×

திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ.2.62 கோடி மதிப்பீட்டில் புதிய மருத்துவ கட்டிடங்கள் திறப்பு

 

அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், ஐ.பெரியசாமி, அர.சக்கரபாணி பங்கேற்பு

திண்டுக்கல், மார்ச் 17: திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட மரியநாதபுரத்தில் ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நகர்ப்புற பொது சுகாதார ஆய்வகம், எரியோட்டில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வட்டார பொது சுகாதார அலகு மற்றும் 7 துணை சுகாதார நிலையங்கள் என மொத்தம் ரூ.2.62 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற மருத்துவ கட்டிடங்களின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. கலெக்டர் பூங்கொடி தலைமை வகித்தார். பழநி எம்எல்ஏ ஐ.பி.செந்தில்குமார், வேடசந்தூர் எம்எல்ஏ காந்திராஜன், மாநகராட்சி மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி வாழ்த்துரை வழங்கினர்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் புதிய கட்டிடங்களுக்கான கல்வெட்டை திறந்து வைத்து பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து அவற்றை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். திண்டுக்கல் மாநகராட்சி மரியநாதபுரத்தில் ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நகர்ப்புற பொது சுகாதார ஆய்வகம், எரியோட்டில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வட்டார பொது சுகாதார அலகு, மரியநாதபுரம், நெய்காரப்பட்டி, மணக்காட்டூரில் தலா ரூ.30 லட்சம் மதிப்பீட்டிலும், காமலாபுரம், அய்யலூர் வடக்கு, அய்யலூர் தெற்கு, மோர்பட்டி ஆகிய கிராமங்களில் தலா ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 7 துணை சுகாதார நிலையங்கள் என மொத்தம் ரூ.2.62 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற 9 மருத்துவ கட்டிடங்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்ற பிறகு ரூ.8.33 கோடி செலவில் 21 புதிய மருத்துவ கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில ரூ.327 கோடி செலவில் புதிய மருத்துவமனை கட்டிடம் மற்றும் மருத்துவ சேவைகள் துவங்கி வைக்கப்பட்டு பொது மக்கள் பயன்பெற்று வருகின்றனர். ரூ.134.11 கோடி செலவில் 38 புதிய மருத்துவ கட்டிட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ரூ.1.93 கோடி செலவில் 3 மருத்துவ கட்டிடங்கள் அமைக்கும் பணிகள் விரைவில் துவங்கப்படவுள்ளன. இதுதவிர ஏராளமான மருத்துவ கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, ரூ.9 கோடி மதிப்பீட்டில் பழநி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் கூடுதல் கட்டிடம், ரூ.71 கோடி மதிப்பீட்டில் பழநி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் புதிய கட்டிடம் மற்றும் ஆய்வகம், ரூ.23.75 கோடி மதிப்பீட்டில் ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் தீவிர கவனிப்பு கட்டிடம், ரூ.5.93 கோடி மதிப்பீட்டில் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு கட்டிடம், ரூ.1.83 கோடி மதிப்பீட்டில் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் குடியிருப்பு கட்டிடம்,

ரூ.90 லட்சம் மதிப்பீட்டில் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு கட்டிடம், ரூ.5.75 கோடி மதிப்பீட்டில் வேடச்சந்தூர் அரசு மருத்துவமனை புதிய கூடுதல் கட்டிடம், ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கொசவபட்டி வட்டார பொது சுகாதார அலகு கட்டிடம், ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் உலுப்பகுடி வட்டார பொது சுகாதார அலகு கட்டிடம், ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் சின்னாளபட்டி வட்டார பொது சுகாதார அலகு கட்டிடம், ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் கன்னிவாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புறநோயாளிகள் பிரிவு கட்டிடம், ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் பாப்பம்பட்டி பொது சுகாதார அலகு கட்டிடம், ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் குஜிலியம்பாறை பொது சுகாதார அலகு கட்டிடம், ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் வடமதுரை பொது சுகாதார அலகு கட்டிடம், ரூ.1.28 கோடி மதிப்பீட்டில் கோவிலூர் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம், ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் பழநி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் கட்டிடம், ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் நரிகல்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொது சுகாதார அலகு கட்டிடம்,

ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் நெய்க்காரப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம், ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் கொடைக்கானல் நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம், ரூ.87 லட்சம் மதிப்பீட்டில் பூம்பாறை ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் கட்டிடம், மேட்டுப்பட்டி, சவேரியார்பாளையம், கோனூர், சிங்காரகோட்டை, காவலப்பட்டி, அண்ணாமலை, கூக்கால், திண்டுக்கல் தேரடி, ஆண்டவன் பூங்கா ஆகிய துணை சுகாதார நிலையங்களில் தலா ரூ.30 லட்சம் மதிப்பீட்டிலும், அஞ்சுகுளிபட்டி, கு.குரும்பப்பட்டி ஆகிய துணை சுகாதார நிலையங்களில் தலா ரூ.35 லட்சம் மதிப்பீட்டிலும், கவுஞ்சி, கோவில்பட்டி, பூண்டி, கொடைக்கானல், அடுக்கம், மேல்பள்ளம், தாண்டிக்குடி ஆகிய துணை சுகாதார நிலையங்களில் தலா ரூ.40 லட்சம மதிப்பீட்டிலும் புதிக கட்டிடங்கள் என மொத்தம் ரூ.134.11 கோடி மதிப்பீட்டில் 38 மருத்துவ கட்டிடப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ரூ.1.65 கோடி செலவில் 7 துணை சுகாதார நிலைய கட்டிடங்கள், ரூ.5.57 கோடி செலவில் 12 ஆரம்ப சுகாதார நிலையங்களில் புறநோயாளிகள் பிரிவு, மருத்துவர் மற்றும் செவிலியர் குடியிருப்பு, சித்தா பிரிவு கட்டிடங்கள், ரூ.80 லட்சம் செலவில் பழநி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் கண் அறுவை அரங்கம், ரூ.3 லட்சம் செலவில் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு பிரிவு கட்டிடம், ரூ.327 கோடி செலவில் திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புதிய மருத்துவமனை கட்டிடம் மற்றும் மருத்துவ சேவைகள் துவடங்கி வைக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பெற்று வருகின்றனர். திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மகப்பேறு தீவிர சிகிச்சை பிரிவு ரூ.53 லட்சம் மதிப்பீட்டிலும், பழநி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் புதிய டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி ரூ.1 கோடி மதிப்பீட்டிலும், கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு மையம் ரூ.40 லட்சம் மதிப்பீட்டிலும் என மொத்தம் ரூ.1.93 கோடி மதிப்பீட்டில் 3 மருத்துவ கட்டிடங்கள் கட்டுமான பணிகள் விரைவில் துவங்கப்படவுள்ளன.

திண்டுக்கல் மாவட்டத்தில் துணை சுகாதார நிலையம் 346, ஆரம்ப சுகாதார நிலையம் 73, வட்டம் சாரா மருத்துவமனை 6, வட்டார மருத்துவமனை 4, மாவட்ட தலைமை மருத்துவமனை 1, மருத்துவக்கல்லூரி மருத்துவமனை 1 என்ற வகையில் மருத்துவ கட்டமைப்புகள் உள்ளன. தமிழ்நாடு முதலமைச்சர் 708 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் அமைக்கப்படும் என அறிவித்தார். அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் 10 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு திண்டுக்கல் மாநகராட்சியில் 8, பழநி நகராட்சியில் 1, கொடைக்கானல் நகராட்சியில் 1 என மொத்தம் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் கட்டிட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் திண்டுக்கல் மாநகராட்சி 8, பழனி நகராட்சி 1 ஆகிய இடங்களில் நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் திறந்து வைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ளன. கொடைக்கானல் நகராட்சியில் நகர்ப்புற நலவாழ்வு மையம் விரைவில் திறந்து வைக்கப்படும். அதேபோல் தமிழகம் முழுவதும் 50 ஆரம்ப சுகாதார நிலையம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் ஆடலூர் பன்றிமலை ஆரம்ப சுகாதார நிலையம், ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் மார்க்கம்பட்டி, நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

