×

மேட்டுப்பாளையத்தில் திருமண மண்டபங்கள், அடகு கடைகளுக்கு கட்டுப்பாடு

 

மேட்டுப்பாளையம், மார்ச் 20: தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதனை தேர்தல் ஆணையம் கடந்த 16ம் தேதி அறிவித்தது. அதனைத் தொடர்ந்து அன்றைய தினம் முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இதனை தொடர்ந்து மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அச்சகங்கள், திருமண மண்டபங்கள், தங்கும் விடுதிகள், அடகு கடை உரிமையாளர்கள் உடனான ஆலோசனை கூட்டம் நேற்று சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் ஜெயபால் தலைமையில் நடைபெற்றது.

தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் பாலமுருகன் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அச்சகங்களில் நோட்டீஸ்கள், வால் போஸ்டர்கள் அச்சடிக்க வழங்குவோரின் முகவரி, செல்போன் எண் மற்றும் அச்சிடும் அச்சகத்தின் பெயர், செல்போன் எண் கண்டிப்பாக அச்சிட வேண்டும். இதற்கு அரசின் விதிமுற்றைப்படி முன் அனுமதி பெற வேண்டும்.

திருமண மண்டபங்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் திருமணம் போன்ற விசேஷங்கள் நடத்த எவ்வித தடையும் இல்லை. அதேவேளையில் கட்சி சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிகள் முன் அனுமதி பெற்றே நடத்தப்பட வேண்டும். பணப்பட்டுவாடா, பரிசு பொருள் விநியோகம் இருந்தால் உடனடியாக காவல்துறை, வட்டாட்சியருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அரசு வழங்கியுள்ள அடையாள அட்டைகளை பெற்ற பிறகே தங்க அனுமதிக்க வேண்டும். தேர்தலுக்கு 48 மணி நேரத்திற்கு முன்னர் எவரையும் தங்க அனுமதிக்கக்கூடாது.

நகை அடகு கடைகளில் டோக்கன்கள் மூலமாக பரிசுப்பொருள் விநியோகம், நகை கடன் தள்ளுபடி உள்ளிட்ட எவ்வித சட்டவிரோத செயல்களிலும் ஈடுபடக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. நிகழ்ச்சியில் தேர்தல் பிரிவு அதிகாரிகள் மற்றும் அச்சகங்கள், திருமண மண்டபங்கள், தங்கும் விடுதிகள், நகை அடகு கடை உரிமையாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

The post மேட்டுப்பாளையத்தில் திருமண மண்டபங்கள், அடகு கடைகளுக்கு கட்டுப்பாடு appeared first on Dinakaran.

Tags : Mettupalayam ,Tamil Nadu ,Election Commission ,
× RELATED கோடை சீசனை ஒட்டி உதகை –...