×

2023ம் ஆண்டு காணாமல் போன ரூ.23 லட்சம் மதிப்பிலான 154 செல்போன்கள் மீட்பு: உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார் மாவட்ட எஸ்பி

திருவள்ளூர்: மாவட்டத்தில் 2023ம் ஆண்டு காணாமல் போன 23 லட்சம் மதிப்பிலான சொல்போன்கள் மீட்கப்பட்டு, அவற்றை மாவட்ட எஸ்பி சீனிவாச பெருமாள் உரிமையாளரிடம் ஒப்படைத்தார். திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 2023ம் ஆண்டு காணாமல் போன செல்போன்கள் தொடர்பாக அனைத்து சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்களிலும் பெறப்பட்ட புகார்களின் மீது வழக்குப் பதிவு செய்து சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களின் இன்ஸ்பெக்டர்கள் மூலம் காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்து தருமாறு மாவட்ட இணைய வழி குற்றப்பிரிவு (சைபர் கிரைம்) காவல் நிலையத்திற்கு அளித்த பரிந்துரை கடிதத்தினை பெற்று மாவட்ட எஸ்பி சீனிவாச பெருமாள் உத்தரவின் பேரில் ஏடிஎஸ்பி மீனாட்சி தலைமையில் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

அதன்படி தமிழகத்தில் 127 கைப்பேசிகளும், ஆந்திராவில் 15, கேரளாவில் 8, கர்நாடகாவில் 4 என மொத்தம் 154 கைபேசிகளை கண்டுபிடித்து சுமார் ரூ.23 லட்சத்து 10 ஆயிரம் மதிப்புள்ள 154 செல்போன்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏடிஎஸ்பி.க்கள் மீனாட்சி, ரவிக்குமார் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட எஸ்பி சீனிவாசப் பெருமாள், உள்ளங்கையில் உலகம் என்ற நிலையில் செல்போன் தற்போது அனைவருக்கும் இன்றியமையாத பொருளாக மாறிவிட்டபடியால் அதனை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். காணாமல் போனதாக கொடுத்த புகாரின் பேரில் ஐஎம்இ எனப்படும் எண்ணை வைத்து வேறொரு சிம் கார்டை பயன்படுத்தும் போது அந்த செல்போன் இருக்கும் இடம் கண்டறிந்து செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.

பொது இடங்களில் கூட்ட நெரிசலான இடங்களில் செல்லும் பொழுது பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். மேலும் வங்கியிலிருந்து பேசுவதாக கூறி டெபிட் கார்டு எண், ஓடிபி எண் போன்றவற்றை கேட்டால் அந்த அழைப்புகளை தவிர்க்க வேண்டும். வங்கி கடன் பெற்றுத்தருவதாக வரும் அழைப்புகளை தவிர்க்க வேண்டும். இது சம்மந்தமாக அந்தந்த காவல் நிலையங்களில் புகார் அளிக்கலாம்.

அதே போல் கஞ்சா, குட்கா, கள்ளச்சாராயம் போன்ற போதைப் பொருட்களை விற்பனை செய்பவர்கள், கடத்தி வருபவர்கள் குறித்த தகவல்களை தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்: 10581, வாட்ஸ் அப் தொலைபேசி எண்: 94984 10581, திருவள்ளூர் மாவட்ட வாட்ஸ்அப் தொலைபேசி எண் 63799 04848 என்ற எண்களில் சரியான தகவல் அளிப்பவர்களுக்கு வெகுமதிகள் தரப்படும் என்றும் தகவல் அளிப்போர் ரகசியம் காக்கப்படும் என்றும் அதற்காக திருவள்ளூர் மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட 150-க்கும் மேற்பட்ட இடங்களில் விழிப்புணர்வு பேனர்கள் வைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

தற்போது வழிப்பறி போன்ற குற்றச் செயல்களில் பள்ளி, கல்லூரி மாணவர்களே ஈடுபடுவதால் அவர்களை கைது செய்து சிறார் சிறையில் அடைத்தும், அவர்களது பெற்றோர்களுக்கு அறிவுரையும் வழங்கப்பட்டு வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் மண் குவாரிகள் செயல்படுவதால் விபத்துக்களை தவிர்க்க காலை நேரத்தில் போக்குவரத்து நெரிசலான 7 மணி முதல் 10 மணி வரையும். மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் லாரிகள் திருவள்ளூர் நகர் பகுதி வழியாக செல்ல அனுமதி ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும், தார் பாய்கள் போடாமலும் அதிக பாரம் ஏற்றி வரும் லாரிகளை பறிமுதல் செய்ய உத்தரவிட்டிருக்கிறது.

சென்னை மாநகர காவல் நிலையங்கள், ஆவடி ஆணையரக கட்டுப்பாட்டில் உள்ள காவல் நிலையங்களில் 120க்கும் மேற்பட்ட காவலர்கள் பணியில் இருக்கின்றனர். ஆனால் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 22 காவல் நிலையங்களில் போதிய காவலர்கள் இல்லாமல் பற்றாக்குறையாக உள்ளது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, விரைவில் கூடுதல் காவலர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் முறையாக செயல்படுகிறது. ஆனால் தனியார் சார்பில் வைக்கப்பட்டுள்ள 4400 சிசிடிவிக்களின் செயல்பாடுகளை ஆராய்ந்து, அது செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

அதுமட்டுமில்லாமல் மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் கஞ்சா போன்ற போதை பழக்கத்திற்கு அடிமையாகக் கூடாது என்றும் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்கள் தடுக்கும் வண்ணமாக காவல்துறை முழுமூச்சுடன் செயல்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார். திருடு போன செல்போன்களை கண்டுபிடித்து மீண்டும் திரும்ப ஒப்படைத்த மாவட்ட காவல் துறைக்கு செல்போன் உரிமையாளர்கள் தங்களது நன்றியை தெரிவித்தனர்.

The post 2023ம் ஆண்டு காணாமல் போன ரூ.23 லட்சம் மதிப்பிலான 154 செல்போன்கள் மீட்பு: உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார் மாவட்ட எஸ்பி appeared first on Dinakaran.

Tags : District SP ,Tiruvallur ,Srinivasa Perumal ,Dinakaran ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே...