சென்னை: போதை பொருட்களுக்கு எதிரான காவல்துறையினரின் ஒருவார சிறப்பு சோதனையில், சென்னையில் ஒரே வாரத்தில் 121 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, 60 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். சென்னையில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் “போதை தடுப்புக்கான நடவடிக்கை” மூலம் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, சென்னையில் உள்ள காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் கடந்த 12ம் தேதி முதல் 18ம் தேதி வரை வரையிலான ஒரு வாரமாக தீவிரமாக கண்காணிக்கப்பட்டதில், 34 வழக்குகள் பதியப்பட்டு, 60 குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் 120.62 கிலோ கஞ்சா, 364 வலி நிவாரண மாத்திரைகள், ரொக்கம் ரூ.12,700, 11 செல்போன்கள், 10 இருசக்கர வாகனங்கள், 2 ஆட்டோக்கள் மற்றும் 3 இலகரக வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கடந்த 2021ம் ஆண்டு முதல் நடப்பாண்டு இதுவரையில், கஞ்சா மற்றும் போதை பொருட்கள் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்ட 1,175 வழக்குகளில் சம்பந்தப்பட்ட 2,298 குற்றவாளிகளின் சொத்து மற்றும் வங்கி கணக்கு விவரங்கள் சேகரித்து, சட்டரீதியாக முடக்கும் பணி தீவிரபடுத்தப்பட்டு, இதுவரையில் மொத்தம் 1186 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் ஜனவரி 1ம் தேதி முதல் மார்ச் 18ம் தேதி வரை, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் வழக்கில் கைது செய்யப்பட்ட 55 குற்றவாளிகள், காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில், குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
The post ஒருவார சிறப்பு சோதனையில் போதைப்பொருள் கடத்திய 60 குற்றவாளிகள் சிக்கினர்: 121 கிலோ கஞ்சா பறிமுதல் appeared first on Dinakaran.