×

பொதுப்பணித்துறையில் புதியதாக பணி நியமனம் பெற்ற உதவிப் பொறியாளர்களுக்கு, பயிற்சி வகுப்பினை, தொடங்கி வைத்தார் அமைச்சர் எ.வ.வேலு!!

சென்னை : பொதுப்பணிகள், நெடுஞ்சாலைத் துறை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள், இன்று (16.03.2024) பொதுப்பணித்துறையில், புதியதாக நியமனம் பெற்ற 302 உதவிப் பொறியாளர்களுக்குப் பயிற்சி வகுப்பினை தொடங்கி வைத்து, உரையாற்றினார்கள். பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் அவர்கள் உரையில்; கட்டடக் கலையின் தோற்றமும்-வளர்ச்சியும் பற்றி விரிவாக விளக்கி கூறினார்கள்; ஆதியில் நாடோடியாக திரிந்துக் கொண்டிருந்த மனிதன், கலப்பையை கண்டறிந்தான். அதன் துணையால் நிலத்தை உழுது, உணவுப் பொருட்களை உற்பத்தி செய்து கொள்ள அறிந்தான். நாடோடி வாழ்க்கையை விட்டுவிட்டு குறிப்பிட்ட இடத்தில் தங்கி வாழ நினைத்தான். விலங்குகளிடம் இருந்து, தற்காத்துக் கொள்ள ஆறாவது அறிவை பயன்படுத்தினான். அதன் விளைவாக, தன் குடும்பத்தோடு பாதுகாப்பாக வாழ புகலிடம் அமைத்துக்கொள்ள களி மண்ணால், சுவர் எழுப்பி, மரக்கழிகளை குறுக்கும், நெடுக்குமாக போட்டு, சருகுகளையும், தழைகளையும் கொண்டு வீட்டை உருவாக்கினான். பின்னர் நெருப்பினால் சுடப்பட்ட செங்கல்லை உற்பத்தி செய்தான். படிப்படியாக களிமண், ஓலைக் குடிசைகள், கல்வீடுகளாக மாற்றினான். கட்டடம், வீடு, அரண்மனை, மாடமாளிகைகள், கோயில்கள் எல்லாம் கட்டத் தொடங்கினான்.

தமிழர் கட்டடக் கலையில் இன்று, கலை மற்றும் அறிவியல் சார்ந்த தொழில்நுட்பங்களில், உலகே வியந்து, நிமிர்ந்து பார்க்கும் சாதனைகளை உள்ளடக்கியதே தமிழர் கட்டடக்கலை ஆகும். அக்காலத்தில் கட்டப்பட்டக் கோவில்களும், கோட்டைகளும், அணைகளும், தமிழர்களின் அறிவியல் நுட்பத்தையும், தொலைநோக்குத் திறனையும், கலை அறிவையும் பறைசாற்றுவதாக அமைந்துள்ளன.
“கல்லு முலோகமும் செங்கலு மரமும்
மண்ணுஞ் சுதையும் தந்தமும் வண்ணமும்
கண்ட சர்க்கரையு மெழுகு மென்றிவை
பத்தே சிற்பத் தொழிற் குறுப்பாவன“
-என சங்க இலக்கியங்களில் கூறுவது போல்,
சுடுமண், மச்சு, மாடம், முற்றம், மூன்றில், காலதர், சாளரம் போன்ற கட்டக்கலைச் சொற்கள் இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. கட்டடக் கலைக்கு மூன்று கூறுபாடுகள் உள்ளன அவை, 1) ஒரு கட்டடம் எதற்காக கட்டப்படுகிறதோ அதற்கான சமூக தேவைகளை நிறைவு செய்ய வேண்டும். 2) பயன்படுத்தப்படும் பொருள் தரமாகவும், நீடித்து உழைக்கக் கூடியதாக இருக்க வேண்டும். 3) அதன்பின், கலைத் திறனுடன் இருக்க வேண்டும். பழந்தமிழர் கட்டடங்கள் அவற்றுக்கான சமூகத் தேவைகளை நிறைவு செய்தன. உறுதியாகவும், நீடித்து நிற்பவையாகவும், பொருத்தமாகவும் இருந்தன. எல்லாவற்றிற்கும் மேலாக கலையாகவும் இருந்தன. இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக கட்டமைப்புகளை விரைவில் உருவாக்கும் ‘பிரி-பேப்ரிகேட்டடு’ கட்டுமான யுக்தி மூலம் சில வாரங்களில் வீடுகளை அழகாக உருவாக்கி குடியேற இயலும் என்று அமைச்சர் அவர்கள் கூறினார்கள்.

கட்டடங்கள் பழுதாகக் காரணங்களைப் பற்றி பயிற்சிப் பெறுவர்களுக்கு விளக்கி கூறினார்கள் அவை, மண்ணின் தாங்கும் சக்தி குறைவு, கட்டட வடிவமைப்பில் குறைபாடுகள், ஒரு நோக்கத்தில் கட்டப்படும் கட்டடம் வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்துதல், தரக்குறைவான கட்டுமானப் பொருட்கள், மோசமான தொழில் தன்மையில் கட்டடம் எழுப்புதல், கான்கிரீட் வேலைக்குப் பிறகு க்யூரிங் செய்யாமல் விடுதல், நிலநடுக்கத்தினால் உண்டாகும் பளுவை கணக்கில் கொள்ளாதது, அஸ்திவாரத்தை சுற்றி தேங்கி நிற்பது, அஸ்திவாரத்தை சுற்றி மரங்களை வளர்த்தல், முட்டுக் கொடுக்காமல் அஸ்திவாரத்திற்கு ஒட்டினாற்போல் பள்ளம் தோண்டுதல், எவ்வித எச்சரிக்கை நடவடிக்கையையும் எடுக்காமல் சுவர்களை இடித்தல், இப்பயிற்சி வகுப்பில் பங்குப் பெற்றுள்ள உதவிப் பொறியாளர்கள் அனைவரும் இதைப்போல காரணங்களை விரிவாக அறிந்து கொள்ளும்போதுதான், எதிர்காலத்தில் அவர்கள் மேற்கொள்ளும் கட்டடப் பணிகள் சிறப்பாக அமையும் என்று எடுத்துரைத்தார்கள்.

இப்பயிற்சி வகுப்புத் தொடக்க விழாவில், பொதுப்பணித்துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர் B.சந்தரமோகன் இ.ஆ.ப., முதன்மைத் தலைமைப் பொறியாளர் (பொது) திரு.கே.பி.சத்தியமூர்த்தி, சென்னை மண்டல தலைமைப் பொறியாளர் டாக்டர்.கே.ஆயிரத்தரசு இராஜசேகரன், மதுரை மண்டல தலைமைப் பொறியாளர் திரு.எஸ்.இரகுநாதன், கோவை மண்டல தலைமைப் பொறியாளர் திரு.எஸ்.காசிலிங்கம், திருச்சி மண்டல தலைமைப் பொறியாளர் திரு.எ.வள்ளுவன், உணவுப் பொருள் வழங்கல் & பாதுகாப்புத்துறை தலைமைப் பொறியாளர், திரு.அன்பரசன், இந்து சமய அறநிலையத் துறை தலைமைப் பொறியாளர் திரு.பெரியசாமி மற்றும் இதர பொறியாளர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post பொதுப்பணித்துறையில் புதியதாக பணி நியமனம் பெற்ற உதவிப் பொறியாளர்களுக்கு, பயிற்சி வகுப்பினை, தொடங்கி வைத்தார் அமைச்சர் எ.வ.வேலு!! appeared first on Dinakaran.

Tags : Minister ,Chennai ,Public Works ,Velu ,Public Works Department ,Dinakaran ,
× RELATED முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன்