×

நாடாளுமன்ற தேர்தலில் போட்டி சென்னையில் முதல் நாளில் 4 பேர் வேட்புமனு தாக்கல்: திமுக – அதிமுக நாளை மனுதாக்கல்?

சென்னை, மார்ச் 21: நாடாளுமன்ற தேர்தலையொட்டி நேற்று வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நிலையில் முதல்நாளில் சென்னையில் 4 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். ஆர்வமுடன் சுயேச்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்.19ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ளிட்ட 40 தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. அதன்படி, தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆட்சியர் அலுவலகங்கள், கோட்டாட்சியர் அலுவலகங்களின் வேட்பாளர்கள் தங்களின் வேட்பு மனுவினை தாக்கல் செய்வதற்கான் ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது.

குறிப்பாக, வடசென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள வடக்கு வட்டார துணை ஆணையர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரியாக கட்டா ரவிதோகா மற்றும் உதவி தேர்தல் அதிகாரி தனலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் வடசென்னையில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். அதேபோல், தென்சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு அடையாறு டாக்டர் முத்துலட்சுமி சாலையில் உள்ள தெற்கு வட்டார துணை ஆணையர் அலுவலகத்திற்கு தேர்தல் அதிகாரியாக எம்.பி.அமித் மற்றும் உதவி தேர்தல் அதிகாரியாக செந்தில்குமார் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் தென்சென்னை தொகுதியில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் தங்களின் வேட்புமனுவை தாக்கல் செய்து வருகின்றனர்.

இதேபோல், மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு ஷெனாய் நகரில் உள்ள வட்டார துணை ஆணையர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரியாக கே.ஜெ.பிரவீன்குமார் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி கவிதா நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, இவர்களிடமும் மத்திய சென்னையில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களின் வேட்புமனுவை தாக்கல் செய்யலாம். அதன் அடிப்படையில், வேட்பு மனு தாக்கல் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை பெறப்படுகின்றன. வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான முதல் நாளான நேற்றைய தினம் சென்னையில் உள்ள இந்த 3 துணை ஆணையர் அலுவலகங்களுக்கும் சுயேச்சை வேட்பாளர்களே ஆர்வமுடன் வந்திருந்து தங்களின் வேட்புமனுவை தாக்கல் செய்தனர். அதன்படி, வடசென்னை தொகுதிக்கு சுயேச்சை வேட்பாளர் மாரிமுத்து மற்றும் தாக்கம் கட்சி சார்பில் அஜித் குமாரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இவர்களில் மாரிமுத்து நாடாளுமன்ற தேர்தலில் 5வது முறையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

மத்திய சென்னை தொகுதியை பொறுத்தவரை நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திகேயன் மற்றும் தாக்கம் கட்சி என்ற பெயரில் செல்வகுமார் என்ற வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இதுதவிர தென் சென்னை தொகுதியில் ஒருவர் கூட நேற்றைய தினம் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. வேட்பு மனு தாக்கலின் போது வேட்பாளருடன் 5 பேர் வரை தேர்தல் நடத்தும் அலுவலர் அறைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். மேலும், ஒரு வேட்பாளர் அதிகபட்சமாக 4 மனுக்களை தாக்கல் செய்து; இரண்டு தொகுதிகளில் போட்டியிடலாம். வேட்புமனு தாக்கல் செய்யும் நபர், டெபாசிட் தொகையாக பொது பிரிவினருக்கு ரூ.25 ஆயிரமும், எஸ்.சி/ எஸ்.டி பிரிவினருக்கு ரூ.12,500 செலுத்த வேண்டும்.

தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலக வளாகத்தில் இருந்து 100 மீட்டர் வரையில், வேட்புமனு தாக்கலின்போது வேட்பாளர்கள் 2 வாகனங்களை மட்டும் பயன்படுத்த வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ள நிலையில் அதற்கான தடுப்பு வேலிகளும் அமைக்கப்பட்டிருந்தன. இதுதவிர, வேட்புமனு தாக்கல் செய்யவரும் வேட்பாளர்கள் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வீடியோ பதிவும் செய்யப்படுகின்றனர். வேட்புமனுவை ஆன்லைன் மூலமாகவும் பூர்த்தி செய்து அதனை நகல் எடுத்து நேரடியாக தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வந்து சமர்ப்பிக்க வேண்டும். அரசியல் கட்சி வேட்பாளராக இருந்தால் அவருக்கு ஒருவர் முன்மொழிந்தால் போதும்; அதுவே சுயேச்சையாக இருந்தால் அவருக்கு 10 பேர் முன்மொழிகின்றனர்.

வேட்புமனு தாக்கல் வரும் 27ம் தேதி வரை நடப்பதால் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்படலாம் என அதிகாரிகள் தரப்பில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தமிழகத்தின் பிரதான கட்சிகளாக இருக்கக்கூடிய திமுக – அதிமுக போன்ற முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் நாளை வேட்புமனு தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வேட்பு மனு மீதான பரிசீலனை மார்ச் 28ம் தேதி நடக்கிறது. மனுக்களை திரும்ப பெற மார்ச் 30 தேதி கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

சோதனை தீவிரம்
வேட்பு மனு தாக்கல் செய்ய தேர்தல் அலுவலகத்திற்கு வருபவர்கள் சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். பிரதான வாசல்களில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தேர்தல் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மண்டல அலுவலக நுழைவாயிலில் அடையாள அட்டையை அதிகாரிகள் சரிபார்த்த பிறகே உள்ளே நுழைய அனுமதிக்கின்றனர்.

The post நாடாளுமன்ற தேர்தலில் போட்டி சென்னையில் முதல் நாளில் 4 பேர் வேட்புமனு தாக்கல்: திமுக – அதிமுக நாளை மனுதாக்கல்? appeared first on Dinakaran.

Tags : Parliamentary ,Chennai ,DMK ,AIADMK ,Chennai, ,Dinakaran ,
× RELATED திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு...