×

அரசியல் கட்சி மறைந்த தலைவர்களின் சிலையை மறைக்க வேண்டியதில்லை வேலூர் கலெக்டர் தகவல்

வேலூர், மார்ச் 19: அரசியல் கட்சி மறைந்த தலைவர்களின் சிலையை மறைக்க வேண்டியதில்லை என்று கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து வேலூர் கலெக்டர் சுப்புலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்திய தேர்தல் ஆணையத்தால் இந்திய பொதுத்தேர்தல்கள் அறிக்கை வெளியிடப்பட்ட நாள் முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துவிடுகிறது. தேர்தல் நடத்தை விதிகள் பொதுத்தேர்தலை சுமூகமாகவும், ஆரோக்கியமாகவும் நடத்திட உதவுகிறது. அனைத்து கட்சிகளையும் சமமாக பாவிக்கும் நடைமுறையை உறுதி செய்கிறது. மேலும் தேர்தல் முறைகளின் மீது வாக்காளர்களிடையே நம்பிக்கையை மேம்படுத்திட உதவுகிறது.

அரசு அலுவலர்கள் தவறாக பயன்படுத்தபடுவதை தடுக்கிறது. வாக்காளர்களைக் கவரும் விதமாகவோ, அச்சுறுத்தப்படுவதையோ அல்லது வாக்குக்கு பணம் அளிக்கப்படுவதையோ அல்லது இதுபோன்ற தேர்தல் குற்றங்களைத் தடுத்திட தேர்தல் நடத்தை விதிமுறைகள் பேருதவி புரிகின்றன. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுல்படுத்தப்பட்ட நாள் முதல் எந்த ஒரு அரசு அலுவலங்களிலும் அரசியல் கட்சிகள் சார்ந்த படங்கள், காலண்டர்கள், நலத்திட்ட ஸ்டிக்கர்கள் வைத்துக்கொள்ளக்கூடாது. அவை உடனடியாக அகற்றப்பட வேண்டும். அரசியல் கட்சியினை சார்ந்த மறைந்த தலைவர்களின் சிலையினை மறைத்திட வேண்டியதில்லை. ஆனால் அவர்களின் சிலைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சியின் சின்னங்கள், கல்வெட்டுகள் கட்டாயம் மறைக்கப்பட்டு இருக்க வேண்டும். அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும் தங்களது தொண்டர்களால் பிற கட்சியினர் ஏற்பாடு செய்யும் கூட்டங்களுக்கும், ஊர்வலங்களுக்கும் எவ்வித இடையூறும் தடங்கலும் ஏற்படாது என்பதை உறுதிசெய்ய வேண்டும்.

ஒரு கட்சியைச் சேர்ந்த தொண்டர்களோ ஆர்வலர்களோ பிற கட்சியினரின் பொதுக் கூட்டங்களில் நேரடியாகவோ, எழுத்து மூலமாகவோ கேள்வி கேட்டோ தங்கள் கட்சியின் அச்சிட்ட துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தோ இடையூறு செய்யக்கூடாது. ஒரு கட்சியினர் ஓரிடத்தில் பொதுக்கூட்டத்தினை நடத்திக் கொண்டிருக்கும்போது அவ்வழியாக பிற கட்சியினரின் ஊர்வலங்கள் நடத்தப்படக் கூடாது. ஒரு கட்சியினர் ஒட்டிய சுவரொட்டிகளை மற்றொரு கட்சியின் தொண்டர்கள் அகற்றக்கூடாது. தேர்தல் பறக்கும்படை மற்றும் நிலையான கண்காணிப்புக்குழுக்களால் பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டால் அவற்றை திரும்பபெற உரிய ஆதாரங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மேல்முறையீட்டு அலுவலரை அணுகி தீர்வு பெறலாம். எனவே பொதுமக்கள், அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் நடத்தை விதிகளை தவறாமல் பின்பற்றி சுதந்திரமாக மற்றும் நேர்மையாக தேர்தலை நடத்திட முழு ஒத்துழைப்பை நல்கிட வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

The post அரசியல் கட்சி மறைந்த தலைவர்களின் சிலையை மறைக்க வேண்டியதில்லை வேலூர் கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Vellore Collector ,Vellore ,Collector ,Subbulakshmi ,Election Commission of India ,Indian General Elections ,
× RELATED வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே...