×

பள்ளி மாணவர்களை அழைத்து வாகன பேரணி பிரதமர் மோடி மீது திமுக புகார்

* ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீதும் குற்றச்சாட்டு

* நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி உறுதி

சென்னை: கோவையில் பள்ளி மாணவர்களை அழைத்து வாகன பேரணி நடத்திய விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி மீது தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக புகார் அளித்தது. ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனியார் நிகழ்ச்சியில் மதத்தின் பெயரில் வாக்கு சேகரித்தது குறித்தும் குற்றச்சாட்டு கூறப்பட்டது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு உறுதி அளித்துள்ளார்.

கோவையில் நேற்று முன்தினம் பிரதமர் மோடி பங்கேற்ற ரோடு ஷோவில் சீருடையுடன் அரசு பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். பாஜ நடத்திய பேரணியில் பள்ளி மாணவர்களை பயன்படுத்தியது தேர்தல் நடத்தை விதி மீறலாகும் என அனைத்துக் கட்சியினரும், சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில், கோவையில் நேற்று முன்தினம் நடந்த பிரதமரின் வாகன பேரணியின் போது பள்ளி மாணவர்களை பயன்படுத்தியது தொடர்பாகவும், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் நடந்த ஒரு தனியார் நிகழ்ச்சியில் மதத்தின் பெயரில் ஓட்டு சேகரித்தது தொடர்பாகவும் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பாக திமுக செய்தி தொடர்பாளர் வழக்கறிஞர் சரவணன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை நேரில் சந்தித்து புகார் மனுவை அளித்தார்.

பின்னர் வழக்கறிஞர் சரவணன் நிருபர்களிடம் கூறியதாவது: திமுக சார்பாக இரண்டு புகார்கள் தலைமை தேர்தல் அதிகாரியிடம் வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் நிர்மலா சீதாராமன் சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் மதத்தின் பெயரால் ஓட்டு சேகரித்துள்ளார். “கோயில்களை அழிக்கக்கூடிய, கோயில்களையே சுரண்டக்கூடிய மதத்தையே அழிப்பேன் என்று கூறும் கட்சிக்கெல்லாம் ஏன் ஓட்டு போடுகிறீர்கள்” என நிர்மலா சீதாராமன் பேசி இருக்கிறார். தேர்தல் நன்னடத்தை விதி, மதத்தின் பெயரால் ஓட்டு கேட்க கூடாது என கூறுகிறது. ஆனால் அதை மீறி வேண்டுமென்றே நிர்மலா சீதாராமன் பேசி இருக்கிறார்.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் அடிப்படையில் மதத்தின் பெயரால் ஓட்டு கேட்க கூடாது என்றும் மதத்தின் பெயரால் பிரசாரம் செய்யக்கூடாது என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. அதையும் நிர்மலா சீதாராமன் மீறி இருக்கிறார். இந்த சட்ட மீறல்களுக்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளித்துள்ளோம். இதையெல்லாம் பரிசீலனை செய்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி கூறி இருக்கிறார். அதேபோல பிரதமர் மோடி நேற்று முன்தினம் கலந்துகொண்ட வாகன பேரணியில் பள்ளி மாணவர்கள் அழைக்கப்பட்டு அவர்களுக்கு காவி துண்டுகள் போடப்பட்டு பாஜவை புகழ்ந்து பாடல்கள் பாடி இருக்கிறார்கள்.

குழந்தைகளை எந்தவித தேர்தல் பிரசாரத்திலும் பயன்படுத்தக்கூடாது என்று கூறப்பட்டு இருக்கக்கூடிய நிலையில் பாஜ குழந்தை முதல் பெரியவர்கள் வரை அவர்களுக்கு ஆதரவு இருக்கிறது என்று காட்டுவதற்காக தேர்தல் நடத்தை விதியை மீறி இருக்கிறது. மேலும் குழந்தை தொழிலாளர்கள் தடை சட்டத்தின்படியும் இது குற்றமாகும். இதை ஏற்பாடு செய்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் அதிகாரியிடம் வலியுறுத்தி இருக்கிறோம். தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி உறுதி அளித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

 

The post பள்ளி மாணவர்களை அழைத்து வாகன பேரணி பிரதமர் மோடி மீது திமுக புகார் appeared first on Dinakaran.

Tags : DMK ,PM Modi ,Union Finance Minister ,Nirmala Sitharaman ,Chief Electoral Officer ,Chennai ,Modi ,Coimbatore ,
× RELATED அதிக அளவில் மக்களை வாக்களிக்க வைக்க...