×

ஒரே மேடையில் பாஜ கூட்டணி தலைவர்கள் தமாகா இப்தார் நோன்பு திறப்பு

சென்னை: தமாகா நடத்திய இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில், முதன்முறையாக ஒரே மேடையில் பாஜ கூட்டணி தலைவர்கள் இடம்பெற்றிருந்தனர். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி எழும்பூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று நடந்தது. தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தலைமை வகித்தார்.

இதில், தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், காமராஜர் மக்கள் கட்சி தலைவர் தமிழருவி மணியன், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவி பச்சமுத்து, இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் பிரசிடெண்ட் அபுபக்கர், பாஜ மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் எம்எல்ஏ முன்னிலை வகித்தனர்.

மேலும், தமாகா பொதுச் செயலாளர்கள் விடியல் சேகர், சக்திவடிவேல், ஜவஹர்பாபு, ராஜம் எம்.பி.நாதன், தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ், சிறுபான்மை அணி தலைவர் அப்பாஸ், மாநில செயலாளர் என்.டி.எஸ்.சார்லஸ், மாவட்ட தலைவர்கள் சைதை மனோகரன், பிஜூ சாக்கோ, ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், ஜி.கே.வாசன் பேசுகையில், ‘‘இஸ்லாமிய மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் கட்சியின் தலைவர்கள் இங்கே உள்ளார்கள்.

சாதி, மதம், மொழிக்கு அப்பாற்பட்டு மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் ஒரே நபர் பிரதமர் மோடி. அவர் 3வது முறையாக வெற்றிபெற வேண்டும். நல்லரசாக உள்ள இந்தியாவை வல்லரசாக்கும் ஆளுமை அவருக்கு உண்டு. எனவே, தமிழகத்தில் உள்ள இஸ்லாமிய மக்கள் ஒன்றுபட்டு மீண்டும் பிரதமர் மோடி வெற்றி பெற உழைப்போம்’’ என்றார். தமிழகத்தில் பாஜ கூட்டணியில் முதன்முதலாக இணைந்த கட்சி தமாகா.

பிரதமர் மோடி தமிழகம் வருகையின் போது கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வந்ததால் பல தலைவர்கள் பொதுக்கூட்ட மேடையில் இடம்பெறவில்லை. தற்போது பாஜ கூட்டணியில் ஓபிஎஸ், டிடிவி.தினகரன் ஆகியோர் இணைந்துள்ளனர். இந்நிலையில் இந்த கூட்டணி கட்சி தலைவர்கள் முதன்முதலாக தமாகா நடத்திய இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் ஒரே மேடையில் தோன்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post ஒரே மேடையில் பாஜ கூட்டணி தலைவர்கள் தமாகா இப்தார் நோன்பு திறப்பு appeared first on Dinakaran.

Tags : BJP alliance ,Tamaka ,Iftar ,CHENNAI ,Tamil State Congress Party ,Iftar breaking ,Egmore ,BJP ,Tamaka Iftar ,Dinakaran ,
× RELATED கோடைகாலம் முடிவதற்குள் ஏரி, குளம்,...