×

அண்ணன் மகனுக்கு 5 சீட் பீகார் பா.ஜ கூட்டணியில் பிளவு: ஒன்றிய அமைச்சர் பசுபதிகுமார் பராஸ் அதிருப்தி

பாட்னா: பஸ்வான் மகன் சிராக் பஸ்வானுக்கு பீகாரில் 5 சீட் ஒதுக்கியதால் ஒன்றிய அமைச்சர் பசுபதிகுமார் பராஸ் பா.ஜ மீது அதிருப்தி அடைந்துள்ளார். பீகார் மாநிலத்தில் உள்ள 40 எம்பி தொகுதிகளில் பா.ஜவுக்கு 17, நிதிஷ் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் 16, ராம்விலாஸ் பஸ்வான் மகன் சிராக் பஸ்வானுக் 5 சீட், பீகார் முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மஞ்சி கட்சிக்கு ஒரு சீட், முன்னாள் ஒன்றிய அமைச்சர் உபேந்திரா குஷ்வாகா கட்சிக்கு ஒரு சீட் ஒதுக்குவதாக பா.ஜ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியல் இன்னும் இறுதியாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் பஸ்வான் தம்பியும், ஒன்றிய அமைச்சருமான பசுபதிகுமார் பராஸ் அணியினருக்கு ஒரு தொகுதி கூட ஒதுக்கப்படாதது பீகார் பா.ஜ கூட்டணியில் பிரச்னையை உருவாக்கி உள்ளது. பராஸ் அதிருப்தியில் இருப்பதும், அவரது தலைமையிலான ராஷ்ட்ரீய லோக் தளம் கட்சி பீகாரில் பா.ஜ அணியில் இருந்து வெளியேறவும் தயார் என்று பசுபதி குமார் பராஸ் நேற்று தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறும்போது, ​​‘எங்கள் கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது பாஜ வேட்பாளர் பட்டியல் வெளியிடும் முன்பு எங்கள் கட்சியின் 5 எம்பிக்களுக்கு உரிய தொகுதியை ஒதுக்கும்படி பா.ஜ தேசியத் தலைவர் நட்டா, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் வலியுறுத்த முடிவு எடுக்கப்பட்டது.

மேலும் பா.ஜ பட்டியலுக்காக நாங்கள் காத்திருப்போம். பா.ஜ பட்டியல் வெளியிடப்பட்டு, எங்களுக்கு உரிய மரியாதை வழங்கப்படாவிட்டால், எங்கள் கட்சி சுயேச்சையாக முடிவு எடுக்கும். எங்கள் கதவுகள் திறந்துதான் இருக்கிறது. நாங்கள் எங்கும் செல்ல தயாராக இருக்கிறோம். ஆனால் இதுவரை நாங்கள் யாருடனும் பேசவில்லை. நான்கண்டிப்பாக ஹாஜிபூர் தொகுதியில் போட்டியிடுவேன். எங்கள் கட்சியின் தற்போதைய எம்.பி.க்கள் அனைவரும் அந்தந்த தொகுதிகளில் போட்டியிடுவார்கள். இது எங்கள் கட்சியின் முடிவு’ என்றார்.

The post அண்ணன் மகனுக்கு 5 சீட் பீகார் பா.ஜ கூட்டணியில் பிளவு: ஒன்றிய அமைச்சர் பசுபதிகுமார் பராஸ் அதிருப்தி appeared first on Dinakaran.

Tags : Bihar ,BJP ,Union Minister ,Pashupatikumar Paras ,Patna ,Baswan ,Chirag Paswan ,Nitish ,United Janata Dal ,Pashupathikumar Paras ,
× RELATED 14 பசுக்கள், 12 எருமைகளுடன் ஒன்றிய...