சென்னை,மார்ச்19: பெண்கள் அங்கீகாரம் பெறுவதற்கு, ஆண்களைவிட 50% அதிகமாக உழைக்க வேண்டி உள்ளது என நடிகர் சூர்யா கருத்து தெரிவித்துள்ளார். அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகியவற்றை உள்ளட்டக்கிய (எஸ்.டி.இ.எம்) உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி படிப்புகளில் பெண்கள் அதிகளவில் பங்குபெற வைக்க வேண்டும் என்பதை கருப்பொருளாக கொண்டு நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளை உள்ளிட்ட தன்னார்வ அமைப்புகள் சார்பாக சென்னை, கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் EMPOW HER – 2024 சர்வதேச 2 நாள் கருத்தரங்கு நேற்று தொடங்கியது.
பல்வேறு தலைப்புகளில் முக்கிய கல்வியாளர்கள், பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்க உள்ள இந்த கருத்தரங்கை நடிகர் சூர்யா நேற்று தொடங்கி வைத்து மாணவிகள் மத்தியில் பேசியதாவது: அகரம் ஆரம்பித்து 15 வருடங்களில் 6 ஆயிரம் மாணவ, மாணவிகள் படித்துள்ளனர், சிலர் படித்தும் வருகின்றனர். அதில் 70% பேர் பெண்கள். 15 வருடங்களாக இது தொடர்ந்து வருகிறது.
எஸ்.டி.இ.எம் படிப்புகளில் பெண்களின் பங்களிப்பு குறைவாக உள்ளது என்பதும், உலகம் முழுவதும் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி படிப்புகளில் பெண்களின் பங்களிப்பு 30% குறைவாக உள்ளதாக ஆராய்ச்சிகள் கூறுகிறது. எஸ்.டி.இ.எம் என்பது புதிய கண்டுபிடிப்புகளுக்கானது மற்றும் அதனை அடிப்படையாக கொண்டது. அதற்கு ரோல் மாடல்ஸ் இல்லை என்றும் சிலர் காரணமாக கூறுகின்றனர்.
உலகளவில் பல்வேறு கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்ததது, கண்டுபிடிப்புகளில் முக்கிய பங்களித்தது பெண்கள்தான். ஏராளமான கண்டுபிடிப்புகளில் பெண்களின் பங்களிப்பு பெரும்பான்மையாக உள்ளது. ஆனால், வழக்கம்போல் அவற்றில் ஆண்கள் மட்டுமே கவனிக்கப்பட்டு, பாராட்டப்பட்டு பேசப்படுகிறார்கள். என்னை சுற்றி உள்ள பெண்களை சக்தி வாய்ந்தவர்களாக பார்த்துள்ளேன்.
அதிகளவில் படிக்கும் பெண்கள் தொடர்ந்து வேலை செய்ய முடியாமல், வேலைக்கு அனுப்பாமல், குழந்தை பிறந்ததும் மேற்கொண்டு தொடர விடாமல் சமுதாயம் பலவழிகளில் தடுக்கிறது. அதனையெல்லாம் தகர்த்துதான் பெண்கள் முன்னேறி வருகின்றனர். இந்திரா நூயி புத்தகத்தை வாங்கி அனைவரும் படியுங்கள். பெண்கள் அங்கீகாரம் பெறுவதற்கு ஆண்களைவிட 50% அதிகமாக உழைக்க வேண்டி உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
The post பெண்கள் அங்கீகாரம் பெறுவதற்கு ஆண்களைவிட 50% அதிகம் உழைக்க வேண்டி உள்ளது: நடிகர் சூர்யா கருத்து appeared first on Dinakaran.