முருகப் பெருமானை வணங்குபவர்கள் ஒழுக்க சீலர்களாகவும், தூய்மை காப்பவர்களாகவும் இருப்பர். அவர்கள் முருகப் பெருமானை எழுந்தருளி வைத்து வழிபடும் இடங்களையும் தூய்மை உடையதாக வைத்திருப்பர். மேலும், மிகுந்த நியமங்களைக் கடைபிடிப்பர். முருகப் பெருமானை உபாசிக்க வேண்டும் என்ற அன்புடையவர்கள், போதுமான நியமங்களைக் கடைபிடிக்க இயலாத பொழுது, முருகப் பெருமானின் திருவுருவத்திற்குப் பதிலாக முருகப் பெருமானின் வேலாயுதத்தை வைத்துப் போற்றி வணங்குவது மரபாக வந்துள்ளது. முருகனை வழிபடுவதும் அவனது வேலை வழிபடுவதும் ஒன்றேயாகும். செம்பு, வெள்ளி, பொன் ஆகிய உலோகங்களில் ஏதாவது ஒன்றால் (ஆறு அங்குலத்திற்கும் குறைவான அளவுள்ள) வேலாயுதத்தைச் செய்து, அதனைப் பீடத்தில் நிறுத்தி, திருவாசியிட்டுப் பூஜைக்கு ஏற்க வேண்டும். இந்த வேலுக்கு இயன்றவரை தினமும் அல்லது (செவ்வாய்க்கிழமை, கிருத்திகை, சஷ்டி முதலிய) சிறப்பு நாட்களில் அபிஷேக அலங்காரம் செய்து வழிப வேண்டும்.
சிலர் வேலின் மையத்தில் (முருகன் அதிதேவதையாக விளங்கும் செவ்வாய் கிரகத்திற்கு உரிய கல்லான) சிவப்புக்கல்லைப் பதித்து வழிபடுகின்றனர். சஷ்டி விரதத்தை மேற்கொள்பவர்கள் வேலாயுதத்தை முறையாக வணங்கி வந்தால் சகல நன்மைகளும் கிடைக்கும். வேலாயுதத்திற்குப் பால், தயிர் முதலியவற்றால் அபிஷேகம் செய்து சிவந்த ஆடை மலர்கள் சூட்டி அர்ச்சனை செய்ய வேண்டும். பின்னர், வேலின் புகழைக் கூறும் வேல் வகுப்பு, வேல்லாங்கு வகுப்பு, வேல் அலங்காரம், வேலாயுதசதகம் ஆகியவற்றை இயன்ற வரை பாராயணம் செய்யலாம். தூய தீபம் காட்டி, கல்கண்டு, சர்க்கரை உலர்ந்த பழங்கள் ஆகியவற்றைப் படைத்து தண்டனிட்டு வணங்க வேண்டும். வேலாயுதத்தை வணங்கி வருபவர்களுக்கு அகப்புறப் பகைகள் நீங்கி இனிமையான வாழ்வுகிட்டும் என்பது அசைக்க முடியாத உண்மையாகும்.
வேலாயுதத்தினை தீமைகள் எதுவும் அண்டாது. அதற்குத் தீட்டுப்படுதல் என்பதும் இல்லை. அன்பர்களின் குற்றங்களைப் பொறுத்து குணங்களை மட்டும் ஏற்று அருள்பாலிப்பது. எனவே முருகனடியார்கள் வேல் பூஜையை விரும்பி ஏற்றுக் கொள்கின்றனர். முருகனடியார்களின் பலர் வேலாயுதத்தை கையில் வைத்துக் கொண்டு அருள்வாக்கு சொல்லி அன்பர்களின் குறைகளை தீர்ப்பது வழக்கமாகும். அந்தக் கைவேலுக்கு சிறப்பு நாட்களில் அபிஷேக ஆராதனை செய்து வழிபடுவர்.வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் வேல் பூஜையை சிறப்புடன் செய்து வந்த அருளாளர். வேலை வழிபடுவதால் ஞானம் உண்டாகும், செல்வம் பெருகும், திருமகள் அருள் கிட்டும், பகைவர்கள் அஞ்சி ஓடுவர், பில்லி சூன்யம் முதலியன விலகும். நினைத்ததை நடத்தி வைக்கும். கவலைகளை ஒழித்து மனத்தை இன்பத்தில் நிலை நிறுத்தும். வீண்பழிகள் அணுகாது என்று சுவாமிகள் உறுதிபட வேல் அலங்காரம், வேற்பதிகம் முதலான நூல்களில் குறித்துள்ளார். ‘‘முருகன்கை வேற்படை ஒன்றை மட்டும் நட்டார்கள் உய்ந்தகதை கோடியுண்டு இந்த நானிலத்தே என்று அவர் பாடியிருப்பது வேல் வழிபாட்டின் மேன்மையை விளக்குவதாக உள்ளது.
The post இல்லங்களில் இனிய வேல் பூஜை appeared first on Dinakaran.