×
Saravana Stores

வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி அதிமுக நகர செயலாளர் கல்லால் அடித்துக்கொலை: டீ கடைக்காரர் கைது: மனைவிக்கு வலை

செஞ்சி: வேலை வாங்கி தருவதாக கூறி பணம் மோசடி செய்த செஞ்சி அதிமுக நகர செயலாளரை கல்லால் அடித்து கொன்ற டீக்கடைக்காரரை போலீசார் கைது செய்தனர். மனைவியை போலீசார் தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சுப்புராயன் கவுண்டர் தெருவில் வசிப்பவர் வெங்கடேசன் (47). இவர் செஞ்சி அதிமுக நகர செயலாளராக இருந்து வருகிறார். அந்த பகுதியில் உள்ள காரை கிராமத்தைச் சேர்ந்தவர் கரிவரதன் மகன் ராஜேந்திரன் (44). இவரது மனைவி கல்பனா (36).

இவர்கள் செஞ்சி திருவண்ணாமலை சாலையில் ஸ்டேட்பேங்க் எதிரில் டீக்கடை நடத்தி வருகின்றனர். கடந்த அதிமுக ஆட்சியில் ராஜேந்திரன் மனைவி கல்பனாவுக்கு அங்கன்வாடி பணியாளர் வேலை வாங்கித் தருவதாக கூறி ராஜேந்திரனிடம் வெங்கடேசன் பணம் பெற்றுள்ளார். ஆனால் வெங்கடேசன் வேலை வாங்கித் தராமலும், பணத்தை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். இதுதொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 10.30 மணி அளவில் செஞ்சி திருவண்ணாமலை சாலையில் உள்ள ஸ்டேட் பேங்க் எதிரில் வெங்கடேசன் ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்காக சென்று உள்ளார். அப்போது வெங்கடேசனுக்கும் ராஜேந்திரனுக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. இதில் கோபம் அடைந்த ராஜேந்திரன் வெங்கடேசனை கீழே தள்ளி கட்டையால் தாக்கியுள்ளார்.

மயங்கி கீழே விழுந்தவர் மீது தலையில் கருங்கல்லால் கொலைவெறியுடன் தாக்கியதில் ரத்தவெள்ளத்தில் மயங்கி கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த செஞ்சி போலீசார் அவரை மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு நேற்று மாலை வெங்கடேசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ராஜேந்திரனை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக இருக்கும் கல்பனாவை தேடி வருகின்றனர்.

The post வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி அதிமுக நகர செயலாளர் கல்லால் அடித்துக்கொலை: டீ கடைக்காரர் கைது: மனைவிக்கு வலை appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Senchi ,Villupuram District ,Senchi Subpurayan ,
× RELATED செஞ்சி, வேப்பூர் வார சந்தையில் ரூ.10 கோடிக்கு ஆடுகள் விற்பனை