×

பரனூர் சுங்கச்சாவடியில் அதிரடி சோதனை; வெளிமாநில பதிவெண் பேருந்து பறிமுதல்

சென்னை: பரனூர் சுங்கச்சாவடியில் நேற்றிரவு முதல் இன்று அதிகாலை வரை தமிழகத்தில் இயங்குவதற்கு தடை விதிக்கப்பட்ட வெளிமாநில பதிவெண்கள் கொண்ட தனியார் ஆம்னி பேருந்துகள் இயங்குகிறதா என்று வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இச்சோதனையில், நாகாலாந்து மாநில பதிவெண் கொண்ட தனியார் ஆம்னி பேருந்து பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னையில் இருந்து பல்வேறு தென்மாவட்ட பகுதிகளுக்கு நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் ஏராளமானவை வெளிமாநிலங்களில் பதிவு செய்யப்பட்டவை. வெளிமாநில பதிவெண்கள் கொண்ட தனியார் ஆம்னி பேருந்துகளால் தமிழக அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டு வந்துள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் வெளிமாநில பதிவெண் கொண்ட தனியார் ஆம்னி பேருந்துகள் இயங்குவதற்கு போக்குவரத்து ஆணையர் மூலம் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் வெளிமாநில பதிவெண்ணுடன் இயங்கி வந்த 540 பேருந்துகள் இயக்கப்பட மாட்டாது என்று தனியார் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், செங்கல்பட்டு அருகே பரனூர் சுங்கச்சாவடியில் நேற்றிரவு முதல் இன்று அதிகாலை வரை போக்குவரத்து ஆணையரின் உத்தரவுபடி, சென்னையில் இருந்து தென்மாவட்ட பகுதிகளுக்கு செல்லும் அனைத்து தனியார் ஆம்னி பேருந்துகளிலும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஆய்வு நடத்தி, அதிரடி சோதனை நடத்தினர். இந்த ஆய்வில், அந்த தனியார் ஆம்னி பேருந்துகளின் சேசிஸ் நம்பர் சரியாக உள்ளதா, வெளிமாநில பதிவெண் கொண்ட பேருந்துகளில் தமிழக பயணிகள் செல்கின்றனரா என்பதையும் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு நடத்தினர்.

இந்த ஆய்வின்போது, இன்று அதிகாலை சென்னையில் இருந்து தேனி மாவட்டத்துக்கு சென்ற நாகாலாந்து மாநில பதிவெண் கொண்ட தனியார் ஆம்னி பேருந்து பறிமுதல் செய்யப்பட்டது. பிற ஆம்னி பேருந்துகளிலும் அதிரடி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சென்னை சரக இணை போக்குவரத்து ஆணையர் (செயலாக்கம்) சுரேஷ் தலைமையில் செங்கல்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலர் (பொறுப்பு) சுந்தரமூர்த்தி மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் உள்பட பல்வேறு அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டனர்.

The post பரனூர் சுங்கச்சாவடியில் அதிரடி சோதனை; வெளிமாநில பதிவெண் பேருந்து பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Paranur ,CHENNAI ,Paranur tollbooth ,Tamil Nadu ,Nagaland ,Dinakaran ,
× RELATED தென் மாவட்ட மக்கள் சொந்த ஊர் பயணம்...