பெறாமல் இருக்க வேண்டும்.

The post ஊழல் பல்கலைக்கழகங்களும்… கைதாகும் துணை வேந்தர்களும்… அடுத்தடுத்து குவியும் முறைகேடு புகார்கள்; விசாரணை நடத்தாமல் பதவி நீட்டிப்பு வழங்கும் ஆளுநர் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Salem Periyar University ,Salem ,Dinakaran ,
× RELATED சேலம் பெரியார் பல்கலை சிண்டிகேட்...