×

சக்தி குறித்து பேச்சு ராகுல் மீது தேர்தல் கமிஷனில் பாஜ புகார்

புதுடெல்லி: சக்தி குறித்து பேசிய ராகுல்காந்தி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் கமிஷனில் பா.ஜ புகார் அளித்துள்ளது. இந்திய ஒற்றுமை நீதியாத்திரையின் நிறைவு நாளில் மும்பையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, பிரதமர் மோடிக்கு எதிராக நான் போராடவில்லை. அவரது சக்திக்கு(அதிகாரம்) எதிராகத்தான் போடுகிறேன்’ என்று கூறினார். இந்தநிலையில் நேற்று தலைமை தேர்தல் கமிஷனில் ராகுல்பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜ தலைவர்கள் ஹர்தீப் சிங் பூரி, ஓம் பதக் ஆகியோர் புகார் அளித்துள்ளனர்.

அந்த புகாரில்,’சக்தியுடன் சண்டை என்று ராகுல்காந்தி கூறியது இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் தீய நோக்கத்துடன் கூறியது ஆகும். மேலும் மின்னணு எந்திரங்கள் குறித்து தவறான தகவல்களை அவர் தெரிவித்தார். எனவே ராகுல் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து நேரடியாக வழக்குப்பதிவு செய்து நிபந்தனையற்ற பொது மன்னிப்பு கேட்கவும், அவரது பேச்சை வாபஸ் பெறவும் உத்தரவிடவேண்டும்’ என்று மனு அளித்துள்ளனர்.

* ராகுலுக்கு எதிரான கைது வாரண்ட்டிற்கு தடை

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீது 2019ல் அவதூறாக பேசியதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி மீது ஜார்க்கண்ட் மாநிலம் சாய்பாசாவில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ராகுலுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து ராகுல் தாக்கல் செய்த மனுவை விசாரித்த ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் கைது வாரண்டிற்கு இடைக்காலத் தடை விதித்தது.

* ராகுல், கெஜ்ரிவால், அகிலேஷுக்கு எதிரான வழக்குகள் ரத்து

ஒன்றிய அரசு சில தொழில் அதிபர்களின் கடனை தள்ளுபடி செய்துவிட்டதாக அரசியல் தலைவர்கள் ராகுல், கெஜ்ரிவால், அகிலேஷ்யாதவ் கருத்து தெரிவித்துள்ளனர். அவர்கள் அளித்த தவறான தகவல் குறித்து நடவடிக்கை எடுக்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிட கோரி சமூக ஆர்வலர் சுர்ஜித்சிங் யாதவ் என்பவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்ற தற்காலிக தலைமை நீதிபதி மன்மோகன், நீதிபதி மன்மீத் பிஎஸ் அரோரா ஆகியோர் அடங்கிய அமர்வு,’ அரசியல் தலைவர்களின் பேச்சால் தொழில்துறையினர் பாதிக்கப்பட்டால் அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள். எனவே இந்திய வாக்காளர்களின் மனதை குறைத்து மதிப்பிட வேண்டாம். அவர்கள் மிகவும் புத்திசாலிகள். யார் உண்மையைப் பேசுகிறார்கள், யார் பேசவில்லை என்பது அவர்களுக்குத் தெரியும். இதில் எங்களை ஈடுபடுத்தாதீர்கள்’ என்று கூறி மனுவைதள்ளுபடி செய்தனர்.

The post சக்தி குறித்து பேச்சு ராகுல் மீது தேர்தல் கமிஷனில் பாஜ புகார் appeared first on Dinakaran.

Tags : BJP ,Election Commission ,Rahul ,New Delhi ,Rahul Gandhi ,Mumbai ,Indian Unity Justice Yatra ,Modi ,
× RELATED மதம், சாதி அடிப்படையில் பிரிவினையை...