×

காட்டு தீ ஏற்படாமல் தடுக்க 250 கி.மீ தூரத்திற்கு தீத்தடுப்பு கோடுகள்: 40 ஊழியர்கள் நியமனம்

ஊட்டி: முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பகுதிகளில் காட்டு தீ ஏற்படாமல் தடுக்க 250 கி.மீ தூரத்திற்கு தீத்தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டுள்ளது. 40 தீத்தடுப்பு ஊழியர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஊட்டி அருகேயுள்ள, முதுமலை புலிகள் காப்பகத்தில் ஆசியாவிலேயே புலிகள் அதிகமாக காணப்படுகிறது. இங்கு புலிகள் மட்டுமின்றி காட்டு யானைகள், சிறுத்தைகள், கரடி, காட்டு எருமைகள், பல்வேறு வகையான மான்கள், முதலைகள், பல்வேறு வகையான பறவைகள், மான்கள் உட்பட பல்வேறு வன விலங்குகள் உள்ளன. இது தவிர விலை உயர்ந்த தேக்கு மற்றும் ஈட்டி மரங்கள் அதிகளவு உள்ளன. ஆண்டு தோறும் நவம்பர் மாதம் துவங்கி பிப்ரவரி மாதம் வரை நீலகிரியில் பனிப்பொழிவு அதிகமாக காணப்படும். இச்சமயங்களில், முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனப்பகுதியில் உள்ள செடி, கொடிகள் மற்றும் சிறிய மரங்கள் காய்ந்து போய் விடுகின்றன.

அதேபோல், நவம்பர் மாதம் முதல் மே மாதம் வரை இப்பகுதியில் மழையும் குறைந்து காணப்படும் நிலையில், இங்குள்ள நீரோடைகள், குளங்கள் மற்றும் குட்டைகள் காய்ந்து விடுவது வழக்கம். இதனால், இங்கு வாழும் விலங்குகள் நீரின்றி, நீர் நிலைகளை நோக்கி இடம் பெயருவது வழக்கமாக உள்ளது. இம்முறையும் வழக்கம் போல் அதிக பனிப்பொழிவாலும், மழை பொய்த்த காரணத்தினாலும், தற்போது முதுமலை முழுவதும் மழையின்றி கடும் வறட்சி நிலவுகிறது. இதனால், பெரும்பாலான வன விலங்குகள் தற்போது முதுமலையை விட்டு வேறு இடங்களுக்கு இடம் பெயர துவங்கி விட்டன. மேலும், புலிகள் காப்பகம் காய்ந்து போய் உள்ள நிலையில், தற்போது காட்டு தீ ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனை தடுக்க தற்போது முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பகுதிகளில் 250 கி.மீ தூரத்திற்கு தீத்தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், காட்டு தீ ஏற்படாமல் இருக்க தீத்தடுப்பு காவலர்கள் நியமிக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், ரோந்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக முதுமலை புலிகள் காப்பக அதிகாரிகள் தெரிவித்தனர். முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் அருண் கூறியதாவது: மழை குறைந்த காரணத்தினாலும், பனிப்பொழிவு காரணத்தினாலும் முதுமலை புலிகள் காப்பத்திற்குட்பட்ட பகுதிகளில் வறட்சி ஏற்பட்டுள்ளது. முதுமலை புலிகள் காப்பத்திற்குட்பட்ட கூடலூர்-மைசூர் தேசிய நெடுஞ்சாலை, மசினகுடி-தெப்பக்காடு நெடுஞ்சாலை உட்பட காப்பகத்திற்குட்பட்ட பகுதிகளில் 250 கி.மீ தூரத்திற்கு தீத்தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 10க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கோபுரங்களில் இருந்து தீத்தடுப்பு ஊழியர்கள் மற்றும் வனத்துறை ஊழியர்கள் நாள்தோறும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். எங்காவது புகை வருவது அறிந்தால், உடனடியாக அப்பகுதியில் உள்ள வனத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்து தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடுவார்கள்.

மேலும், காப்பகத்திற்குட்பட்ட தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் ஒரு கி.மீக்கு ஒரு தீத்தடுப்பு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், காட்டு தீ ஏற்படாமல் இருக்கவும், சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடுவார்கள். மேலும், புதிதாக 40 தீத்தடுப்பு காவலர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் எந்நேரமும் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இது தவிர, புலிகள் காப்பத்திற்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் எளிதில் தீ பற்றக் கூடிய பொருட்களை காட்டிற்குள் கொண்டு செல்ல கூடாது எனவும், காட்டு தீ ஏற்படாமல் இருக்க உதவிட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். காட்டு தீ ஏற்பட்டால், அதனை அணைப்பது மிகவும் கடினம். எனவே, காட்டு தீ ஏற்படாமல் இருக்க என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க முடியுமோ, அனைத்து முன்னேச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

The post காட்டு தீ ஏற்படாமல் தடுக்க 250 கி.மீ தூரத்திற்கு தீத்தடுப்பு கோடுகள்: 40 ஊழியர்கள் நியமனம் appeared first on Dinakaran.

Tags : Ooty ,Mudumalai Tiger Reserve ,Mudumalai Tiger ,Reserve ,Asia ,Dinakaran ,
× RELATED முதுமலை பகுதியில் சாலையில் சென்ற...