×

நத்தம் அருகே ஆண்கள் ஸ்பெஷல் திருவிழா 50 ஆடுகளை பலியிட்டு கமகமக்கும் கறி விருந்து

*3 ஆயிரம் பேர் பங்கேற்பு

நத்தம் : நத்தம் அருகே ஆண்கள் மட்டும் பங்கேற்ற கோயில் திருவிழாவில் 50 ஆடுகளை பலியிட்டு கமகமக்கும் கறி விருந்து தயார் செய்து 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே உலுப்பக்குடி கிராமத்தில் அமைந்துள்ள வேட்டைக்காரன் சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் வினோத திருவிழா நடைபெறும்.

இவ்விழாவின்போது பொதுமக்கள் நேர்த்திக்கடனாக வழங்கிய ஆடுகளை பலியிட்டு கறி விருந்து தயார் செய்து பொதுமக்களுக்கு பிரசாதமாக வழங்குவர். இந்த ஆண்டு கோயில் திருவிழா நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதையொட்டி ஊர் மக்களால் நேர்த்திக்கடனாக வழங்கப்பட்ட 50 கிடாக்களை சுவாமிக்கு பலியிட்டு 100 சிப்பம் அரிசியில் கமகமக்கும் கறி விருந்தை தயார் செய்தனர்.

முன்னதாக வேட்டைக்காரன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து கறி விருந்து படையலிட்டு சுவாமி வழிபாடு நடந்தது.பின்னர் காலை 6 மணி முதல் கறி விருந்து அன்னதானமாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆண்கள் மட்டும் பாத்திரங்களில் வாங்கி சென்று குடும்பத்தாரோடு சாப்பிட்டு மகிழ்ந்தனர். 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கறி விருந்து வழங்கப்பட்டது.

The post நத்தம் அருகே ஆண்கள் ஸ்பெஷல் திருவிழா 50 ஆடுகளை பலியிட்டு கமகமக்கும் கறி விருந்து appeared first on Dinakaran.

Tags : Nattam ,Kamagamakum ,Nattam, Dindigul District ,
× RELATED விஷம் குடித்த விவசாயி சிகிச்சை பலனின்றி சாவு