×

கம்பி எண்ணும் மின்வாரிய அதிகாரிகள் ரூ.300 லஞ்சம் வாங்கியதால் 5 ஆண்டு சிறை தண்டனை

கிருஷ்ணகிரி: வீட்டு மின் இணைப்பிற்கு லஞ்சம் பெற்ற வழக்கில் மின்வாரிய அதிகாரிகள் 2 பேருக்கு, 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே குள்ளனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர் கடந்த 2009ம் ஆண்டு, தன் மாமியார் வீட்டிற்கு மின் இணைப்பு கேட்டு, போச்சம்பள்ளி மின்வாரிய அலுவலகத்தில் மனு அளித்தார். அப்போது, அங்கு பணிபுரிந்த தொழில்நுட்ப உதவியாளரான திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி(59) என்பவரும், உதவியாளராக இருந்த பாளேத்தோட்டம் கிராமத்தைச் சேர்ந்த சுதாகர்(42) என்பவரும், மின் இணைப்பு வழங்க லஞ்சம் கேட்டுள்ளனர். ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத பாலகிருஷ்ணன், கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகாரளித்தார்.

இதையடுத்து, கடந்த 2009ம் ஆண்டு ஜனவரி மாதம் பாலகிருஷ்ணனிடம் ரூ.300 லஞ்சம் வாங்கியபோது ராமமூர்த்தி மற்றும் சுதாகரை போலீசார் கைது செய்தனர். 14 ஆண்டுகளாக கிருஷ்ணகிரி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், ராமமூர்த்தி, சுதாகருக்கு தலா 5 ஆண்டு சிறையும், தலா ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். ராமமூர்த்தி தற்போது உத்தனப்பள்ளியிலும், சுதாகர் ஓசூரிலும் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் வணிக ஆய்வாளர்களாக பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post கம்பி எண்ணும் மின்வாரிய அதிகாரிகள் ரூ.300 லஞ்சம் வாங்கியதால் 5 ஆண்டு சிறை தண்டனை appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Krishnagiri court ,Balakrishnan ,Kunniyur ,Bochampalli ,Krishnagiri district ,
× RELATED கிருஷ்ணகிரியில் விவசாயி மாயம்