2021-22 மானிய கோரிக்கை 35 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், 18 மாவட்ட தலைமை மருத்துவமனைகள் மற்றும் 139 அரசு மருத்துவமனைகளுக்கு பன்முக உயர்தர தீவிர சிகிச்சை பிரிவுகள் 2099 படுக்கைகள் ரூ.364.22 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் துவங்கி வைத்தார். 2023-24 மானிய கோரிக்கையில் ரூ.22.61 கோடி மதிப்பீட்டில் 29 அறிவிப்புகளின் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லுரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் ஆகியவற்றிற்கு பல்வேறு மருத்துவ கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் மக்கள் தொகை 17,38,357, இதில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் முதல் சேவை 17,46,985 நபர்களும், தொடர் சேவை 20,84,210 நபர்களும் பயனடைந்துள்ளனர். இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 திட்டத்தில் அரசு மருத்துவமனை 7, தனியார் மருத்துவமனை 13 என மொத்தம் 20 மருத்துவமனைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு, இதுவரை 8,201 பயனாளிகள் சிகிச்சை பெற்ற வகையில் அரசு தொகை ரூ.4.84 கோடி வழங்கப்பட்டுள்ளது.

மருத்துவ துறையில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. 1521 மருத்துவர் பணியிடங்கள், 1196 செவிலியர் பணியிடங்கள் கடந்த ஒரு மாதத்தில் நிரப்பப்பட்டுள்ளன. இதில் திண்டுக்கல் மாவட்டத்திற்கு 41 மருத்துவர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின் பேரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பாம்பு கடி மற்றும் நாய்க்கடி சிகிச்சைக்கான மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் 2,786 நோயாளிகள் சிகிச்சை பெற்றுள்ளனர். தேசிய தர உறுதி நிர்ணய திட்ட விருதை தமிழகம் இதுவரை 614 முறை பெற்றுள்ளது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 545 முறை பெற்றுள்ளது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் பழநி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, கமலா நேரு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம், புதுச்சத்திரம், சிலுவத்தூர், சத்திரபதி, தேவத்தூர், பூம்பாறை ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள்,

கொடைக்கானல் அரசு மருத்துவமனை, தாடிக்கொம்பு சமுதாய சுகாதார நிலையம் என 9 விருதுகள் கிடைத்துள்ளன. மகப்பேறு அறை, கர்ப்பிணிகளுக்கான அறுவை அரங்கின் தரம் உயர்த்தும் திட்ட சான்றிதழ் தமிழகம் இதுவரை 84 பெற்றுள்ளது. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 55 முறை பெற்றுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, பழநி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை ஆகியவை இந்த சான்றிதழ் பெற்றுள்ளன. மருத்துவ துறையில் எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி வருவதன் காரணமாக, இந்தியாவிலேயே மருத்துவ துறையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தமிழக அரசு வழங்கும் மருத்துவ திட்டங்களை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்தி தங்கள் ஆரோக்கியத்தை பாதுகாத்து கொள்ள வேண்டும். இவ்வாறு பேசினார். தொடர்ந்து மகப்பேறு மருத்துவ பெட்டகம் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மண்டல தலைவர்கள் பிலால் உசேன், ஜான்பீட்டர், ஆனந்த், திமுக ஒன்றிய செயலாளர்கள் நெடுஞ்செழியன், வெள்ளிமலை, பகுதி செயலாளர் பஜூலுல் ஹக், ராஜேந்திர குமார், சுகாதார பணிகள் துணை இயக்குநர் வரதராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ.2.62 கோடி மதிப்பீட்டில் புதிய மருத்துவ கட்டிடங்கள் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Dindigul district ,Ministers ,M. Subramanian ,I. Periyasamy ,A. Chakrapani ,Dindigul ,Urban Public Health Laboratory ,Marianathapuram ,Dindigul Corporation ,Regional Public Health Unit ,Eriot ,Dinakaran ,
× RELATED அப்பப்பா…அனல் காத்து வீசுது...