×

அதிக தேர்தல் பத்திரங்கள் வாங்கிய மார்ட்டின் மியான்மர் கூலித் தொழிலாளி லாட்டரி மன்னனானது எப்படி? வாழ்வு கொடுத்த முதலாளியையே தொழிலை விட்டு விரட்டியவர்

தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக எஸ்.பி.ஐ வங்கி கொடுத்த தகவல்கள் தேர்தல் ஆணைய இணைய தளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில், அதிக நிதி கொடுத்த பியூச்சர் கேமிங் மற்றும் ஹோட்டல் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் 2019 முதல் 2024 வரை ரூ.1,368 கோடிக்கு தேர்தல் பத்திரங்களை வாங்கியிருந்தது. அம்பானி, அதானியை யே மிஞ்சிய இந்த கோவை நிறுவனத்தின் சொந்தக்காரர் யார்? என்ற தகவல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அவர்தான், லாட்டரி மன்னன் சான்டியாகோ மார்ட்டின். 59 வயதான மார்ட்டின், மியான்மரின் ரங்கூன் நகரில் கூலித்தொழிலாளியாக இருந்தவர். 1980களில் இந்தியாவுக்குள் நுழைந்த அவர் பின்னாளில் லாட்டரி மன்னனானது பெரிய கதை.

கோவையில் குடும்பத்தோடு தஞ்சம் புகுந்த மார்ட்டின் அங்கேயே ஒரு தேநீர் கடைக்கு முன் சில லாட்டரி சீட்டுக்களை சிறிய அட்டையில் மாட்டி வைத்து விற்க துவங்கினார். அந்த காலக்கட்டத்தில் இந்தியாவிலேயே பெரிய லாட்டரி அதிபராக இருந்தவர் எச்.அன்ராஜ். மார்வாடியான அன்ராஜ் சென்னையை தலைமையிடமாக கொண்டு லாட்டரி தொழிலில் கொடி கட்டி பறந்தார். அவரிடம் வேலைக்கு சேர்ந்த மார்ட்டின் சிறிது காலத்தில் முதலாளியின் நம்பிக்கைக்குரியவராக மாறினார். அதே நேரத்தில் லாட்டரி தொழிலில் தனக்கென தனியாக ஒரு நெட்வொர்க்கை உருவாக்கிக்கொண்டார்.

கோவையில், மார்ட்டின் லாட்டரி ஏஜென்சி என்ற லாட்டரி நிறுவனத்தையும் துவங்கினார். தனக்கு வாழ்வு கொடுத்த அன்ராஜின் நிறுவனத்திலேயே கை வைத்தார். அந்த நிறுவனத்தின் வருமானத்தை மடைமாற்றி லாட்டரி துறையில் தவிர்க்க முடியாத ஆளாக வளர்ந்தார். இன்றைக்கு அன்ராஜின் குடும்பத்தினர் லாட்டரி தொழிலையே கைவிட்டு, சென்னையில் ஓட்டல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா என்று தென் மாநிலங்களில் மார்ட்டினின் லாட்டரி விற்பனை நெட்வொர்க் கால் ஊன்றியது. அதே நேரத்தில் சிக்கிம், மேகாலயா, அருணாச்சல் பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், பஞ்சாப்பில் அவரது தொழில் வளர்ந்தது. 260 ஏஜென்ட்டுகள், 1000 ஊழியர்கள் என்று மார்ட்டினின் சாம்ராஜ்ஜியம் பிரமாண்டமாக வளர்ந்தது.

மோசடியும், மார்ட்டினும் யாராலும் பிரிக்கமுடியாத ஒன்று. சிக்கிம் மாநில லாட்டரியை நடத்தி வந்த மார்ட்டின் அம்மாநில அரசிடமே பல நூறு கோடி மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மார்ட்டினை சிக்கிம் மாநில போலீசும், ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகளும் தேட நேபாளத்தில் தஞ்சம் புகுந்தார். அங்கிருந்தபடியே தனது நட்புகள் மூலம் மேற்கு வங்கத்தில் கால்ஊன்றியிருந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைமையை நெருங்கினார். எவ்வளவு வேண்டுமானாலும் நிதி தருகிறோம் என்ற வாக்குறுதியை கேட்ட மம்தா திகைத்துபோனார். அப்படியே மேற்கு வங்கத்துக்கு தனது ஜாகையை மாற்றினார்.

