×
Saravana Stores

தெலங்கானாவில் 2 நாட்கள் நடந்தது பெண் தாசில்தார் வீட்டில் ரூ.20 கோடி மதிப்பு சொத்துக்கள் பறிமுதல்: லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

திருமலை: தெலங்கானாவில் பெண் தாசில்தார் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் 2 நாட்கள் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.20 கோடி மதிப்பு சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பெண் தாசில்தார் கைது செய்யப்பட்டார். தெலங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டம் ஜம்மிகுண்டா தாசில்தார் ரஜினி. கடந்த இரண்டு நாட்களாக ஐதராபாத்தில் இருந்து சென்ற லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஹனுமகொண்டா கே.எல்.நகர் காலனியில் உள்ள ரஜினியின் வீடு மற்றும் உறவினர்கள் வீடுகள், நெருங்கிய நண்பர்கள் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.

சோதனைக்கு பிறகு ஜம்மிகுண்டா தாசில்தார் ரஜினியின் சொத்துகள் சந்தை மதிப்பின்படி ரூ.20 கோடிக்கு மேல் உள்ளதாக ஏசிபி அதிகாரிகள் தெரிவித்தனர். இதில், 22 குடியிருப்புகள், 7 ஏக்கர் விவசாய நிலம், கிலோ கணக்கில் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் சோதனையில் சிக்கியது. அனைத்து சொத்துகளும் கைப்பற்றப்பட்டன. பினாமி பெயர்களில் அதிகளவில் சொத்துக்கள் வாங்கி குவிக்கப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சொத்துகளை வாங்கியது மட்டுமல்லாமல் மேலும் வாங்க அட்வான்ஸ் கொடுத்த சொத்துக்களையும் ஏசிபி அதிகாரிகள் கணக்கிட்டு அதனை கண்டுபிடித்தனர். மேலும் 2 கார்கள், 3 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது. வங்கியில் ரூ.25 லட்சம் மற்றும் ஒன்றரை கிலோ தங்க நகைகள் சிக்கியது. இதனையடுத்து, ஜம்மிகுண்டா தாசில்தார் ரஜினியை கைது செய்த ஏசிபி அதிகாரிகள் நேற்று கரீம்நகர் ஏசிபி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தாசில்தார் ரஜினியின் சட்ட விரோத செயல்கள் குறித்து விசாரணை தொடரும் என ஏசிபி அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

The post தெலங்கானாவில் 2 நாட்கள் நடந்தது பெண் தாசில்தார் வீட்டில் ரூ.20 கோடி மதிப்பு சொத்துக்கள் பறிமுதல்: லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி appeared first on Dinakaran.

Tags : Telangana ,Thirumalai ,Rajini ,Jammikunda Tahsildar ,Karimnagar District, Telangana State ,Tahsildar ,Dinakaran ,
× RELATED மோமோஸ், ஷவர்மாவை தொடர்ந்து மயோனைஸ் பயன்படுத்த தடை: தெலங்கானா அரசு உத்தரவு