×

நீர் ஆவியாவதை தடுக்க வைக்கோல், தென்னை நார் கழிவில் நிலப்போர்வை அமைக்கலாம்: வேளாண் துறையினர் அட்வைஸ்

ஆண்டிப்பட்டி, மார்ச் 17: சாகுபடியில் உள்ள பயிர்களுக்கு இடைப்பட்ட பகுதிகளில் வைக்கோல் அல்லது தென்னை நார் கழிவு போன்றவைகளை நிலப்போர்வையாக பயன்படுத்தி நீர் ஆவியாகாமல் தடுக்கலாம் என வேளாண் துறையினர் ஆலோசனை வழங்கியுள்ளனர். இதுகுறித்து அவர்கள் தெரிவித்ததாவது: சாகுபடியில் உள்ள பயிர்களுக்கு இடைப்பட்ட பகுதிகளில் வைக்கோல் அல்லது தென்னை நார் கழிவு போன்றவைகளை நிலப்போர்வையாக இருக்குமாறு நன்கு தூவிவிட்டு, சூரிய ஒளிக்கதிர்கள் நேரடியாக பூமியில் படுவதை தடுக்கலாம். இம்முறையில் நீர் பாய்ச்சப்பட்ட நிலங்களில் நீர் ஆவியாவதை தடுப்பது மட்டுமில்லாமல் களை வளர்வதையும் கட்டுப்படுத்தலாம். கோடையில் சாகுபடி செய்யப்பட்ட இறவை மக்காச்சோளம், பயறு வகைகளில் மேற்கண்டபடி மூடாக்கு போடுவதாலும், நீர் தேவை அறிந்து நீர் பாய்ச்சுவதாலும், மகசூல் இழப்பை குறைக்கலாம். மேலும், மாலை நேரங்களில் நீர் பாய்ச்சும் பணியினை செய்து நீண்ட நேரம் வரை மண் ஈரம் காத்து வறண்ட சூழலிலிருந்து பயிரை காக்கலாம்.

நிலச்சரிவிற்கு குறுக்கே ஆழச்சால் அகலப்பாத்தி முறையினை கடைபிடித்து சாகுபடி மேற்கொள்ளலாம். கோடை மழை கிடைக்கும் போது சரிவிற்கு குறுக்கே மழைநீரை வழிந்தோட செய்வதன் மூலம் நிலத்தின் ஈரத்தன்மையை அதிகப்படுத்தலாம். மேலும், நீர்ப்பாய்ச்சும்போது கூட மண் ஈரம், நீண்ட நேரம் காத்திட இம்முறை மிகவும் ஏற்றதாக இருக்கும். இருக்கும் குறைந்த நீரை கொண்டு மரப்பயிர்களை காத்திடவும், சாகுபடி செய்யப்பட்ட கரும்பு போன்ற பயிர்களை காத்திடவும் சொட்டு நீர்ப்பாசனம், தெளிப்பு நீர்ப்பாசன முறைகளை கடைபிடிக்கும் போது வறட்சியிலிருந்து விடுபட ஏதுவாக இருக்கும். ஆழச்சால் அகலப்பாத்தியில் நீர் பாய்ச்சும் போது ஒரு வரப்புவிட்டு மறு வரப்பிற்கு நீர் பாய்ச்சும் முறையில் நீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் வறட்சியை ஓரளவு சமாளிக்கலாம். முருங்கை சாகுபடியில் ஊடுபயிராக நிலக்கடலை, உளுந்து அல்லது வெங்காயம் போன்ற பயிர்களை சாகுபடி செய்தலில் உள்ள நீர் மேலாண்மையால் இரட்டிப்பு வருமானம் கிடைக்கும். வரப்பு பயிராக ஆமணக்கு பயிரடலாம்.

கோடையில் சாகுபடியில் உள்ள பயிர்களுக்கு இலைவழி தெளிப்பு உரம் மற்றும் சொட்டு நீர்ப்பாசனத்தில் நீரில் கரையும் உர பயன்பாடு கடைபிடித்தலால் நல்ல பயன் தரும். பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மாலை நேரத்தில் கடைபிடிப்பது நல்லது. காலையில் வெயில் தாழும் வரையிலும், மாலை வெயிலின் தாக்கம் குறைந்த நேரத்திலும் விவசாய பணிகளாகிய களையெடுத்தல், மருந்து தெளித்தல், உரமிடல் போன்ற பணிகளை மேற்கொள்வதால் விவசாயிகள் உடல் ஆரோக்கியம் காக்கவும், நேரடி சூரிய கதிர்வீச்சு தாக்குதலை தவிர்க்கவும் செய்யலாம். கடும் வெயில் நேரங்களில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்பாமலும், மர நிழல் உள்ள பகுதிகளில் கால்நடைகள் தண்ணீர் குடிக்கவும் ஏற்பாடுகள் செய்யலாம். இதுதொடர்பான கூடுதல் விபரங்களுக்கு விவசாயிகள் வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

The post நீர் ஆவியாவதை தடுக்க வைக்கோல், தென்னை நார் கழிவில் நிலப்போர்வை அமைக்கலாம்: வேளாண் துறையினர் அட்வைஸ் appeared first on Dinakaran.

Tags : Agriculture Department ,Antipatti ,agriculture ,Dinakaran ,
× RELATED மண் பரிசோதனைக்கு மாதிரி எடுக்கணுமா? வேளாண் துறையினர் விளக்கம்