2011-ல் கோவை நில அபகரிப்பு வழக்கில் மார்ட்டின் கைதுசெய்யப்பட்டார். அடுத்த 15 நாட்களில் அவர் குண்டர் சட்டத்திலும் கைதுசெய்யப்பட்டார். தடைசெய்யப்பட்ட லாட்டரியை விற்றது உட்பட ஒட்டுமொத்தமாக 14 வழக்குகள் அவர் மீது போடப்பட்டன. பிறகு குண்டர் சட்டத்தை சென்னை உயர் நீதிமன்றம் ரத்துசெய்தது. சுமார் 7 மாதங்கள் சிறையில் இருந்தார் மார்ட்டின். அதன், பிறகு மார்ட்டின் அலுவலகங்களில் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை,சிபிஐ சோதனைகள் அடிக்கடி நடைபெறுவது வாடிக்கையாகிவிட்டது. சிக்கிம் அரசுக்கு சுமார் ரூ.900 கோடி இழப்பு ஏற்படுத்திய குற்றச்சாட்டை விசாரித்த அமலாக்கத் துறை 2023-ஆம் ஆண்டு மே 11 மற்றும் 12-ஆம் தேதிகளில் பணமோசடி தடுப்புச் சட்ட விதிகளின் கீழ், சென்னையிலும் கோவையிலும் உள்ள பியூச்சர் கேமிங் மற்றும் ஹோட்டல் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட்டின் இடங்களில் சோதனை நடத்தியது.

இந்த சோதனையை அடுத்து சுமார் ரூ. 457 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டன. கடந்த ஆண்டு செப்டம்பரில் கொல்கத்தாவில் உள்ள பணப் பரிமாற்றத் தடைச் சட்டத்திற்கான சிறப்பு நீதிமன்றத்தில் பியூச்சர் கேமிங் மற்றும் ஹோட்டல் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் பிற 15 நிறுவனங்களுக்கு எதிராக அமலாக்கத் துறை ஒரு வழக்கைப் பதிவு செய்தது. விற்கப்படாத லாட்டரி சீட்டுகளை தக்கவைத்துக்கொண்டு, அவற்றுக்கு பரிசு விழுந்ததாகக் காட்டுவது, விற்கப்படாத லாட்டரிகளை விற்றதாகக் காட்டுவது ஆகிய குற்றச்சாட்டுகள் இந்த நிறுவனத்தின் மீது சுமத்தப்பட்டன. ஒவ்வொரு முறை இடி,ஐடி, சிபிஐ ரெய்டு நடக்கும் போதெல்லாம் மார்ட்டின் நிறுவனம் பல கோடிக்கு தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது. இந்த பத்திரங்கள் பாஜவுக்கு தரப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

* ஜெயலலிதாவுக்கு மாமூல்
தமிழகத்தில் 2001ல் ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், மாதம் இத்தனை கோடி லாட்டரி மாமூல் தருவதாக ஆசை வார்த்தை கூறி அதிமுக தலைமையை நெருங்கியதாக கூறப்படுகிறது. ஆனால், சொன்னபடி பணம் வராததால் ஜெயலலிதா, 2003ல் தமிழ்நாட்டில் லாட்டரியையே தடை செய்தார். இந்த லாட்டரி தடைக்கே மார்ட்டின் தான் காரணம் என்று அந்த காலக்கட்டத்தில் லாட்டரி தொழில் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டது. பின்னர் கேரளாவில் ஆளுங்கட்சிக்கு நிதி கொடுத்து சர்ச்சையில் சிக்கினார் மார்ட்டின்.

* 50 ஆயிரத்துக்கே ஆயிரம் கேள்வி கேக்குறாங்க… அவங்க கிட்ட வாய பொத்திட்டா வாங்கினாங்க…?
வங்கிகளில் ரூ.50,000 டெபாசிட் செய்ய போனா போதும், பேரு, பான் நம்பரு, முகவரின்னு … கேஒய்சி-ங்கற பெயர்ல குடும்ப வரலாறே கேப்பாங்க போலிருக்கு. பத்தாக்குறைக்கு டிஎன்ஏ, எக்ஸ் ரே, சிடி ஸ்கேன், ரத்த மாதிரி..ன்னு டன் கணக்குல ஆவணத்தை கொடுக்கனுமோன்னு ஒரே மலைப்பாதான் இருக்கும். பேசாம டெபாசிட் பண்ணப்போற பணத்தை கக்கத்துல இடுக்கிட்டு வந்துரலாமேன்னு தோணும்… ஆனா… லட்சங்கள், கோடிகளில் தேர்தல் பத்திரம் வாங்கியவர்களிடம் ஒன்னுமே கேட்டதா தெரியல… பல இடத்துல ‘மோனிகா’ன்னு இருக்கு. இந்த விவரங்களை பார்த்து மக்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சிதான்.

ரெய்டு தேதியும்… நிதி வழங்கிய தேதியும்…
நிறுவனம் ரெய்டு நிதி வழங்கியது
பியூச்சர் கேமிங் 02/04/2022 07/04/2022
அரபிந்தோ பார்மா 10/11/2022
(நிர்வாக இயக்குநர் கைது) 15/11/2022
ஸ்ரீ சாய் எலக்ட்ரிகல்ஸ் 20/12/2023 11/01/2024
டாக்டர் ரெட்டீஸ் 13/11/2023 17/11/2023
கல்பதாரு புராஜக்ட்ஸ் 04/08/2023 10/10/2023
மைக்ரோ லேப்ஸ் 14/07/2022 10/10/2022
ஹீரோ மோட்டார் கார்ப்பொரேஷன் 31/03/2022 07/10/2022
யஷோதா மருத்துவமனை 26/12/2020 2021 ஏப். முதல் 2023 அக். வரை
ஷீரடி சாய் எலக்ட்ரிக்கல்ஸ் 20/12/2023 11/01/2024

* 3,346 பத்திரங்கள் விவரம் மறைப்பு
மொத்தம் 22,217 தேர்தல் பத்திரங்கள் விற்கப்பட்டதாக எஸ்.பி.ஐ வங்கி உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. ஆனால் 18,871 தேர்தல் பத்திரங்கள் பற்றிய விவரம் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. மீதியுள்ள 3,346 பேரின் விவரம் வெளியிடாமல் மறைக்கப்பட்டுள்ளது. இதில் மட்டும் ரூ.3,500 கோடிக்கு மேல் தேர்தல் பத்திரம் வாங்கியவர்களின் விவரம் மறைக்கப்பட்டுள்ளது.

* ரெய்டு அடித்து மிரட்டி குஜராத், உ.பிக்கு தொழில் முதலீட்டை அதிகரித்த மோடி அரசு
இடி, ஐடி, சிபிஐ இந்த மும்மூர்த்திகளின் கீர்த்தி பெரியது. ஒன்றிய பாஜ அரசின் அடியாளாக செயல்படுதுவதில் இந்த மூன்று அமைப்புகளும் ஒன்றோடு ஒன்று சளைத்தது அல்ல. தேர்தல் பத்திரங்களின் விவரங்கள் வெளியான நிலையில், ரெய்டு அடித்து கம்பெனிகளை மிரட்டி பாஜவுக்கு நிதி பெற்றது அம்பலமாகி உள்ளது. அதே நேரத்தில், இதே போல் ரெய்டு அடித்துதான் உ.பி., குஜராத்தில் முதலீட்டை குவிப்பதாக மோடி அரசை விமர்சித்து சமூக வலைதளங்களில் செய்திகள் வைரலாக பரவின. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் தொழில் முதலீட்டை பெற கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

ஆனால், குஜராத், உபி போன்ற மாநிலங்களில் மட்டும் அண்மை காலத்தில் அதிக தொழில் முதலீடு சர்வ சாதாரணமாக குவிவதை காண முடிகிறது. ஏற்கனவே பல ஆண்டுகளாக வேறொரு மாநிலத்தில் தொழிற்சாலை அமைத்து இயங்கி வரும் நிறுவனங்கள் கூட தொழிலை விரிவுப்படுத்தி குஜராத், உ.பியில் புதிய ஆலையையை அமைத்து வருகின்றன. இத்தனைக்கும் அந்த மாநிலங்களில், திறமையான தொழிலாளர்கள் அதிகம் கிடையாது. அதே நேரத்தில் படித்தவர்களே கம்மி. அப்படியும் அங்கு முதலீடுகள் தொடர்ந்து குவிவதற்கு காரணம் ரெய்டு அடிப்போம் என்றோ, ரெய்டு அடித்தோ மிரட்டுவதுதான் என்று சமூக வலைதளவாசிகள் விமர்சித்து வருகின்றனர். இந்த 2 மாநிலத்தில் முதலீடு செய்யவில்லை என்றால் இந்தியாவிலேயே தொழில் செய்ய முடியாது என்ற மிரட்டி இருக்கலாம் என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

The post அதிக தேர்தல் பத்திரங்கள் வாங்கிய மார்ட்டின் மியான்மர் கூலித் தொழிலாளி லாட்டரி மன்னனானது எப்படி? வாழ்வு கொடுத்த முதலாளியையே தொழிலை விட்டு விரட்டியவர் appeared first on Dinakaran.

Tags : Martin ,Myanmar ,SBI Bank ,Election Commission ,Future Gaming and Hotel Services Pvt Ltd ,Dinakaran ,
× RELATED தபால் வாக்குப் பதிவு நடைமுறை தொடங்கி...