செம்பனார்கோயில்: மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்திடம், மயிலாடுதுறை மாவட்ட பாஜ தலைவர் அகோரம் தலைமையிலான கும்பல் ஆபாச ஆடியோ, வீடியோ வெளியிடுவதாக கூறி ரூ50 கோடி கேட்டு மிரட்டி உள்ளனர். இதுதொடர்பாக ஆதீனம் அளித்த புகாரில் மயிலாடுதுறை மாவட்ட பாஜ தலைவர் அகோரம், ஆடுதுறை வினோத், சம்பாகட்டளை விக்னேஷ், செம்பனார்கோவில் தனியார் பள்ளி தாளாளர் குடியரசு, நெய்குப்பை நிவாஸ் உள்ளிட்ட 9 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர். இதையடுத்து வினோத், விக்னேஷ், தனியார் பள்ளி தாளாளர் குடியரசு, நிவாஸ் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் மும்பையில் ராய்காட் மாவட்டம் அலிபாக் நகரில் உள்ள நாகா பீச்சில் நின்றிருந்த அகோரத்தை நேற்று முன்தினம் சுற்றிவளைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர். பின்னர் அலிபாக் நீதின்றத்தில் ஆஜர்படுத்தி விட்டு அவரை நேற்று மதியம் 2 மணி அளவில் மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயிலுக்கு அழைத்து வந்தனர். திருச்சம்பள்ளியில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிபதி கனிமொழி, முன்னிலையில் அகோரம் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கினை விசாரித்த நீதிபதி, பாஜ மாவட்ட தலைவர் அகோரத்தை வருகிற 28ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார்.
The post தருமபுரம் ஆதீனத்திடம் ரூ50 கோடி கேட்டு மிரட்டல்: பாஜ மாவட்ட தலைவர் சிறையில் அடைப்பு appeared first on Dinakaran.