×

மாணவர்கள் அமைப்பினர் தீவிரம் குடியுரிமை சட்ட நகல்களை எரித்து அசாமில் போராட்டம்

கவுகாத்தி: அசாமில் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்பட்டதை கண்டித்து, மாணவர் அமைப்பினர் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சட்ட நகல்களை எரித்து அவர்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத துன்புறுத்தலால் இந்தியாவுக்கு வரும் முஸ்லிம் அல்லாதோருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை திருத்த சட்டத்தை (சிஏஏ) ஒன்றிய அரசு அமல்படுத்தி இருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 3வது நாளாக அசாமில் மாணவர் அமைப்பினர் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கவுகாத்தி உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் வடகிழக்கு மாணவர்கள் அமைப்பினர் சிஏஏ சட்ட நகல்களை எரித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். சிவசாகர் பகுதியில் தடையை மீறி பேரணி சென்ற கிருஷ்க் முக்தி சங்க்ராம் சமிதி அமைப்பினரை போலீசார் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அனைத்து அசாம் மாணவர் சங்கத்தினர் மாநிலத்தின் அனைத்து மாவட்ட தலைமை அலுவலகத்திலும் நேற்று ஒருநாள் சத்யாகிரக போராட்டம் நடத்தினர். பல்வேறு கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் சிஏஏ சட்டத்தின் பாதிப்பை சக மாணவர்களிடம் விளக்கி, சட்டத்தை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டுமென கோஷமிட்டனர்.

அசாம் மாநில காங்கிரஸ் தலைவர் பூபேன் குமார் போரா நேற்று அளித்த பேட்டியில், ‘‘சிஏஏ சட்டத்தால் வங்கதேசத்தில் இருந்து அசாமில் சட்டவிரோதமாக குடியேறிய இந்துக்களுக்கு குடியுரிமை வழங்கப்படும். இதனால் இங்குள்ளவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். இப்பிரச்னையை மாநிலம் நீண்டகாலமாக சந்திக்கிறது. 2016 சட்டப்பேரவை தேர்தலின்போது, சட்டவிரோதமாக குடியேறியவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என வாக்குறுதி தந்த பாஜ இப்போது வாக்கு வங்கி அரசியலுக்காக பல்டி அடித்துள்ளது’’ என்றார். அசாமில் போராட்டங்கள் தீவிரமாக நடந்து வருவதால் மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

* ‘மோசமான வாக்கு வங்கி அரசியல்’
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘‘சிஏஏ சட்டம் தேசிய குடிமக்கள் பதிவேட்டுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது. சிஏஏவில் குடியுரிமை கேட்டு விண்ணப்பிப்பவர்கள் சட்டவிரோதமாக குடியேறிகளாக அடையாளப்படுத்தப்பட்டு முகாம்களுக்கு மாற்றப்பட வாய்ப்புள்ளது. அதை மேற்கு வங்கத்தில் நடக்க விடமாட்டேன். அசாம் போல இங்கு தடுப்பு முகாம்களை கட்ட திரிணாமுல் காங்கிரஸ் ஒருபோதும் அனுமதிக்காது’’ என்றார்.

* டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கூறுகையில், ‘‘மக்களவை தேர்தலை ஒட்டி சிஏஏ அமல்படுத்தி மோசமான வாக்கு வங்கி அரசியலில் பாஜ ஈடுபடுகிறது. இந்த சட்டம் வாபஸ் பெற வேண்டுமென்பதே மக்கள் விருப்பம்’’ என்றார். சிஏஏ சட்டம் கொண்டு வந்த பாஜவுக்கு மக்கள் தங்கள் வாக்கு மூலம் பதிலடி தர வேண்டுமென காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி கூறி உள்ளார். இதற்கிடையே சிஏஏ தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர்கள் பொய்களை பரப்புவதை நிறுத்த வேண்டுமென பாஜ தலைவர் ரவிசங்கர் பிரசாத் கூறி உள்ளார்.

The post மாணவர்கள் அமைப்பினர் தீவிரம் குடியுரிமை சட்ட நகல்களை எரித்து அசாமில் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Assam ,Guwahati ,Muslims ,India ,Pakistan ,Bangladesh ,Afghanistan ,
× RELATED ரேஷன் கார்டுக்கு ரூ.10 ஆயிரம் தருவதாக...